ஒல்லைஆறி உள்ளமொன்றிக் கள்ளம் ஒழிந் துவெய்ய
சொல்லைஆறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே யுன்றன் நாமம் நாவில்நவின் ஏத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலம்மே யவனே.
|
1
|
இயங்குகின்ற இரவி திங்கள் மற்றுநல் தேவரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதீ சாமவேதா காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவலமே யவனே.
|
2
|
பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப்பெருங் கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனைநோய் நலியக்
கண்டுகண்டே யுன்றன் நாமம் காதலிக்கின்ற துள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவலமே யவனே.
|
3
|
மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, வேதனையைத் துறந்து, செய்யர் ஆனார் சிந்தையானே! தேவர் குலக்கொழுந்தே! நைவன், நாயேன்; உன்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்; வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!
|
4
|
துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன், உன் திறமே; தஞ்சம் இல்லாத் தேவர் வந்து, உன் தாள் இணைக்கீழ்ப் பணிய, நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ? நாளும் நினைந்து, அடியேன், வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!
|
5
|
| Go to top |
புரிசடையாய்! புண்ணியனே! நண்ணலார் மூஎயிலும் எரிய எய்தாய்! எம்பெருமான்! என்று இமையோர் பரவும் கரி உரியாய்! காலகாலா! நீலமணி மிடற்று வரி அரவா! வந்து நல்காய் வலிவலம் மேயவனே!
|
6
|
தாயும் நீயே! தந்தை நீயே! சங்கரனே! அடியேன் ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது, உள்ளம்; ஆயம் ஆய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்; மாயமே என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!
|
7
|
நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடைய பொன்மலையை வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத் தேரொடும் போய் வீழ்ந்து அலற, திருவிரலால் அடர்த்த வார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே!
|
8
|
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய சோதியானே! நீதி இல்லேன் சொல்லுவன், நின் திறமே; ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம் வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!
|
9
|
பொதியிலானே! பூவணத்தாய்! பொன் திகழும் கயிலைப் பதியிலானே! பத்தர் சித்தம் பற்று விடாதவனே! விதி இலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்று இவர்கள் மதி இலாதார் என் செய்வாரோ? வலிவலம் மேயவனே!
|
10
|
| Go to top |
வன்னி, கொன்றை, மத்தம், சூடும் வலிவலம் மேயவனைப் பொன்னி நாடன்-புகலி வேந்தன், ஞானசம்பந்தன்-சொன்ன பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும் மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே.
|
11
|