வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி சடைமேல் வரி அரவம்
கண்டு இரைக்கும் பிறைச் சென்னிக் காபாலி கனை கழல்கள்
தொண்டு இரைத்துத் தொழுது இறைஞ்ச, துளங்கு ஒளி நீர்ச் சுடர்ப் பவளம்
தெண்திரை(க்)கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக் குடியாரே.
|
1
|
பாய் திமிலர் வலையோடு மீன் வாரிப் பயின்று எங்கும்
காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழிக் கானல்
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து, அழகு ஆர்
தீ-எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே.
|
2
|
தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால்
பாத்திரமா ஆட்டுதலும், பரஞ்சோதி பரிந்து அருளி
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த,
தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே.
|
3
|
கலவம் சேர் கழிக் கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும்
அலவன் சேர் அணை வாரிக் கொணர்ந்து எறியும் அகன் துறைவாய்
நிலவு அம் சேர் நுண் இடைய நேரிழையாள் அவளோடும்
திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டக்குடியாரே.
|
4
|
பங்கம் ஆர் கடல் அலற, பருவரையோடு அரவு உழல,
செங்கண் மால் கடைய, எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி;
அங்கம் நால்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த
திங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே.
|
5
|
Go to top |
நாவாய பிறைச் சென்னி, நலம் திகழும் இலங்கு இப்பி,
கோவாத நித்திலங்கள், கொணர்ந்து எறியும் குளிர்கானல்
ஏ ஆரும் வெஞ்சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த
தேவாதி தேவனார் திரு வேட்டக்குடியாரே.
|
6
|
பால் நிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்கு
கான் நிலவு மலர்ப் பொய்கைக் கைதல் சூழ் கழிக் கானல்
மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார்
தேன் நிலவு மலர்ச்சோலைத் திரு வேட்டக்குடியாரே.
|
7
|
துறை உலவு கடல் ஓதம் சுரிசங்கம் இடறிப் போய்,
நறை உலவும் பொழில் புன்னை நன்நீழல் கீழ் அமரும்
இறை பயிலும் இராவணன் தன் தலை பத்தும் இருபது தோள
திறல் அழிய அடர்த்தாரும் திரு வேட்டக்குடியாரே.
|
8
|
அருமறை நான் முகத்தானும், அகலிடம் நீர் ஏற்றானும்,
இருவரும் ஆய் அளப்பு அரிய எரி உரு ஆய் நீண்ட பிரான்;
வருபுனலின் மணி உந்தி மறிதிரை ஆர் சுடர்ப் பவளத்-
திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே.
|
9
|
இகழ்ந்து உரைக்கும் சமணர்களும், இடும் போர்வைச் சாக்கியரும்,
புகழ்ந்து உரையாப் பாவிகள் சொல் கொள்ளேன்மின், பொருள் என்ன!
நிகழ்ந்து இலங்கு வெண்மணலின் நிறைத் துண்டப்
பிறைக்கற்றை
திகழ்ந்து இலங்கு செஞ்சடையார் திரு வேட்டக்குடியாரே.
|
10
|
Go to top |
தெண்திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை,
தண்டலை சூழ் கலிக் காழித் தமிழ் ஞானசம்பந்தன்
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார், போய்,
உண்டு உடுப்பு இல் வானவரோடு, உயர்வானத்து
இருப்பாரே.
|
11
|