சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி,
அங்கம் உடல்மேல் உற அணிந்து, பிணி தீர அருள் செய்யும்
எங்கள் பெருமான் இடம் எனத் தகும் முனைக் கடலின் முத்தம்,
துங்க மணி, இப்பிகள், கரைக்கு வரு தோணிபுரம் ஆமே.
|
1
|
சல்லரி(யி), யாழ், முழவம், மொந்தை, குழல், தாளம் அது, இயம்ப,
கல் அரிய மாமலையர் பாவை ஒருபாகம் நிலைசெய்து,
அல் எரி கை ஏந்தி, நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர்
சொல்ல(அ)ரிய தொண்டர் துதிசெய்ய, வளர் தோணிபுரம் ஆமே.
|
2
|
வண்டு அரவு கொன்றை வளர் புன்சடையின் மேல் மதியம் வைத்து
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி; பழி தீரக்
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள்; ஊர்
தொண்டர் அவர் மிண்டி, வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே.
|
3
|
கொல்லை விடை ஏறு உடைய கோவணவன், நா அணவும் மாலை
ஒல்லை உடையான், அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்த
வில்லை உடையான், மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர்
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து, அருள் செய்
தோணிபுரம் ஆமே.
|
4
|
தேயும் மதியம் சடை இலங்கிட, விலங்கல் மலி கானில்
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன்;
நினைப்பார்
தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர்; நன்மையொடு வாழ்வு
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே.
|
5
|
Go to top |
பற்றலர் தம் முப்புரம் எரித்து, அடி பணிந்தவர்கள் மேலைக்
குற்றம் அது ஒழித்து, அருளு கொள்கையினன்; வெள்ளில் முதுகானில்
பற்றவன்; இசைக்கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும்
துற்ற சடை அத்தன்; உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே.
|
6
|
பண் அமரும் நால்மறையர், நூல் முறை பயின்ற திருமார்பில்
பெண் அமரும் மேனியினர், தம் பெருமை பேசும் அடியார் மெய்த்
திண் அமரும் வல்வினைகள் தீர அருள் செய்தல் உடையான், ஊர்
துண்ணென விரும்பு சரியைத்தொழிலர் தோணிபுரம் ஆ.மே.
|
7
|
தென்திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து
வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர்
ஒன்று இசை இயல் கிளவி பாட, மயில் ஆட, வளர் சோலை
துன்று செய வண்டு, மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே. |
8
|
நாற்றம் மிகு மா மலரின்மேல் அயனும், நாரணனும், நாடி
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம், எரி ஆகி,
ஊற்றம் மிகு கீழ் உலகும் மேல் உலகும் ஓங்கி எழு தன்மைத்
தோற்றம் மிக, நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே.
|
9
|
மூடு துவர் ஆடையினர், வேடம் நிலை காட்டும் அமண் ஆதர்
கேடுபல சொல்லிடுவர்; அம் மொழி கெடுத்து, அடைவினான், அக்
காடு பதி ஆக நடம் ஆடி, மடமாதொடு இரு காதில்-
தோடு குழை பெய்தவர் தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே.
|
10
|
Go to top |
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல்மாலை,
தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள், தடுமாற்றம்
வஞ்சம் இலர்; நெஞ்சு இருளும் நீங்கி, அருள் பெற்று வளர்வாரே.
|
11
|