மாமிசமும் சதையும் கூடிய இந்த உடல் தன்னுடன் ஒன்பது துவாரங்கள் சேர்ந்துவரும் கருவின் வழி ஒரு கோடிக் கணக்கானது. (அந்தப் பிறவித் துயரம் ஒழிய) நான் படிக்கின்ற சாத்திர நூல்களையும், இசை ஞானத்தையும் மற்ற எல்லா கற்கவேண்டியவையும் யான் உணரும்படியாக உன்னுடைய திருவருளைத் துதித்துப் பாடி, யான் உன்னுடைய திருவடிகளை விரும்பிப் போற்றும்படி காலை மாலை இரண்டு வேளைகளிலும் உன் கருணைத்திறத்தில் ஞாபகம் வைத்து, உன் திருநாமங்களைப் போற்றுவோரின் பாதங்களைத் தொழ இனியேனும் யான் விரும்பும்வண்ணம் நீ திருவருள் புரிவாயாக. காட்டிலும் கூட தன் கதிர்களை வீசும் சூரியனும், சந்திரனும், இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலங்களும், காற்றும், மேகமும், கடலும், மலையும், நீரும் - இவைகளையெல்லாம் படைத்த கைலாயநாதனாகிய சிவபிரானின் பாதங்களைப் பணியும் தேவர்களும், தேவநாட்டு இந்திரன், தெடிய திருமால், பிரமன் ஆகியோரும் வாழும்படியாகச் செலுத்திய கூரிய வேலாயுதனே, பல மாயங்களைப் புரிந்த சூரன் தூள்பட்டு அழியும்படி வாள் கொண்டு போர்புரிந்த பெருமாளே.