நடை உடையிலே அருக்கி நெடிய தெரு வீதியிற்குள் நயனம் அதனால் மருட்டி வருவாரை
நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று லளிதம் உடனே பசப்பி உறவாடி
வடிவு அதிக வீடு புக்கு மலர் அணையின் மீது இருத்தி
மதனன் உடை ஆகமத்தின் அடைவாக மருவி உ(ள்)ளமே உருக்கி நிதியம் உளதே பறிக்கும் வனிதையர்கள் ஆசை பற்றி உழல்வேனோ
இடையர் மனை தோறு(ம்) நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க இரு கை உறவே பிடித்து உரலோடே இறுகிட அசோதை கட்ட அழுதிடு கொ(கோ)பால க்ருஷ்ணன் இயல் மருகனே குறத்தி மணவாளா
அடல் எழுதும் ஏடு மெத்த வரு புனலில் ஏற விட்டு அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா
அவுணர் குலம் வேர் அறுத்து அபயம் என ஓலம் இட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே.
நடையாலும், அணிந்த உடையாலும் தமது அருமையைக் காட்டி நீண்ட ஒரு தெரு வீதியிலே உலாவி, வரும் ஆடவர்களைக் கண்களால் மயக்கி, அவர்களை அணுகி காம ஆசையை மூட்டி, மார்பகங்களை விலை பேசி விற்று, நைச்சியமான வழியில் இன்முகம் காட்டி நடித்து, பலவிதமான உறவுமுறைகளைக் கூறிக் கொண்டாடி, அழகு மிக்க வீட்டுக்கு அழைத்துச் சென்று, மலர்ப் படுக்கையில் இருக்கச் செய்து, மன்மதனுடைய சாஸ்திரத்தின் முறைப்படி பொருந்திக் கலந்து, உள்ளத்தை உருக்கி, கையில் உள்ள பொருளைக் கவரும் விலைமாதர்களின் மீது காம ஆசை பிடித்து நான் திரியலாமோ? இடையர்கள் வீட்டில் நாள் தோறும் உறியில் உள்ள தயிரும், நெய்யும், பாலும் குடிக்க, (தண்டிப்பதற்காக கண்ணனுடைய) இரண்டு கைகளையும் பிடித்து உரலுடன் சேர்த்து யசோதை அழுத்தமாகக் கட்ட, அப்போது அழுத கோபாலக்ருஷ்ணனின் மிகுந்த அன்புக்கு உரிய மருகனே, குறப் பெண் வள்ளியின் மணவாளனே, வலிமை மிக்க (மந்திர மொழி) எழுதப்பட்ட ஏட்டினை பெருகி ஓடுகின்ற (வைகை நதியின்) நீரில் எதிர் ஏறச் செய்து, அருமை மிக்க தமிழ்ப் பாசுரத்தால் (சமணரை) வாதத்தில் (சம்பந்தராக வந்து) வெற்றி கொண்ட வேலனே, அசுரர் குலத்தை வேரோடு அறுத்து ஒழித்து, அடைக்கலம் என்று ஓலம் இட்ட தேவர்களைச் சிறையினின்றும் மீட்டுவித்த பெருமாளே.
நடை உடையிலே அருக்கி நெடிய தெரு வீதியிற்குள் நயனம் அதனால் மருட்டி வருவாரை ... நடையாலும், அணிந்த உடையாலும் தமது அருமையைக் காட்டி நீண்ட ஒரு தெரு வீதியிலே உலாவி, வரும் ஆடவர்களைக் கண்களால் மயக்கி, நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று லளிதம் உடனே பசப்பி உறவாடி ... அவர்களை அணுகி காம ஆசையை மூட்டி, மார்பகங்களை விலை பேசி விற்று, நைச்சியமான வழியில் இன்முகம் காட்டி நடித்து, பலவிதமான உறவுமுறைகளைக் கூறிக் கொண்டாடி, வடிவு அதிக வீடு புக்கு மலர் அணையின் மீது இருத்தி ... அழகு மிக்க வீட்டுக்கு அழைத்துச் சென்று, மலர்ப் படுக்கையில் இருக்கச் செய்து, மதனன் உடை ஆகமத்தின் அடைவாக மருவி உ(ள்)ளமே உருக்கி நிதியம் உளதே பறிக்கும் வனிதையர்கள் ஆசை பற்றி உழல்வேனோ ... மன்மதனுடைய சாஸ்திரத்தின் முறைப்படி பொருந்திக் கலந்து, உள்ளத்தை உருக்கி, கையில் உள்ள பொருளைக் கவரும் விலைமாதர்களின் மீது காம ஆசை பிடித்து நான் திரியலாமோ? இடையர் மனை தோறு(ம்) நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க இரு கை உறவே பிடித்து உரலோடே இறுகிட அசோதை கட்ட அழுதிடு கொ(கோ)பால க்ருஷ்ணன் இயல் மருகனே குறத்தி மணவாளா ... இடையர்கள் வீட்டில் நாள் தோறும் உறியில் உள்ள தயிரும், நெய்யும், பாலும் குடிக்க, (தண்டிப்பதற்காக கண்ணனுடைய) இரண்டு கைகளையும் பிடித்து உரலுடன் சேர்த்து யசோதை அழுத்தமாகக் கட்ட, அப்போது அழுத கோபாலக்ருஷ்ணனின் மிகுந்த அன்புக்கு உரிய மருகனே, குறப் பெண் வள்ளியின் மணவாளனே, அடல் எழுதும் ஏடு மெத்த வரு புனலில் ஏற விட்டு அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா ... வலிமை மிக்க (மந்திர மொழி) எழுதப்பட்ட ஏட்டினை பெருகி ஓடுகின்ற (வைகை நதியின்) நீரில் எதிர் ஏறச் செய்து, அருமை மிக்க தமிழ்ப் பாசுரத்தால் (சமணரை) வாதத்தில் (சம்பந்தராக வந்து) வெற்றி கொண்ட வேலனே, அவுணர் குலம் வேர் அறுத்து அபயம் என ஓலம் இட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே. ... அசுரர் குலத்தை வேரோடு அறுத்து ஒழித்து, அடைக்கலம் என்று ஓலம் இட்ட தேவர்களைச் சிறையினின்றும் மீட்டுவித்த பெருமாளே.