செட்டாகத் தேனைப் போலச் சீரைத் தேடித் திட்பம் அதாக
திக்காமல் பாடு உற்றாரில் சீர் உற்றாருக்குச் சில பாடல்
பெட்டாகக் கூறிப் போதத்தாரைப் போல் வப்புற்று உழலாதே
பெற்றாரில் சார்வுற்றாய் நல் தாள் சற்று ஓதப் பெற்றிடுவேனோ
எட்டா(து) நெட்டாகத் தோகைக்கே புக்கு ஓலத்திட்டு இமையோர்
வானில் பாரில் சூழச் சூரைத் தான் எட்டா வெட்டிப் பொரும் வேலா
முட்டாமல் தாளைச் சேவிப்பார் முன் பாவத்தைக் களைவோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.
பொறுக்கி எடுத்தாற் போல் சிக்கனமாக, தேன்போல் இனிக்கும் சிறப்புள்ள சொற்களையும், கருத்தையும் நாடி, திண்மையான வாக்கினால் தங்கு தடை இல்லாமல் பாடுதலைக் கொண்டவர்கள் போல, நானும் செல்வம் படைத்தவர்களிடம் சென்று சில பாடல்களை மயக்கம் வல்ல பொய்யான மொழியில் பாடி, ஞான அறிவு கொண்டவர்களைப் போல பாவனை செய்து வீணாகக் காலத்தைப் போக்கித் திரியாமல், என்னைப் பெற்ற தாய் தந்தையரைப் போல அன்பு காட்டித் துணை நிற்பவனே, உனது நல்ல திருவடிளைச் சிறிதளவாவது போற்றும் பாக்கியத்தைப் பெறுவேனோ? நீண்ட பெருமையுடன் விளங்கும் மயில் மீது பாய்ந்து ஏறி, எங்களைக் காத்தருள்க, அபயம் என்று கூச்சலிட்டு, தேவர்கள் விண்ணிலும், பூமியிலும் உன்னைச் சூழ்ந்து நிற்க, சூரனை அணுகி அவனை வெட்டிச் சண்டை செய்யும் வேலனே, தங்கள் வழிபாட்டில் தடை இன்றி உனது திருவடியைச் சேவிப்பவர்களின் முந்தைய தீவினையை நீக்கி அருள்பவனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.
செட்டாகத் தேனைப் போலச் சீரைத் தேடித் திட்பம் அதாக ... பொறுக்கி எடுத்தாற் போல் சிக்கனமாக, தேன்போல் இனிக்கும் சிறப்புள்ள சொற்களையும், கருத்தையும் நாடி, திண்மையான வாக்கினால் திக்காமல் பாடு உற்றாரில் சீர் உற்றாருக்குச் சில பாடல் ... தங்கு தடை இல்லாமல் பாடுதலைக் கொண்டவர்கள் போல, நானும் செல்வம் படைத்தவர்களிடம் சென்று சில பாடல்களை பெட்டாகக் கூறிப் போதத்தாரைப் போல் வப்புற்று உழலாதே ... மயக்கம் வல்ல பொய்யான மொழியில் பாடி, ஞான அறிவு கொண்டவர்களைப் போல பாவனை செய்து வீணாகக் காலத்தைப் போக்கித் திரியாமல், பெற்றாரில் சார்வுற்றாய் நல் தாள் சற்று ஓதப் பெற்றிடுவேனோ ... என்னைப் பெற்ற தாய் தந்தையரைப் போல அன்பு காட்டித் துணை நிற்பவனே, உனது நல்ல திருவடிளைச் சிறிதளவாவது போற்றும் பாக்கியத்தைப் பெறுவேனோ? எட்டா(து) நெட்டாகத் தோகைக்கே புக்கு ஓலத்திட்டு இமையோர் ... நீண்ட பெருமையுடன் விளங்கும் மயில் மீது பாய்ந்து ஏறி, எங்களைக் காத்தருள்க, அபயம் என்று கூச்சலிட்டு, தேவர்கள் வானில் பாரில் சூழச் சூரைத் தான் எட்டா வெட்டிப் பொரும் வேலா ... விண்ணிலும், பூமியிலும் உன்னைச் சூழ்ந்து நிற்க, சூரனை அணுகி அவனை வெட்டிச் சண்டை செய்யும் வேலனே, முட்டாமல் தாளைச் சேவிப்பார் முன் பாவத்தைக் களைவோனே ... தங்கள் வழிபாட்டில் தடை இன்றி உனது திருவடியைச் சேவிப்பவர்களின் முந்தைய தீவினையை நீக்கி அருள்பவனே, முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ... முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.