ஒக்க வண்டு எழு கொண்டை குலைந்திட
வெற்பு எனும் கன கொங்கை குழைந்திட
உற்பலங்கள் சிவந்து குவிந்திட இந்த்ர கோபம் ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர
மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு ஒக்க மென் தொனி வந்து பிறந்திட
அன்பு கூர மிக்க சந்திரன் ஒன்று நிலங்களில் விக்ரமம் செய்து இலங்கு நகம் பட
மெத்த மென் பொருள் அன்பு அளவும் துவள் இன்ப மாதர் வித்தகம் தரு விந்து த(ப்)பும் குழி பட்டு அழிந்து நலங்கு குரம்பையை விட்டு அகன்று நின் அம்புயம் மென் பதம் என்று சேர்வேன்
மைக் கருங் கடல் அன்று எரி மண்டிட மெய் க்ரவுஞ்ச சிலம்பு உடல் வெம்பிட மற்று நன் பதி குன்றி அழிந்திட உம்பர் நாடன் வச்சிரம் கை அணிந்து பதம் பெற
மெச்சு குஞ்சரி கொங்கை புயம் பெற மத்த வெம்சின வஞ்சகர் தங்களை நுங்கும் வேலா
குக்குடம் கொடி கொண்ட பரம்பர சக்ர மண்டலம் எண் திசையும் புகழ் கொட்க கொன்றை அணிந்த சிரம் சரண் அங்கிகாரா
கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய கொற்றம் அம் குற மங்கை விரும்பிய தம்பிரானே.
ஒன்று கூடி வண்டுகள் எழுந்து மொய்க்கும் கூந்தல் கலைய, மலை போன்ற பருத்த மார்பகங்கள் குழைதல் அடைய, நீலோற்பலம் போன்ற கண்கள் சிவந்து குவிய, தம்பலப்பூச்சி போன்று சிவந்த கொவ்வைக் கனியை ஒத்த வாயிதழ் துவட்சி உற்று அமுத ஊறலைத் தர, மெச்சும்படியான வண்டு, கரிய குயில், மெல்லிய புறா இவைகளின் ஒலிக்கு நிகரான மென்மையான புட்குரல் கண்டத்தில் தோன்றி எழ, அன்பு மிக்கெழ நன்றாகப் பிரகாசிக்கும் சந்திர காந்தக் கல் வேய்ந்துள்ள தளத்தில், பல வீரச் செயல்களை நிகழ்த்தி விளங்கும் நகரேகை படும்படி பக்குவமாக நல்ல பொருள் கிடைத்த அளவுக்குத் தகுந்த அன்பைத் தந்து கூடும் சிற்றின்ப மாதர்களின் சாமர்த்தியம் தருகின்ற சுக்கிலத்துக்குக் அழிவு உண்டாக்கும் பெண்குறிக்குள் விழுந்து அழிந்து நொந்து போகும் சிறு குடிலாகிய இவ்வுடலை விட்டு நீங்கி, உன்னுடைய தாமரை போன்ற மென்மை வாய்ந்த திருவடியை என்று கூடுவேன்? மிகக் கரிய கடல் அன்று தீப்பட்டு எரிய, அசுர உணர்ச்சி கொண்டிருந்த கிரவுஞ்ச மலையின் உடலம் நெருப்பிலே அழிய, மேலும் (சூரனுடைய) சிறப்பான நகரமாகிய மகேந்திரபட்டணம் வளம் குறைந்து பாழ்பட, தேவர் நாட்டு அரசனான இந்திரன் குலிஜாயுதத்தைக் கையில் தரித்த பதவியில் வாழ்வு பெற, வியக்கத்தக்க தேவயானையின் மார்பகங்கள் உனது திருப்புயம் பெற, செருக்கையும் கொடிய கோபத்தையும் கொண்ட வஞ்சக அசுரர்களைக் கொன்று விழுங்கிய வேலைக் கையில் தாங்கியவனே, சேவற்கொடியை கையில் ஏந்திய பராபர மூர்த்தியே, சக்ரவாளகிரியால் சூழப்பட்ட இடங்களிலும், எட்டுத் திசையில் உள்ளவர்களும் உனது புகழை வெளிப்படுத்த, கொன்றை மலரைத் தரித்த (தந்தையாகிய) சிவபெருமானின் சிரத்தினை உனது திருவடியில் ஏற்றுக் கொண்டவனே, பூக்கொத்துகள் அவிழும் கடப்ப மலரில் நிலைத்துள்ள சிறந்த கடவுளே, கங்கணம் அணிந்த திருப்புயங்களை உடையவனே, வெற்றியையும் அழகையும் கொண்ட குற மங்கையாகிய வள்ளி நாயகி விரும்பும் தம்பிரானே.
ஒக்க வண்டு எழு கொண்டை குலைந்திட ... ஒன்று கூடி வண்டுகள் எழுந்து மொய்க்கும் கூந்தல் கலைய, வெற்பு எனும் கன கொங்கை குழைந்திட ... மலை போன்ற பருத்த மார்பகங்கள் குழைதல் அடைய, உற்பலங்கள் சிவந்து குவிந்திட இந்த்ர கோபம் ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர ... நீலோற்பலம் போன்ற கண்கள் சிவந்து குவிய, தம்பலப்பூச்சி போன்று சிவந்த கொவ்வைக் கனியை ஒத்த வாயிதழ் துவட்சி உற்று அமுத ஊறலைத் தர, மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு ஒக்க மென் தொனி வந்து பிறந்திட ... மெச்சும்படியான வண்டு, கரிய குயில், மெல்லிய புறா இவைகளின் ஒலிக்கு நிகரான மென்மையான புட்குரல் கண்டத்தில் தோன்றி எழ, அன்பு கூர மிக்க சந்திரன் ஒன்று நிலங்களில் விக்ரமம் செய்து இலங்கு நகம் பட ... அன்பு மிக்கெழ நன்றாகப் பிரகாசிக்கும் சந்திர காந்தக் கல் வேய்ந்துள்ள தளத்தில், பல வீரச் செயல்களை நிகழ்த்தி விளங்கும் நகரேகை படும்படி மெத்த மென் பொருள் அன்பு அளவும் துவள் இன்ப மாதர் வித்தகம் தரு விந்து த(ப்)பும் குழி பட்டு அழிந்து நலங்கு குரம்பையை விட்டு அகன்று நின் அம்புயம் மென் பதம் என்று சேர்வேன் ... பக்குவமாக நல்ல பொருள் கிடைத்த அளவுக்குத் தகுந்த அன்பைத் தந்து கூடும் சிற்றின்ப மாதர்களின் சாமர்த்தியம் தருகின்ற சுக்கிலத்துக்குக் அழிவு உண்டாக்கும் பெண்குறிக்குள் விழுந்து அழிந்து நொந்து போகும் சிறு குடிலாகிய இவ்வுடலை விட்டு நீங்கி, உன்னுடைய தாமரை போன்ற மென்மை வாய்ந்த திருவடியை என்று கூடுவேன்? மைக் கருங் கடல் அன்று எரி மண்டிட மெய் க்ரவுஞ்ச சிலம்பு உடல் வெம்பிட மற்று நன் பதி குன்றி அழிந்திட உம்பர் நாடன் வச்சிரம் கை அணிந்து பதம் பெற ... மிகக் கரிய கடல் அன்று தீப்பட்டு எரிய, அசுர உணர்ச்சி கொண்டிருந்த கிரவுஞ்ச மலையின் உடலம் நெருப்பிலே அழிய, மேலும் (சூரனுடைய) சிறப்பான நகரமாகிய மகேந்திரபட்டணம் வளம் குறைந்து பாழ்பட, தேவர் நாட்டு அரசனான இந்திரன் குலிஜாயுதத்தைக் கையில் தரித்த பதவியில் வாழ்வு பெற, மெச்சு குஞ்சரி கொங்கை புயம் பெற மத்த வெம்சின வஞ்சகர் தங்களை நுங்கும் வேலா ... வியக்கத்தக்க தேவயானையின் மார்பகங்கள் உனது திருப்புயம் பெற, செருக்கையும் கொடிய கோபத்தையும் கொண்ட வஞ்சக அசுரர்களைக் கொன்று விழுங்கிய வேலைக் கையில் தாங்கியவனே, குக்குடம் கொடி கொண்ட பரம்பர சக்ர மண்டலம் எண் திசையும் புகழ் கொட்க கொன்றை அணிந்த சிரம் சரண் அங்கிகாரா ... சேவற்கொடியை கையில் ஏந்திய பராபர மூர்த்தியே, சக்ரவாளகிரியால் சூழப்பட்ட இடங்களிலும், எட்டுத் திசையில் உள்ளவர்களும் உனது புகழை வெளிப்படுத்த, கொன்றை மலரைத் தரித்த (தந்தையாகிய) சிவபெருமானின் சிரத்தினை உனது திருவடியில் ஏற்றுக் கொண்டவனே, கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய கொற்றம் அம் குற மங்கை விரும்பிய தம்பிரானே. ... பூக்கொத்துகள் அவிழும் கடப்ப மலரில் நிலைத்துள்ள சிறந்த கடவுளே, கங்கணம் அணிந்த திருப்புயங்களை உடையவனே, வெற்றியையும் அழகையும் கொண்ட குற மங்கையாகிய வள்ளி நாயகி விரும்பும் தம்பிரானே.