புருவத்தை நெறித்து விழி கயல்
பயிலிட்டு வெருட்டி மதித்த இரு
புது வட்டை மினுக்கி அளிக் குலம் இசை பாடும்
புயல் சற்று விரித்து நிரைத்து ஒளி
வளை இட்ட கரத்தை அசைத்து அகில்
புனை மெத்தை படுத்த பளிக்கு அறை தனில் ஏறிச்
சரசத்தை விளைத்து முலைக் கிரி
புளகிக்க அணைத்து நகக் குறி
தனை வைத்து முகத்தை முகத்துடன் உற மேவித்
தணிவித்து இரதத்து அதரத்து உமிழ்
அமுதத்தை அளித்து உருக்கிகள்
தரு(ம்) பித்தை அகற்றி உனைத் தொழ முயல்வேனோ
பரதத்தை அடக்கி நடிப்பவர்
த்ரி புரத்தை எரிக்க நகைப்பவர்
பரவைக்குள் விடத்தை மிடற்று இடுபவர் தேர்
கப்பரை உற்ற கரத்தர் மிகப் பகிரதி
உற்ற சிரத்தர் நிறத்து உயர்
பரவு அத்தர் பொருப்பில் இருப்பவர் உமை ஆளர்
சுரர் சுத்தர் மனத்து உறை வித்தகர்
பணி பத்தர் பவத்தை அறுப்பவர்
சுடலைப் பொடியைப் பரிசிப்பவர் விடை ஏறும்
துணை ஒத்த பதத்தர் எதிர்த்திடு(ம்)
மதனைக் கடி முத்தர் கருத்து அமர்
தொலைவு அற்ற கிருபைக்குள் உதித்து அருள் பெருமாளே.
புருவத்தைச் சுருக்கி கயல் மீன் போன்ற கண்களால் அழைத்து விரட்டி, மதிக்கத்தக்க இரண்டு திரண்ட காதோலைகளை மினுக்கி, வண்டுகளின் கூட்டங்கள் இசை பாடுகின்ற மேகம் போன்ற கூந்தலைக் கொஞ்சம் விரித்து, வரிசையாக ஒளி வீசும் வளையல் இட்ட கைகளை ஆட்டி, அகிலின் நறு மணம் வீச அலங்கரிக்கப்பட்ட மெத்தைப் படுக்கை உள்ள பளிங்கு கற்களால் செய்யப்பட்ட அறையில் அமர்ந்து காம லீலைகளைச் செய்து, மலை போன்ற மார்பகங்கள் புளகாங்கிதம் கொள்ளும்படி அணைத்து, நகக்குறி இட்டு, முகத்தோடு முகம் வைத்து காம விரகத்தைத் தணித்து, சுவை நிரம்பிய வாயிதழ் ஊறலாகிய அமுதினை அளித்து மனதை உருக்கும் விலைமாதர்கள் தருகின்ற மதி மயக்கத்தை விட்டொழித்து உன்னைத் தொழ முயற்சி செய்ய மாட்டேனோ? தாம் ஆடுகின்ற கூத்தை அமைதியுடன் ஆடுபவர், மூன்று புரங்களையும் எரிந்து போகும்படி சிரித்தவர், கடலில் எழுந்த விஷத்தை தன் கழுத்தில் நிறுத்தியவர், (பலி பிச்சை) தேடும் கப்பரை (ஆகிய கபாலத்தை) ஏந்திய கையினர், சிறந்த கங்கை நதி தங்கும் சிரத்தை உடையவர், புகழ் மிக்கவர் எல்லாம் போற்றுகின்ற பெருமான், கயிலை மலையில் வீற்றிருப்பவர், உமையை ஒரு பாகத்தில் உடையவர், தேவர்கள் பரிசுத்தமானவர்கள் ஆகியோரின் மனத்தில் உறைகின்ற பேரறிவாளர், பணிகின்ற பக்தர்களுடைய பிறப்பை அறுப்பவர், சுடலை நீற்றைப் பூசியவர், (நந்தி என்னும்) ரிஷபத்தில் ஏறும், (அடியார்களுக்குத்) துணையாயிருக்கும் திருவடியை உடையவர், (பாணம் எய்த) மன்மதனைக் கடிந்தவர், இயன்பாகவே பாசங்களினின்று நீங்கியவர் (ஆகிய சிவபெருமானது) சித்தத்தில் அமர்ந்துள்ளவனே, அழிவில்லாத கருணையால தோன்றி அருளிய பெருமாளே.
புருவத்தை நெறித்து விழி கயல் பயிலிட்டு வெருட்டி மதித்த இரு புது வட்டை மினுக்கி அளிக் குலம் இசை பாடும் புயல் சற்று விரித்து ... புருவத்தைச் சுருக்கி கயல் மீன் போன்ற கண்களால் அழைத்து விரட்டி, மதிக்கத்தக்க இரண்டு திரண்ட காதோலைகளை மினுக்கி, வண்டுகளின் கூட்டங்கள் இசை பாடுகின்ற மேகம் போன்ற கூந்தலைக் கொஞ்சம் விரித்து, நிரைத்து ஒளி வளை இட்ட கரத்தை அசைத்து அகில் புனை மெத்தை படுத்த பளிக்கு அறை தனில் ஏறிச் சரசத்தை விளைத்து ... வரிசையாக ஒளி வீசும் வளையல் இட்ட கைகளை ஆட்டி, அகிலின் நறு மணம் வீச அலங்கரிக்கப்பட்ட மெத்தைப் படுக்கை உள்ள பளிங்கு கற்களால் செய்யப்பட்ட அறையில் அமர்ந்து காம லீலைகளைச் செய்து, முலைக் கிரி புளகிக்க அணைத்து நகக் குறி தனை வைத்து முகத்தை முகத்துடன் உற மேவித் தணிவித்து ... மலை போன்ற மார்பகங்கள் புளகாங்கிதம் கொள்ளும்படி அணைத்து, நகக்குறி இட்டு, முகத்தோடு முகம் வைத்து காம விரகத்தைத் தணித்து, இரதத்து அதரத்து உமிழ் அமுதத்தை அளித்து உருக்கிகள் தரு(ம்) பித்தை அகற்றி உனைத் தொழ முயல்வேனோ ... சுவை நிரம்பிய வாயிதழ் ஊறலாகிய அமுதினை அளித்து மனதை உருக்கும் விலைமாதர்கள் தருகின்ற மதி மயக்கத்தை விட்டொழித்து உன்னைத் தொழ முயற்சி செய்ய மாட்டேனோ? பரதத்தை அடக்கி நடிப்பவர் த்ரி புரத்தை எரிக்க நகைப்பவர் பரவைக்குள் விடத்தை மிடற்று இடுபவர் தேர் கப்பரை உற்ற கரத்தர் ... தாம் ஆடுகின்ற கூத்தை அமைதியுடன் ஆடுபவர், மூன்று புரங்களையும் எரிந்து போகும்படி சிரித்தவர், கடலில் எழுந்த விஷத்தை தன் கழுத்தில் நிறுத்தியவர், (பலி பிச்சை) தேடும் கப்பரை (ஆகிய கபாலத்தை) ஏந்திய கையினர், மிகப் பகிரதி உற்ற சிரத்தர் நிறத்து உயர் பரவு அத்தர் பொருப்பில் இருப்பவர் உமை ஆளர் சுரர் சுத்தர் மனத்து உறை வித்தகர் பணி பத்தர் பவத்தை அறுப்பவர் ... சிறந்த கங்கை நதி தங்கும் சிரத்தை உடையவர், புகழ் மிக்கவர் எல்லாம் போற்றுகின்ற பெருமான், கயிலை மலையில் வீற்றிருப்பவர், உமையை ஒரு பாகத்தில் உடையவர், தேவர்கள் பரிசுத்தமானவர்கள் ஆகியோரின் மனத்தில் உறைகின்ற பேரறிவாளர், பணிகின்ற பக்தர்களுடைய பிறப்பை அறுப்பவர், சுடலைப் பொடியைப் பரிசிப்பவர் விடை ஏறும் துணை ஒத்த பதத்தர் எதிர்த்திடு(ம்) மதனைக் கடி முத்தர் கருத்து அமர் தொலைவு அற்ற கிருபைக்குள் உதித்து அருள் பெருமாளே. ... சுடலை நீற்றைப் பூசியவர், (நந்தி என்னும்) ரிஷபத்தில் ஏறும், (அடியார்களுக்குத்) துணையாயிருக்கும் திருவடியை உடையவர், (பாணம் எய்த) மன்மதனைக் கடிந்தவர், இயன்பாகவே பாசங்களினின்று நீங்கியவர் (ஆகிய சிவபெருமானது) சித்தத்தில் அமர்ந்துள்ளவனே, அழிவில்லாத கருணையால தோன்றி அருளிய பெருமாளே.