முத்தம் உலாவு தனத்தியர் சித்தசன் ஆணை செலுத்திகள்
முத்தம் இடா மன உருக்கிகள் இளைஞோர் பால் முட்ட உலாவி மருட்டிகள்
நெட்டு இலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்தியர்
அநுராகத் தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள்
தப்புறும் ஆறு அகம் எத்திகள் அளவே நான் தட்டு அழியாது
திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள் புரிவாயே
மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே
வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்பு உற வற்பு உறு வேலை விடுத்து அருள் இளையோனே
சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்து இடை சிக்கெனவே தழுவிப் புணர் மணவாளா
செச்சை உலாவு பதத்தினை மெய்த் தவர் வாழ்வு பெறத் தரு சித்த விசாக இயல் சுரர் பெருமாளே.
முத்து மாலை உலவுகின்ற மார்பினை உடையவர், மன்மதனின் கட்டளைகளை நடத்துபவர்கள், முத்தம் தந்து மனத்தை உருக்குபவர்கள், இளைஞோர்கள் இடத்தில் நன்றாகக் கலந்து (அவர்களை) மயங்கச் செய்பவர்கள், நீண்ட இலையை ஒத்த வேலை நிகர்க்கும் கண்களை உடையவர்கள், பல கோடிக் கணக்கான எண்ணங்களை உடையவர்கள், காமப் பற்றை விளைக்கும் கிளி போன்றவர்கள், ஆசைகளைக் காட்டுபவர்கள், பச்சைக் கற்பூரம் அளாவிய தோள்களோடு மினுக்குபவர்கள், தப்பான வழியில் செல்லும் மனத்துடன் வஞ்சிக்கும் வேசிகள் இடத்திலே நான் நிலை குலையாது, உனது திருப்புகழைக் கற்பதற்கும் எப்போதும் ஓதுவதற்கும் (இயல், இசை, நாடகம் ஆகிய) முத்தமிழ் தத்துவ ஞானத்தை எனக்கு அருள்வாயாக. கும்பத் தலத்தை உடைய (கயாசுரன் என்ற) யானையின் தோலை உரித்தவராகிய சிவபெருமான் அருளிய மகனே, லட்சுமிக்கு மைத்துன முறையில் உள்ள வலிமையாளனான திருமாலுக்கு மருகனே, கடல் வற்றிப் போகவும், நிரம்ப வெற்றி மமதையுடன் விளங்கிய சூரர்கள் பதைக்கும்படியாகவும், வலிமை உடைய வேலாயுதத்தைச் செலுத்தி அருளிய இளையோனே, அழகிய குறப்பெண் வள்ளியை அடைந்து, ஒரு சமயத்தில் தினைப் புனத்தில் சிக்கெனத் தழுவிச் சேர்ந்த மணவாளனே, வெட்சி மலர் சூழும் பதத்தினனே, உண்மைத் தவசிகள் அழியாத இன்ப வாழ்க்கையைப் பெறுமாறு உதவுகின்ற சித்த மூர்த்தியே, விசாகனே, தகுதியுள்ள தேவர்களின் பெருமாளே.
முத்தம் உலாவு தனத்தியர் சித்தசன் ஆணை செலுத்திகள் ... முத்து மாலை உலவுகின்ற மார்பினை உடையவர், மன்மதனின் கட்டளைகளை நடத்துபவர்கள், முத்தம் இடா மன உருக்கிகள் இளைஞோர் பால் முட்ட உலாவி மருட்டிகள் ... முத்தம் தந்து மனத்தை உருக்குபவர்கள், இளைஞோர்கள் இடத்தில் நன்றாகக் கலந்து (அவர்களை) மயங்கச் செய்பவர்கள், நெட்டு இலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்தியர் ... நீண்ட இலையை ஒத்த வேலை நிகர்க்கும் கண்களை உடையவர்கள், பல கோடிக் கணக்கான எண்ணங்களை உடையவர்கள், அநுராகத் தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் ... காமப் பற்றை விளைக்கும் கிளி போன்றவர்கள், ஆசைகளைக் காட்டுபவர்கள், பச்சைக் கற்பூரம் அளாவிய தோள்களோடு மினுக்குபவர்கள், தப்புறும் ஆறு அகம் எத்திகள் அளவே நான் தட்டு அழியாது ... தப்பான வழியில் செல்லும் மனத்துடன் வஞ்சிக்கும் வேசிகள் இடத்திலே நான் நிலை குலையாது, திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள் புரிவாயே ... உனது திருப்புகழைக் கற்பதற்கும் எப்போதும் ஓதுவதற்கும் (இயல், இசை, நாடகம் ஆகிய) முத்தமிழ் தத்துவ ஞானத்தை எனக்கு அருள்வாயாக. மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே ... கும்பத் தலத்தை உடைய (கயாசுரன் என்ற) யானையின் தோலை உரித்தவராகிய சிவபெருமான் அருளிய மகனே, லட்சுமிக்கு மைத்துன முறையில் உள்ள வலிமையாளனான திருமாலுக்கு மருகனே, வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்பு உற வற்பு உறு வேலை விடுத்து அருள் இளையோனே ... கடல் வற்றிப் போகவும், நிரம்ப வெற்றி மமதையுடன் விளங்கிய சூரர்கள் பதைக்கும்படியாகவும், வலிமை உடைய வேலாயுதத்தைச் செலுத்தி அருளிய இளையோனே, சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்து இடை சிக்கெனவே தழுவிப் புணர் மணவாளா ... அழகிய குறப்பெண் வள்ளியை அடைந்து, ஒரு சமயத்தில் தினைப் புனத்தில் சிக்கெனத் தழுவிச் சேர்ந்த மணவாளனே, செச்சை உலாவு பதத்தினை மெய்த் தவர் வாழ்வு பெறத் தரு சித்த விசாக இயல் சுரர் பெருமாளே. ... வெட்சி மலர் சூழும் பதத்தினனே, உண்மைத் தவசிகள் அழியாத இன்ப வாழ்க்கையைப் பெறுமாறு உதவுகின்ற சித்த மூர்த்தியே, விசாகனே, தகுதியுள்ள தேவர்களின் பெருமாளே.