மேலான எல்லையைக் கண்ட இன்ப சுகங்களும், மனச்சலனம் மிக்க ஆசைகளும், பிழையான நெறியில் செல்லும்படி தூண்டும் காம இச்சையும், தீப்போல அடங்குதற்கு அரிதான கோபமும், துணிந்து ஒரு நல்ல செய்கையைச் செய்ய விடாத ஈயாமைக்குணமும், சமயக் கோட்பாடுகளால் புனையும் பல வேஷங்களும், மற்ற எந்த வெளிப்பாடும், போதும் போதும் என்று தள்ளிய ஞான உணர்ச்சி உள்ளவர்கள் தங்கள் அநுபவம் கொண்டு அறிகின்ற ஒரு மூலப்பொருளை விரும்பி உணராமல், நிரம்ப மதக்கொள்கைகளையே கூறும் புராணங்களையும், வேத மொழிகளையும் எடுத்துக்கொண்டு அளவிலாத வகையில் வெறும் பேச்சு பேசுவதால் என்ன பயன்? காமப் போரை விளைக்கும் இரு அம்புகளான கண்களும், பொட்டு வைத்த, ஒப்பற்ற வில்லைப் போன்ற, அழகிய நெற்றியும், சந்தனக் கலவை நீங்காத மார்புமாகி, உள்ளத்தைக் கவருமாறு உலகில் அவதரித்த தோற்றத்தையும், (தினைப்புனம் காக்கும்) மிக்க பரிதாபமான தொழிலையும் கருத்திலே வைத்து, இந்த வள்ளியை ஆட்கொள்ளும் வேளை வந்ததென, வேடர் குலத்தின் சிறந்த மான் போன்ற வள்ளியுடன் கலந்தாய். போர் செய்ய வல்ல வஜ்ராயுதத்தைக் கரத்திலே கொண்ட இந்திரன் தன் பொன்னுலகமாம் தேவர் நாட்டுக்குக் குடியேற, அசுரன் சூரன் தூள்பட்டுப் போக, இந்தப் பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் நடுநடுங்க, நீண்ட வேலைச் செலுத்திய பெருமாளே.
தலைவலய போகமும் ... மேலான எல்லையைக் கண்ட இன்ப சுகங்களும், சலனமிகு மோகமும் ... மனச்சலனம் மிக்க ஆசைகளும், தவறுதரு காமமும் ... பிழையான நெறியில் செல்லும்படி தூண்டும் காம இச்சையும், கனல்போலுந் தணிவரிய கோபமும் ... தீப்போல அடங்குதற்கு அரிதான கோபமும், துணிவரிய லோபமும் ... துணிந்து ஒரு நல்ல செய்கையைச் செய்ய விடாத ஈயாமைக்குணமும், சமயவெகு ரூபமும் ... சமயக் கோட்பாடுகளால் புனையும் பல வேஷங்களும், பிறிதேதும் ... மற்ற எந்த வெளிப்பாடும், அலம் அலம் எனா எழுந்தவர்கள் ... போதும் போதும் என்று தள்ளிய ஞான உணர்ச்சி உள்ளவர்கள் அநுபூதிகொண்டறியுமொரு காரணந்தனைநாடா ... தங்கள் அநுபவம் கொண்டு அறிகின்ற ஒரு மூலப்பொருளை விரும்பி உணராமல், ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின்று ... நிரம்ப மதக்கொள்கைகளையே கூறும் புராணங்களையும், வேத மொழிகளையும் எடுத்துக்கொண்டு அபரிமிதமாய் விளம்புவதோதான் ... அளவிலாத வகையில் வெறும் பேச்சு பேசுவதால் என்ன பயன்? கலகஇரு பாணமும் ... காமப் போரை விளைக்கும் இரு அம்புகளான கண்களும், திலகவொரு சாபமும் ... பொட்டு வைத்த, ஒப்பற்ற வில்லைப் போன்ற, அழகிய நெற்றியும், களபம் ஒழியாதகொங்கையுமாகி ... சந்தனக் கலவை நீங்காத மார்புமாகி, கவரும் அவதாரமும் ... உள்ளத்தைக் கவருமாறு உலகில் அவதரித்த தோற்றத்தையும், கொடியபரிதாபமும் ... (தினைப்புனம் காக்கும்) மிக்க பரிதாபமான தொழிலையும் கருதியிது வேளையென்று ... கருத்திலே வைத்து, இந்த வள்ளியை ஆட்கொள்ளும் வேளை வந்ததென, கிராத குலதிலக மானுடன் கலவிபுரிவாய் ... வேடர் குலத்தின் சிறந்த மான் போன்ற வள்ளியுடன் கலந்தாய். பொருங் குலிச கர வாசவன் திருநாடு குடிபுக ... போர் செய்ய வல்ல வஜ்ராயுதத்தைக் கரத்திலே கொண்ட இந்திரன் தன் பொன்னுலகமாம் தேவர் நாட்டுக்குக் குடியேற, நிசாசரன் பொடிபட ... அசுரன் சூரன் தூள்பட்டுப் போக, மகீதரன் குலைய ... இந்தப் பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் நடுநடுங்க, நெடு வேல்விடும் பெருமாளே. ... நீண்ட வேலைச் செலுத்திய பெருமாளே.