(முதல் இரண்டு அடிகளை அன்வயப்படுத்தி பொருள் தரப்படுகிறது) மனத்தில் பொருந்தியுள்ள ஆசை என்ற காடு (வேறு வழிகளில் செல்லாமல்) மூலாதார நிலைக்கு மேல் உள்ள ஜோதியினை நாடிச்சென்று, மெளன நிலையை, பலவகைகளிலும் கற்று, நன்னெறி வகைகளைக் காட்டுகின்ற உனது பலவகையான விளையாட்டுக்களை உன்னருளாலே யான் கண்டு முக்தி பெற, ஒழுக்க விதிக்கு உட்பட்ட ரகசிய உபதேசத்தின் பயன்தனை எனக்கு அருள்வாயாக. நீண்ட ஊழிக்காலத்தும் (எப்போதும்) தன் நிலை வாடாத சுயம்பிரகாச மணி ஜோதியே, நீதிமானே, பலவகையான இன்பச் சுவையமுதம் பருகிய உணர்ச்சியாலே, அழகிய வேதங்கள் நான்கையும், ஜெபமணிமாலை கொண்டு நாடிச் சென்று ஆராயும் தவ சிரேஷ்டர்களின் துன்பங்களை அழிப்பவனே, ஹரி ஹரி என்று ஓதப்படும் நாராயணரின், லக்ஷ்மியின் மருமகனே, சூலாயுதம் ஏந்திய தலைவரும், சிவஞானத்தினரும், காலனை உதைத்த திருவடியினருமான சிவபெருமான் தந்தருள வந்த குருமூர்த்தியே, தோதீ திகுதிகு தீதீ செக என்ற தாளத்தில் ஜெகஜ்ஜோதியாக நடனம் செய்யும் பெருமாளே.