கருவெனு மாயை உருவினில் மூழ்கி
வயதளவாக நிலமீதில்
கலைதெரி வாணர் கலைபல நூல்கள்
வெகுவிதமாக கவிபாடித் தெருவழி போகி
பொருளெனும் ஆசை திரவியம் நாடி நெடிது ஓடி
சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி
சிறுவிதமாக திரிவேனோ
அருள் அநுபோக குருபரனே உன் அடியவர் வாழ அருள்வோனே
அரன் இரு காதில் அருள்பர ஞாந அடைவினை ஓதி அருள்பாலா
வெருவிடு சூரர் குலஅடி வேரை விழவிடு சாசுவதி பாலா
மிடல் உடலாளர் அடர் அசுர் மாள
விடும் அயில் வேல பெருமாளே.
தாயின் கருப்பையிலே மாயையான உருவத்திலே மூழ்கி காலத்தில் பிறந்து, பின் வயதுக்கு வந்த பின், உலகிலுள்ள கலை வல்லுனர்களின் பலவிதமான கலை நூல்களைப் பயின்று, அனேக விதமான கவிதைகளைப் பாடியவாறே தெருக்கள் வழியே சென்று, பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையால் செல்வங்கள் பலவற்றை விரும்பி நெடும் தொலைவு ஓடி, வில் போன்ற நெற்றியை உடைய பெண்களின் மோகத்திலே முழுகி, அற்பத்தனமாக நான் உழன்று திரிதல் தகுமோ? உன்னை நினைத்துத் துதிப்பவர்களுக்கு அநுபவ மார்க்கத்தில் அருளைத் தரும் பரம குருவே, உன் அடியார்களை வாழச்செய்ய அருள்பவனே, தந்தை சிவபிரானின் இரு செவிகளிலும் மேலான அருள் ஞான மந்திரமான பிரணவ மந்திரத்தை உபதேசித்து அருளிய மகனே, அஞ்சி ஓடிய சூரனுடைய குலத்தின் அடிவேரையே சாய்த்த, நிரந்தரியான சக்தியின் குமரனே, வலிமையான உடலமைப்பு கொண்டவர்களான அசுரர் கூட்டம் மாயுமாறு செலுத்திய படையான வேலாயுதத்தை உடைய பெருமாளே.
கருவெனு மாயை உருவினில் மூழ்கி ... தாயின் கருப்பையிலே மாயையான உருவத்திலே மூழ்கி வயதளவாக நிலமீதில் ... காலத்தில் பிறந்து, பின் வயதுக்கு வந்த பின், உலகிலுள்ள கலைதெரி வாணர் கலைபல நூல்கள் ... கலை வல்லுனர்களின் பலவிதமான கலை நூல்களைப் பயின்று, வெகுவிதமாக கவிபாடித் தெருவழி போகி ... அனேக விதமான கவிதைகளைப் பாடியவாறே தெருக்கள் வழியே சென்று, பொருளெனும் ஆசை திரவியம் நாடி நெடிது ஓடி ... பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையால் செல்வங்கள் பலவற்றை விரும்பி நெடும் தொலைவு ஓடி, சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி ... வில் போன்ற நெற்றியை உடைய பெண்களின் மோகத்திலே முழுகி, சிறுவிதமாக திரிவேனோ ... அற்பத்தனமாக நான் உழன்று திரிதல் தகுமோ? அருள் அநுபோக குருபரனே உன் அடியவர் வாழ அருள்வோனே ... உன்னை நினைத்துத் துதிப்பவர்களுக்கு அநுபவ மார்க்கத்தில் அருளைத் தரும் பரம குருவே, உன் அடியார்களை வாழச்செய்ய அருள்பவனே, அரன் இரு காதில் அருள்பர ஞாந அடைவினை ஓதி அருள்பாலா ... தந்தை சிவபிரானின் இரு செவிகளிலும் மேலான அருள் ஞான மந்திரமான பிரணவ மந்திரத்தை உபதேசித்து அருளிய மகனே, வெருவிடு சூரர் குலஅடி வேரை விழவிடு சாசுவதி பாலா ... அஞ்சி ஓடிய சூரனுடைய குலத்தின் அடிவேரையே சாய்த்த, நிரந்தரியான சக்தியின் குமரனே, மிடல் உடலாளர் அடர் அசுர் மாள ... வலிமையான உடலமைப்பு கொண்டவர்களான அசுரர் கூட்டம் மாயுமாறு விடும் அயில் வேல பெருமாளே. ... செலுத்திய படையான வேலாயுதத்தை உடைய பெருமாளே.