தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான
வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு வயிறில்நெடு நாள லைந்து ...... புவிமீதே மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து வயதுபதி னாறு சென்று ...... வடிவாகிக் கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று கனிவதுட னேய ணைந்து ...... பொருள்தேடிக் கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த கசடனெனை யாள வுன்ற ...... னருள்தாராய் புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த புதல்வியித ழூற லுண்ட ...... புலவோனே பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த புதியமயி லேறு கந்த ...... வடிவேலா பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி பரமகலி யாணி தந்த ...... பெருவாழ்வே பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று பழநிமலை மீதி னின்ற ...... பெருமாளே.
வனிதை உடல் காய நின்று உதிரமதிலே உருண்டு
வயிறில் நெடு நாள் அலைந்து புவிமீதே
மனிதர் உருவாகி வந்து அநுதினமுமே வளர்ந்து
வயது பதினாறு சென்று வடிவாகி
கனகமுலை மாதர் தங்கள் வலையில் மிகவே உழன்று
கனிவதுடனே அணைந்து பொருள்தேடி
கனபொருளெலாம் இழந்து மயலில்மிகவே அலைந்த
கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய்
புனம் அதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த புதல்வி இதழ் ஊறல் உண்ட புலவோனே
பொரு மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய மயில் ஏறு கந்த வடிவேலா
பனக மணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி
பரம கலியாணி தந்த பெருவாழ்வே
பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே.
தாயாருடைய உடல் வற்றுமாறு கருவில் இருந்து, அவளது ரத்தத்திலே திரட்சிபெற்று வளையவந்து, அவளது வயிற்றில் நீண்ட நாட்கள் துன்புற்று, இந்தப் பூமியின் மேல் மனித உருவுடன் பிறந்து, தினந்தோறும் வளர்ச்சி பெற்று, பதினாறு வயதை அடைந்து, ஆணழகனாக ஆகி, அழகிய மார்பகங்களை உடைய பெண்களின் வலையிலே அகப்பட்டு மிகவும் திரிந்து, அன்புடனே அப்பொது மகளிரைத் தழுவி, அவர்களுக்காக பணத்தைத் தேடி, பெரும் பொருள் யாவையும் இழந்து, மயக்கத்தில் அதிகமாக அலைந்த மூடனாகிய அடியேனை ஆட்கொள்ள உனது திருவருளைத் தந்தருள்க. தினைப்புனத்தில் வசிக்கின்றவளும், ரகுநாதராகிய திருமாலின் திருமகளுமான வள்ளி தேவியின் இதழ் அமுதத்தைப் பருகிய புலவனே, மலர்க்கணையால் போர் புரிந்த மன்மதனைச் சாம்பலாகச் செய்த அருமையான சிவபிரான் மகிழ்ந்த புதுமையான மயில் வாகனத்தின் மீது ஏறும் கந்தனே, கூரிய வடிவேலனே, பாம்பை ஆபரணமாகப் பூண்ட சிறந்த மாதங்கியும், இளமையானவளும், மிகுந்த நீல நிறத்தவளும், வேகமுடைய துர்க்கையும், நித்திய மங்களமுடையவளும் ஆன உமாதேவி பெற்றருளிய பெருஞ் செல்வமே, பகைத்த அசுரர்கள் மாயுமாறு வெற்றி பெற்று, தேவர்கள் சிறையினின்று மீளுமாறு அருள் புரிந்து, பழநிமலை மீது நின்றருளிய பெருமாளே.
வனிதை உடல் காய நின்று உதிரமதிலே உருண்டு ... தாயாருடைய உடல் வற்றுமாறு கருவில் இருந்து, அவளது ரத்தத்திலே திரட்சிபெற்று வளையவந்து, வயிறில் நெடு நாள் அலைந்து புவிமீதே ... அவளது வயிற்றில் நீண்ட நாட்கள் துன்புற்று, இந்தப் பூமியின் மேல் மனிதர் உருவாகி வந்து அநுதினமுமே வளர்ந்து ... மனித உருவுடன் பிறந்து, தினந்தோறும் வளர்ச்சி பெற்று, வயது பதினாறு சென்று வடிவாகி ... பதினாறு வயதை அடைந்து, ஆணழகனாக ஆகி, கனகமுலை மாதர் தங்கள் வலையில் மிகவே உழன்று ... அழகிய மார்பகங்களை உடைய பெண்களின் வலையிலே அகப்பட்டு மிகவும் திரிந்து, கனிவதுடனே அணைந்து பொருள்தேடி ... அன்புடனே அப்பொது மகளிரைத் தழுவி, அவர்களுக்காக பணத்தைத் தேடி, கனபொருளெலாம் இழந்து மயலில்மிகவே அலைந்த ... பெரும் பொருள் யாவையும் இழந்து, மயக்கத்தில் அதிகமாக அலைந்த கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய் ... மூடனாகிய அடியேனை ஆட்கொள்ள உனது திருவருளைத் தந்தருள்க. புனம் அதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த புதல்வி இதழ் ஊறல் உண்ட புலவோனே ... தினைப்புனத்தில் வசிக்கின்றவளும், ரகுநாதராகிய திருமாலின் திருமகளுமான வள்ளி தேவியின் இதழ் அமுதத்தைப் பருகிய புலவனே, பொரு மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய மயில் ஏறு கந்த வடிவேலா ... மலர்க்கணையால் போர் புரிந்த மன்மதனைச் சாம்பலாகச் செய்த அருமையான சிவபிரான் மகிழ்ந்த புதுமையான மயில் வாகனத்தின் மீது ஏறும் கந்தனே, கூரிய வடிவேலனே, பனக மணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி ... பாம்பை ஆபரணமாகப் பூண்ட சிறந்த மாதங்கியும், இளமையானவளும், மிகுந்த நீல நிறத்தவளும், வேகமுடைய துர்க்கையும், பரம கலியாணி தந்த பெருவாழ்வே ... நித்திய மங்களமுடையவளும் ஆன உமாதேவி பெற்றருளிய பெருஞ் செல்வமே, பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று ... பகைத்த அசுரர்கள் மாயுமாறு வெற்றி பெற்று, தேவர்கள் சிறையினின்று மீளுமாறு அருள் புரிந்து, பழநிமலை மீதில் நின்ற பெருமாளே. ... பழநிமலை மீது நின்றருளிய பெருமாளே.