வாசனை மிகுந்த மலருள் மிக இனிப்பான தேனைச் சொட்டுவதும், அன்பைப் பொழிவதுமான சிறப்பான கடப்ப மலரால் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட பூமாலையை, பெருமைவாய்ந்த மேரு மலையைப் போன்ற பன்னிரு சிறந்த புயங்களின் மீது அணிந்துள்ள கருணாகரனே, கடுமையும் ஒளியும் கொண்ட வேலை உடையவனே, அழகு நிறைந்த குறத்தியாம் வள்ளியின் திருவடி மீது தினந்தோறும் உனது குளிர்ந்த முடியானது பொருந்தும்படியாகப் படிந்து மகிழ்பவனே, வளப்பமும் மெய்ம்மையும் வாய்ந்த தேர்ச்சியான சொற்களை வைத்து நூல்கள் இயற்றவல்ல நக்கீரனுக்கு விருப்பமுடன் உன் மலர் வாயால் இலக்கண நயங்களை எடுத்துரைத்து, அடி, மோனை சொல்லுக்குப் பொருந்த உலகம் உவப்ப என்ற அடி எடுத்துக் கொடுத்து, உன் அருள் வாக்கால் மகிழ்ந்து கூறிய பெரியவனே, யான் சொல்லுகின்ற இந்தப் புல்லிய சொற்கள் மீதும் தினமும் குளிர்ந்த உன் திருவருளைப் பாலித்து நீ மகிழ்ச்சியுடன் வரவேண்டும். பாவம் நிறைந்த இந்த உடல் என்னும் கூட்டிலே பொருந்தி இருக்கும் இந்த வகையிலே துன்பங்களை யான் இவ்வுலகில் அனுபவித்தல் தகுமோ? திறம் வாய்ந்த மகா தவசிகள் மனம் கனிந்து உன்னிரு பாத கமலங்களால் ஈடேறப்பெற்ற திருவேரகமாம் சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
கடிமா மலர்க்குள் இன்பமுள வேரி கக்கு நண்புதரு ... வாசனை மிகுந்த மலருள் மிக இனிப்பான தேனைச் சொட்டுவதும், அன்பைப் பொழிவதுமான மா கடப்பு அமைந்த தொடைமாலை ... சிறப்பான கடப்ப மலரால் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட பூமாலையை, கனமேரு ஒத்திடும் பன்இருமா புயத்த ணிந்த ... பெருமைவாய்ந்த மேரு மலையைப் போன்ற பன்னிரு சிறந்த புயங்களின் மீது அணிந்துள்ள கருணாகர ப்ரசண்ட கதிர்வேலா ... கருணாகரனே, கடுமையும் ஒளியும் கொண்ட வேலை உடையவனே, வடிவார் குறத்தி தன்பொன் அடிமீது நித்தமும் ... அழகு நிறைந்த குறத்தியாம் வள்ளியின் திருவடி மீது தினந்தோறும் தண் முடியானது உற்று உகந்து பணிவோனே ... உனது குளிர்ந்த முடியானது பொருந்தும்படியாகப் படிந்து மகிழ்பவனே, வளவாய்மை சொற்ப்ரபந்தமுள கீரனுக்கு ... வளப்பமும் மெய்ம்மையும் வாய்ந்த தேர்ச்சியான சொற்களை வைத்து நூல்கள் இயற்றவல்ல நக்கீரனுக்கு உகந்து மலர்வாய் இலக்கணங்கள் இயல்பு ஓதி ... விருப்பமுடன் உன் மலர் வாயால் இலக்கண நயங்களை எடுத்துரைத்து, அடிமோனை சொற்கிணங்க உலகாம் உவப்ப என்றுன் ... அடி, மோனை சொல்லுக்குப் பொருந்த உலகம் உவப்ப என்ற அடி எடுத்துக் கொடுத்து, அருளால் அளிக்க உகந்த பெரியோனே ... உன் அருள் வாக்கால் மகிழ்ந்து கூறிய பெரியவனே, அடியேனு ரைத்த புன்சொல் அதுமீது நித்தமும் ... யான் சொல்லுகின்ற இந்தப் புல்லிய சொற்கள் மீதும் தினமும் தணருளே தழைத்து உகந்து வரவேணும் ... குளிர்ந்த உன் திருவருளைப் பாலித்து நீ மகிழ்ச்சியுடன் வரவேண்டும். செடிநேர் உடற் குடம்பை தனின்மேவியுற்றிடு ... பாவம் நிறைந்த இந்த உடல் என்னும் கூட்டிலே பொருந்தி இருக்கும் இந்த படிதான் அலக்கண் இங்கண் உறலாமோ ... இந்த வகையிலே துன்பங்களை யான் இவ்வுலகில் அனுபவித்தல் தகுமோ? திறமாதவர்க்க னிந்துன் இருபாத பத்மம் உய்ந்த ... திறம் வாய்ந்த மகா தவசிகள் மனம் கனிந்து உன்னிரு பாத கமலங்களால் ஈடேறப்பெற்ற திருவேரகத்தமர்ந்த பெருமாளே. ... திருவேரகமாம் சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.