வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து
மா வலி வியாதி குன்மமொடு காசம்
வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின்
மாதர் தரு பூஷணங்கள் என ஆகும்
பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து
பாயலை விடாது மங்க இவையால் நின்
பாத மலரானதின் கண் நேயம் அறவே மறந்து
பாவ மதுபானம் உண்டு வெறி மூடி
ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று
ஈனம் மிகு சாதியின் கண் அதிலே நான்
ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன்
ஈர அருள் கூர வந்து எனை ஆள்வாய்
சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி
சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக
தோரண நல் மாடம் எங்கும் நீடு கொடியே தழைந்த
சுவாமி மலை வாழ வந்த பெருமாளே.
வாத நோய், வயிற்றுளைவு நோய், கழுத்தைச் சுற்றி வரும் புண் கட்டி, மார்பு எரிச்சல், எலும்புருக்கி நோய், பெரிய இழுப்பு நோய், மகோதரத்துடன், கோழை நோய், வாயுவினால் உண்டாகும் படர்தாமரை போன்ற சொறி, படை, மூக்கடைப்பு, பின்னும் ஒழுக்கம் கெட்ட விலைமாதர்களுடன் இணைவதால் கிடைக்கும் ஆபரணங்கள் என்று சொல்லத்தக்க புண் வகைகள், பாவ நோய்ப் புண்கள் ஆகிய இவை உடனே என்னைப் பீடிப்பதால், படுக்கையை விடாது கிடந்து, உடல் நலம் குறைந்து, இக்காரணத்தால் உனது திருவடி மலர்களில் அன்பு என்பதை முற்றும் மறந்து, பாவம் நிறைந்த கள்ளைக் குடித்து, அதனால் மயக்கம் மிகுந்து, குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித் தொழில்களிலே ஈடுபட்டு, நான் வலிமை அற்று அழிந்த பின், இவன் ஒரு முட்டாள் எனப் பிறர் கூறுவர். (அங்ஙனம் பிறர்) சொல்லுவதற்கு முன்பு உனது கருணை நிறைந்த திருவருள் மிக்கு வந்து என்னை ஆட் கொள்வாயாக. மாமரம், மகிழ மரம், பாலை மரம், கொன்றை மரம் (இவைகளின்) பூந்தாது நிறைந்துள்ள சோலைகள் நெருங்கியுள்ளதும், சூழ்ந்துள்ள மதில் உயர்ந்து மேகத்தை அளாவி நிற்பதும், தோரணங்கள், நல்ல வீடுகளில் எங்கும் உயர் கொடிகள் தழைந்துள்ளதுமான, சுவாமிமலையில் வாழ வந்த பெருமாளே.
வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி வியாதி குன்மமொடு காசம் ... வாத நோய், வயிற்றுளைவு நோய், கழுத்தைச் சுற்றி வரும் புண் கட்டி, மார்பு எரிச்சல், எலும்புருக்கி நோய், பெரிய இழுப்பு நோய், மகோதரத்துடன், கோழை நோய், வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு பூஷணங்கள் என ஆகும் ... வாயுவினால் உண்டாகும் படர்தாமரை போன்ற சொறி, படை, மூக்கடைப்பு, பின்னும் ஒழுக்கம் கெட்ட விலைமாதர்களுடன் இணைவதால் கிடைக்கும் ஆபரணங்கள் என்று சொல்லத்தக்க புண் வகைகள், பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை விடாது மங்க ... பாவ நோய்ப் புண்கள் ஆகிய இவை உடனே என்னைப் பீடிப்பதால், படுக்கையை விடாது கிடந்து, உடல் நலம் குறைந்து, இவையால் நின் பாத மலரானதின் கண் நேயம் அறவே மறந்து பாவ மதுபானம் உண்டு வெறி மூடி ... இக்காரணத்தால் உனது திருவடி மலர்களில் அன்பு என்பதை முற்றும் மறந்து, பாவம் நிறைந்த கள்ளைக் குடித்து, அதனால் மயக்கம் மிகுந்து, ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு சாதியின் கண் அதிலே ... குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித் தொழில்களிலே ஈடுபட்டு, நான் ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள் கூர வந்து எனை ஆள்வாய் ... நான் வலிமை அற்று அழிந்த பின், இவன் ஒரு முட்டாள் எனப் பிறர் கூறுவர். (அங்ஙனம் பிறர்) சொல்லுவதற்கு முன்பு உனது கருணை நிறைந்த திருவருள் மிக்கு வந்து என்னை ஆட் கொள்வாயாக. சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக ... மாமரம், மகிழ மரம், பாலை மரம், கொன்றை மரம் (இவைகளின்) பூந்தாது நிறைந்துள்ள சோலைகள் நெருங்கியுள்ளதும், சூழ்ந்துள்ள மதில் உயர்ந்து மேகத்தை அளாவி நிற்பதும், தோரண நல் மாடம் எங்கும் நீடு கொடியே தழைந்த சுவாமி மலை வாழ வந்த பெருமாளே. ... தோரணங்கள், நல்ல வீடுகளில் எங்கும் உயர் கொடிகள் தழைந்துள்ளதுமான, சுவாமிமலையில் வாழ வந்த பெருமாளே.