பருமனனான பல்லை உடைய தலையையும், வலிமை உடைய கைகளையும், தாங்குகின்ற அந்தக் கால்களையும், அன்புடனே செய்யப்பட்ட, பொய்யாலான இந்தப் பானை போன்ற உடலை, பழிக்கும் பாவத்துக்கும் இடமான இந்த உடலை, பசிக்கு இருப்பிடமான குடலோடு கூடிய இந்த உடலை, பயத்தோடும் கூடிய பெரிய பித்த சரீரத்தை, தோலாலான உலை ஊதும் கருவியை, பொருத்தப்பட்டுள்ள (காமம், வெகுளி, மயக்கம் என்ற) மூன்று குற்றங்களோடும், (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற) ஐந்து புலன்களோடும் கட்டுப்பட்ட இந்தத் நோய்ப் பையை (வாழும்போது) தாங்குவதும், (சாவில்) ஆழ்த்துவதுமான இந்தப் பிறப்பு ஒழிந்து போவதற்கான நோக்கத்தைக் கொண்ட கருத்தை எனக்குத் தந்து அருள்வாயாக. தமது கருத்தில் வைத்து உன்னைப் புகழ்ந்த அடியார்களை (வாழ்வித்து), மிகுந்த வஞ்சம் உடையவர்களை ஒதுக்கித்தள்ளி, (அடியார்களை மட்டும்) உன் மெய்ப்பதத்தில் சேர்த்துக்கொள்ளும் வீரனே, விளைந்த நல்ல தினைப்பயிர் மிகுந்த புனத்தில் விளங்கும் நல்ல குறத்தியாம் வள்ளியை உயர்ந்த உன் அழகிய தோள்களிலே அணைந்தவனே, போரில் நெருங்கிவந்து எதிர்த்த திரிபுரத்து வலிய அரக்கர்களை சிரித்தே எரித்து அழித்தவரும், அழிவில்லாதவருமான சிவபெருமானின் அழகிய குமரேசனே, சிறப்பாகத் தனிநின்று அறநெறி கூறும் தமிழ்நாட்டின் உயர்ந்த வட எல்லையில் இருக்கும் சிறப்பைப் பெற்றுள்ள திருத்தணித்தலத்துப் பெருமாளே.
பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினை ... பருமனனான பல்லை உடைய தலையையும், வலிமை உடைய கைகளையும், பரித்தவப் பதத்தினை ... தாங்குகின்ற அந்தக் கால்களையும், பரிவோடே படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினை ... அன்புடனே செய்யப்பட்ட, பொய்யாலான இந்தப் பானை போன்ற உடலை, பழிக்கும் பாவத்துக்கும் இடமான இந்த உடலை, பசிக்குடற் கடத்தினைப் பயமேவும் பெருத்தபித் துருத்தனை ... பசிக்கு இருப்பிடமான குடலோடு கூடிய இந்த உடலை, பயத்தோடும் கூடிய பெரிய பித்த சரீரத்தை, கிருத்திமத் துருத்தியை ... தோலாலான உலை ஊதும் கருவியை, பிணித்தமுக் குறத்தொடு ஐப் புலனாலும் ... பொருத்தப்பட்டுள்ள (காமம், வெகுளி, மயக்கம் என்ற) மூன்று குற்றங்களோடும், (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற) ஐந்து புலன்களோடும் பிணித்தவிப் பிணிப்பையை பொறுத்து அமிழ்ப் பிறப்பறக் ... கட்டுப்பட்ட இந்தத் நோய்ப் பையை (வாழும்போது) தாங்குவதும், (சாவில்) ஆழ்த்துவதுமான இந்தப் பிறப்பு ஒழிந்து போவதற்கான குறிக்கருத்து எனக்களித்தருள்வாயே ... நோக்கத்தைக் கொண்ட கருத்தை எனக்குத் தந்து அருள்வாயாக. கருத்திலுற் றுரைத்தபத்தரை ... தமது கருத்தில் வைத்து உன்னைப் புகழ்ந்த அடியார்களை (வாழ்வித்து), தொறுத் திருக்கரைக் கழித்த மெய்ப் பதத்தில்வைத்திடுவீரா ... மிகுந்த வஞ்சம் உடையவர்களை ஒதுக்கித்தள்ளி, (அடியார்களை மட்டும்) உன் மெய்ப்பதத்தில் சேர்த்துக்கொள்ளும் வீரனே, கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியை ... விளைந்த நல்ல தினைப்பயிர் மிகுந்த புனத்தில் விளங்கும் நல்ல குறத்தியாம் வள்ளியை கதித்தநற் றிருப்புயத்தணைவோனே ... உயர்ந்த உன் அழகிய தோள்களிலே அணைந்தவனே, செருத்தெறுத் தெதிர்த்த முப் புரத்து உரத்தரக்கரை ... போரில் நெருங்கிவந்து எதிர்த்த திரிபுரத்து வலிய அரக்கர்களை சிரித்தெரித்த நித்தர்பொற் குமரேசா ... சிரித்தே எரித்து அழித்தவரும், அழிவில்லாதவருமான சிவபெருமானின் அழகிய குமரேசனே, சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசை ... சிறப்பாகத் தனிநின்று அறநெறி கூறும் தமிழ்நாட்டின் உயர்ந்த வட எல்லையில் இருக்கும் சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே. ... சிறப்பைப் பெற்றுள்ள திருத்தணித்தலத்துப் பெருமாளே.