வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி மஞ்சரி கோவை தூது ...... பலபாவின் வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி வந்தியர் போல வீணி ...... லழியாதே செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை திண்டிறல் வேல்ம யூர ...... முகமாறும் செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு செங்கனி வாயி லோர்சொ ...... லருள்வாயே பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு பஞ்சற வாது கூறு ...... சமண்மூகர் பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது பண்டித ஞான நீறு ...... தருவோனே குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு குன்றவர் சாதி கூடி ...... வெறியாடிக் கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு குன்றுதோ றாடல் மேவு ...... பெருமாளே.
வஞ்சக லோப மூடர்
தம்பொரு ளூர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது பலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீணிலழியாதே
செஞ்சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை
திண்டிறல் வேல்மயூர முகமாறும்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட
ஞானமூறு செங்கனி வாயிலோர்சொல் அருள்வாயே
பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு
பஞ்சற வாது கூறு சமண்மூகர்
பண்பறு பீலி யோடு வெங்கழு வேற
ஓது பண்டித ஞான நீறு தருவோனே
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
குன்றவர் சாதி கூடி வெறியாடி
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு
வீறு குன்றுதோ றாடல் மேவு பெருமாளே.
வஞ்சகக் குணத்தையும், ஈயாத தன்மையையும் கொண்ட மூடர்களின் பொருளுக்காக அவர்களின் ஊர்களைத் தேடிச் சென்று மஞ்சரி, கோவை, தூது முதலிய தமிழ் இலக்கியத்தின் பல பாடல்களில் பெரும்புகழ் கொண்ட பாரியே, காரியே என அவர்களைப் புகழ்ந்து வாதித்துக் கூறி, வந்தித்துப் பாடுபவர்களைப் போல் வீணுக்கு அழிந்திடாமல், சிவந்த திருப்பாதங்களையும், இனிய ஓசையை உடைய கிண்கிணியையும், கடப்பமலர் மாலையையும், உறுதியான வலிய வேலினையும், மயிலையும், ஆறு திருமுகங்களையும், செழுமையான தமிழ்ப் பாட்டுக்களால் தினமும் பாடி வாழ்வுற ஞானம் சுரக்கும் சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு திருமொழியை அருளிச்செய்வாயாக. பாண்டியனின் மிகுந்து வளைந்த கூனையும், நீங்காத காய்ச்சலையும் நீங்கச்செய்தும், கிளிப்பிள்ளை போல் கூறியதே கூறி வாதிடும் சமணர்களாகிய ஊமைகள் அழகற்ற மயிற்பீலியோடு கொடிய கழுவில் ஏறச் செய்தும், பதிகங்களைப் பாடி அருளிய பண்டிதனே, ஞானத் திருநீற்றை தந்தருளிய திருஞானசம்பந்தனே, யானைகளும், யாளிகளும் வசிக்கும் பசுமையான தினைப்புனக் கொல்லையிலே திரிகின்ற வேடர் கூட்டங்கள் ஒன்று கூடி வெறி ஆட்டம் ஆடி உன்னை வணங்க, அவர்கள் விரும்பும் உலக வாழ்வை நல்கி பெருமைமிக்குச் சிறந்து, மலைகளில் எல்லாம் திருவிளையாடல்கள் புரியும் பெருமாளே.
வஞ்சக லோப மூடர் ... வஞ்சகக் குணத்தையும், ஈயாத தன்மையையும் கொண்ட மூடர்களின் தம்பொரு ளூர்கள் தேடி ... பொருளுக்காக அவர்களின் ஊர்களைத் தேடிச் சென்று மஞ்சரி கோவை தூது பலபாவின் ... மஞ்சரி, கோவை, தூது முதலிய தமிழ் இலக்கியத்தின் பல பாடல்களில் வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி ... பெரும்புகழ் கொண்ட பாரியே, காரியே என அவர்களைப் புகழ்ந்து வாதித்துக் கூறி, வந்தியர் போல வீணிலழியாதே ... வந்தித்துப் பாடுபவர்களைப் போல் வீணுக்கு அழிந்திடாமல், செஞ்சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை ... சிவந்த திருப்பாதங்களையும், இனிய ஓசையை உடைய கிண்கிணியையும், கடப்பமலர் மாலையையும், திண்டிறல் வேல்மயூர முகமாறும் ... உறுதியான வலிய வேலினையும், மயிலையும், ஆறு திருமுகங்களையும், செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ... செழுமையான தமிழ்ப் பாட்டுக்களால் தினமும் பாடி வாழ்வுற ஞானமூறு செங்கனி வாயிலோர்சொல் அருள்வாயே ... ஞானம் சுரக்கும் சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு திருமொழியை அருளிச்செய்வாயாக. பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு ... பாண்டியனின் மிகுந்து வளைந்த கூனையும், நீங்காத காய்ச்சலையும் நீங்கச்செய்தும், பஞ்சற வாது கூறு சமண்மூகர் ... கிளிப்பிள்ளை போல் கூறியதே கூறி வாதிடும் சமணர்களாகிய ஊமைகள் பண்பறு பீலி யோடு வெங்கழு வேற ... அழகற்ற மயிற்பீலியோடு கொடிய கழுவில் ஏறச் செய்தும், ஓது பண்டித ஞான நீறு தருவோனே ... பதிகங்களைப் பாடி அருளிய பண்டிதனே, ஞானத் திருநீற்றை தந்தருளிய திருஞானசம்பந்தனே, குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு ... யானைகளும், யாளிகளும் வசிக்கும் பசுமையான தினைப்புனக் கொல்லையிலே திரிகின்ற குன்றவர் சாதி கூடி வெறியாடி ... வேடர் கூட்டங்கள் ஒன்று கூடி வெறி ஆட்டம் ஆடி கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு ... உன்னை வணங்க, அவர்கள் விரும்பும் உலக வாழ்வை நல்கி வீறு குன்றுதோ றாடல் மேவு பெருமாளே. ... பெருமைமிக்குச் சிறந்து, மலைகளில் எல்லாம் திருவிளையாடல்கள் புரியும் பெருமாளே.