அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக(கா) பாவிகள்
விரகாலே அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள்
அசடரொடு உறவாடிகள் அநியாயக் கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடி கேடிகள்
கருதிடு கொடியாருடன் இனிதாகக் கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை
கழல் இணை பெறவே இனி அருள்வாயே
அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குரு நாதா
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடிவேல் விடும் அதி சூரா
தலை அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண(ம்) நினை வாகா
சகலமும் முதலாகிய அறுபதி நிலைமேவிய தட மயில் தனில் ஏறிய பெருமாளே.
அலை கடலுக்கு ஒப்பாகிய கண்களைக் கொண்டு காம வலையை வீசுபவர்கள், வஞ்சக எண்ணமுடைய மகா பாபிகள், தமது தந்திரத்தாலே பலவிதமான செருக்குடன் தாழ்வான, அநியாயமான பேச்சு பல பேசுபவர்கள், அசட்டு மனிதரோடு உறவு செய்பவர்கள், அநியாயமான வழியில் உடலை விற்கின்ற வேசியர்கள், இளைஞர்களுடைய குடியைக் கெடுப்பவர்கள், (நான்) மனத்தில் விரும்பிய கொடி போன்ற பொதுமகளிருடன் இன்பகரமாகக் கூடி, அவர்களுடைய பாரமான மார்பகங்கள் மேல் விழும் வஞ்சகனும் முழு மூடனுமான என்னை, உனது திருவடியிணையைப் பெறுமாறு இனி அருள்வாயாக. அலை வீசும் கங்கை நீரைத் தலையில் தரித்துள்ள, உயிர்களுக்கு எல்லாம் தலைவனாகிய, சிவபெருமானது மகனான ஆறு முக உருவத்தனே, அருள் பாலிக்கும் குரு நாதனே, அசுரர்கள் குடி அழியும்படியாகவும், தேவர்கள் தமது பொன்னுலகுக்குச் செல்வதற்காகவும், முழங்கும் கூரிய வேலைச் செலுத்திய அதி சூரனே, சிறந்த பிரமன் அறிய மாட்டாத ஒப்பற்ற சிவனுக்குக் குருபரனே என்று பூமியில் அடியார்கள் கூட்டம் நினைக்கின்ற அழகனே, சகல தலங்களுக்கும் முதலாக விளங்கும் ஆறு திருப்பதியில் வீற்றிருக்கும், பெரிய மயில் மேல் ஏறிய, பெருமாளே.
அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக(கா) பாவிகள் ... அலை கடலுக்கு ஒப்பாகிய கண்களைக் கொண்டு காம வலையை வீசுபவர்கள், வஞ்சக எண்ணமுடைய மகா பாபிகள், விரகாலே அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் ... தமது தந்திரத்தாலே பலவிதமான செருக்குடன் தாழ்வான, அநியாயமான பேச்சு பல பேசுபவர்கள், அசடரொடு உறவாடிகள் அநியாயக் கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடி கேடிகள் ... அசட்டு மனிதரோடு உறவு செய்பவர்கள், அநியாயமான வழியில் உடலை விற்கின்ற வேசியர்கள், இளைஞர்களுடைய குடியைக் கெடுப்பவர்கள், கருதிடு கொடியாருடன் இனிதாகக் கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை ... (நான்) மனத்தில் விரும்பிய கொடி போன்ற பொதுமகளிருடன் இன்பகரமாகக் கூடி, அவர்களுடைய பாரமான மார்பகங்கள் மேல் விழும் வஞ்சகனும் முழு மூடனுமான என்னை, கழல் இணை பெறவே இனி அருள்வாயே ... உனது திருவடியிணையைப் பெறுமாறு இனி அருள்வாயாக. அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குரு நாதா ... அலை வீசும் கங்கை நீரைத் தலையில் தரித்துள்ள, உயிர்களுக்கு எல்லாம் தலைவனாகிய, சிவபெருமானது மகனான ஆறு முக உருவத்தனே, அருள் பாலிக்கும் குரு நாதனே, அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடிவேல் விடும் அதி சூரா ... அசுரர்கள் குடி அழியும்படியாகவும், தேவர்கள் தமது பொன்னுலகுக்குச் செல்வதற்காகவும், முழங்கும் கூரிய வேலைச் செலுத்திய அதி சூரனே, தலை அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண(ம்) நினை வாகா ... சிறந்த பிரமன் அறிய மாட்டாத ஒப்பற்ற சிவனுக்குக் குருபரனே என்று பூமியில் அடியார்கள் கூட்டம் நினைக்கின்ற அழகனே, சகலமும் முதலாகிய அறுபதி நிலைமேவிய தட மயில் தனில் ஏறிய பெருமாளே. ... சகல தலங்களுக்கும் முதலாக விளங்கும் ஆறு திருப்பதியில் வீற்றிருக்கும், பெரிய மயில் மேல் ஏறிய, பெருமாளே.