நெருக்கமாக வளர்கிற செம்மையான செங்கழுநீர்மலர் (தினமும் மலரும் சுனையுடன்) இருக்கும் திருத்தணிகை மலையும், மற்றும் அத்தணிகை மலைக்குச் சமமான மற்றத் தலங்களும், கிரெளஞ்ச மலையைப் பிளக்கக் கற்றுக்கொண்ட ஒப்பற்ற செவ்வொளியுடன் கூடிய வேலும், திரண்ட பன்னிரு தோள்கள் கொத்தாக உள்ள எல்லாமும், தெளிவாக நெஞ்சத்திலே தரிசனம் செய்து அறிவு பெற்று, மயக்கம் நிறைந்துள்ள இந்த உலகை நீர்க்குமிழிக்கு சமமானது என்று ஆராய்ந்து உணரும் அறிவை அடைந்து, சிவபிரானுக்கு பற்றற்ற பிரணவப் பொருளை உபதேசித்த கடவுள் நீ என்றும், அடியார்க்கு அச்சத்தை அகற்றி அன்பை அருள்பவன் நீ என்றும், அழகிய கச்சியில் (காஞ்சீபுரத்தில்) நின்றருளும் பெருமான் நீ என்றும், நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று, மனத்தின் செயலெல்லாம் நீங்கப் பெற்று, அந்த நிலையில் எட்டப் படுவதான பொருளைச் சென்று அடைகின்ற மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ? வாமன வடிவமாகிக் குறுகி, ஆனால் சொல்லப்படும் யாவரினும் பெரியவர் ஆனவரும், கல்வி கற்றுக் கொடுக்கவந்த சுக்கிராச்சாரியார் உள்ளம் நடுநடுங்கி அஞ்சும்படி, உண்மையையே உரைத்த சிறு குழந்தை பிரகலாதனின் மழலைச் சொல்லிற்கு எதிர்வாதம் பேசிய ஹிரண்யனுடைய உடலைக் குத்தி, மாமிசம் நிறைந்த சிவந்த குடலைப் பிடுங்கி, எட்டுத் திசைகளிலும் பிடறி மயிர் பறக்கும் சிங்க முகத்தை உடைய நரசிம்மரும், முரன் என்ற அரக்கனைக் கொன்ற முராரியும், ஒளிவீசும் படப் பொறிகளை உடைய பாம்பு ஆதிசேஷன் மீது துயில்பவரும், சக்ராயுதத்தைக் கையிலே தாங்கும் மலை போன்றவரும், தூய மேகம் போன்ற அழகிய நிறத்தை உடையவரும், உலகுக்கெல்லாம் தந்தையும், பாஞ்ச ஜன்யம் என்ற பரிசுத்தமான சங்கைக் கரத்திலே கொண்டவரும், (காளிங்கன் என்ற பாம்பின் தலையில்) நடனமாடியவரும், பழமையான (மோகினி) வடிவத்தைப் பெற்று இளம்பெண்ணாக வந்தவரும், புகழப் பெறும் நீல மேகம் போன்ற நிறத்தினருமாகிய திருமாலுக்கு வீடு பேற்றினைத் தந்தருளிய பெருமாளே.