விரும்பிப் பிடிக்கவந்த கேது என்ற விஷப்பாம்பு தன்னை மென்று வெளிவிட்ட காரணத்தால், தானும் ஒரு விஷப்பாம்பு போல என் மீது நஞ்சை உமிழ்கின்ற, கறை படிந்த நிலவாலும், சங்குகள் செய்யும் பேரொலியோடும், மேகங்கள் முழக்கும் இடியின் ஒலியினோடும், விசேஷமான அலைகளை வீசும் கடலாலும், பக்தியும் தெளிவும் இல்லாமல், ஆசையுடன் மட்டும் வந்திருக்கிறேன் எனச் சொல்லி வந்திருக்கிற இச் சிறு பெண்ணாகிய அடியாள் மனம் நொந்து உடல் மெலியாமல், எத்தனையோ எண்ணங்களை மனதிற் கொண்டு, முயற்சிகளை மேற்கொண்டு செய்பவளாகிய என்னை இந்த அளவிலேயே அஞ்சல் எனக்கூறி அருள வேண்டும். பச்சை மயிலை வாகனமாகக் கொண்டு, பச்சை நிறமான வேடப் பெண் வள்ளியுடன் பசுமை வாய்ந்த மலையிடங்களில் எல்லாம் வாழ்பவனே, பக்தியில் நிலைத்து முறை தவறாமல் வழிபடும் அன்பர்கள் பூஜிக்கிற இலை, பூக்களை அணிந்த திருவடிகளை உடையோனே, ரவிக்கை அணிந்த, இளம் தென்னங் குரும்பு போன்ற மார்பினரைக் கைத்து வெறுத்தவர்களாகிய பெரியோர் விரும்பும் கச்சியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் ஒளி வேலனே, கற்பகக் காட்டை உடையவர்களும், நீதி நெறியை மனத்தில் கொண்டவர்களுமாகிய தேவர்களின் கை விலங்குகளை அவிழ்த்தெறிந்த பெருமாளே.
நச்சு அரவ மென்று நச்சரவ மென்று ... விரும்பிப் பிடிக்கவந்த கேது என்ற விஷப்பாம்பு தன்னை மென்று வெளிவிட்ட காரணத்தால், தானும் ஒரு விஷப்பாம்பு போல நச்சுமிழ்க ளங்க மதியாலும் ... என் மீது நஞ்சை உமிழ்கின்ற, கறை படிந்த நிலவாலும், நத்தொடுமுழங்கு கனத்தொடுமுழங்கு ... சங்குகள் செய்யும் பேரொலியோடும், மேகங்கள் முழக்கும் இடியின் ஒலியினோடும், நத்திரைவ ழங்கு கடலாலும் ... விசேஷமான அலைகளை வீசும் கடலாலும், இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த ... பக்தியும் தெளிவும் இல்லாமல், ஆசையுடன் மட்டும் வந்திருக்கிறேன் எனச் சொல்லி வந்திருக்கிற இச்சிறுமி நொந்து மெலியாதே ... இச் சிறு பெண்ணாகிய அடியாள் மனம் நொந்து உடல் மெலியாமல், எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி ... எத்தனையோ எண்ணங்களை மனதிற் கொண்டு, முயற்சிகளை மேற்கொண்டு செய்பவளாகிய என்னை இத்தனையில் அஞ்சலெனவேணும் ... இந்த அளவிலேயே அஞ்சல் எனக்கூறி அருள வேண்டும். பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை ... பச்சை மயிலை வாகனமாகக் கொண்டு, பச்சை நிறமான வேடப் பெண் வள்ளியுடன் பச்சைமலை யெங்கும் உறைவோனே ... பசுமை வாய்ந்த மலையிடங்களில் எல்லாம் வாழ்பவனே, பத்தியுட னின்று பத்திசெயும் அன்பர் ... பக்தியில் நிலைத்து முறை தவறாமல் வழிபடும் அன்பர்கள் பத்திரம ணிந்த கழலோனே ... பூஜிக்கிற இலை, பூக்களை அணிந்த திருவடிகளை உடையோனே, கச்சிவர் குரும்பை கச்சவர் விரும்பு ... ரவிக்கை அணிந்த, இளம் தென்னங் குரும்பு போன்ற மார்பினரைக் கைத்து வெறுத்தவர்களாகிய பெரியோர் விரும்பும் கச்சியில மர்ந்த கதிர்வேலா ... கச்சியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் ஒளி வேலனே, கற்பக வனங்கொள் கற்பு அக விசும்பர் ... கற்பகக் காட்டை உடையவர்களும், நீதி நெறியை மனத்தில் கொண்டவர்களுமாகிய தேவர்களின் கைத்தளைக ளைந்த பெருமாளே. ... கை விலங்குகளை அவிழ்த்தெறிந்த பெருமாளே.