உரைக் காரிகைப் பால் எனக்கே முதல் பேர்
உனக்கோ மடல் கோவை ஒன்று பாட
உழப்பாது இபக் கோடு எழுத்தாணியைத் தேடி
உனைப் பாரில் ஒப்பார்கள் கண்டிலன் யான்
குரைக்கு ஆன வித்யா கவிப் பூபருக்கே குடிக்காண்
முடிப்போடு கொண்டு வா பொன் குலப் பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய்
எனக் கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ
அரைக்கு ஆடை சுற்றார் தமிழ்க் கூடலில் போய்
அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு அறத்தாய் எனப் பேர் படைத்தாய்
புனல் சேல் அறப் பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே
திரைக் காவிரிக்கே கரைக் கானகத்தே சிவ த்யானம் உற்றோர் சிலந்தி நூல் செய்
திருக் காவணத்தே இருப்பார் அருள் கூர்
திருச் சாலகச் சோதி தம்பிரானே.
சொல்லப்டுகின்ற காரிகை என்னும் யாப்பிலக்கண நூலில் (நிபுணர் என்னும்) முதலான பேர் எனக்குத் தான். உன் பேரில் (96 சிற்றிலக்கிய பிரபந்த வகைகளில்) ஒன்றான மடல் கோவையில் கவி ஒன்று பாடுவதற்கு, காலம் தாமதிக்காமல், யானையின் தந்தப் பிடி அமைந்த எழுத்தாணியைத் தேடி எடுத்து, உலகத்தில் உன்னை நிகரானவர்கள் யாரையும் நான் கண்டதில்லை, பெருமைக்கு உரிய வித்தை வல்ல கவி அரசர்களுக்கு நீ ஒரு புகலிடமாக விளங்குகிறாய், பண முடிச்சோடு பொற் காசுகளைக் கொண்டு வா, சிறந்த ஆபரணங்களையும் ரத்தினம் முதலியவற்றையும் அழகிய ஆடைகளையும் எடுத்துக் கொண்டு வா, என்றெல்லாம் சொல்லிப் புகழும் துன்பத்தில் நான் அகப்பட்டு, மதிப்பு குன்றி வாழ்வேனோ? இடுப்பில் ஆடையைச் சுற்றாது (கோரைப்புல்லைச் சுற்றும்) சமணர்கள் வாழ்ந்த, தமிழ் வளர்ந்த மதுரைத் தலத்துக்கு (திருஞான சம்பந்தராகச்) சென்று, அங்கே (அவர்களை வாதில் வெல்ல) நெருப்பிலும், நீரிலும் (தேவாரங்கள்) எழுதப்பட்ட ஏட்டினை இட்டு, அறச் செல்வன் என்னும் புகழைக் கொண்டாய். நீரில் சேல் மீன்கள் நிரம்பப் பாய்கின்ற வயல்களின் கீழ்ப்புறத்தில் வீற்றிருக்கும் செவ்வேளே, அலைகள் வீசும் காவிரியின் கரையில் இருந்த காட்டில் சிவத் தியானம் நிறைந்திருந்த சிலந்திப் பூச்சியின் நூலால் அமைக்கப் பெற்ற (திருவானைக்காவின்) அழகிய பந்தலின் கீழ் இருந்து வரும், அருள் மிக்க அழகிய சிலந்தி வலைக் கீழ் விளங்குபவரான ஜோதி சொரூபமான சிவபிரானின் தலைவனே.
உரைக் காரிகைப் பால் எனக்கே முதல் பேர் ... சொல்லப்டுகின்ற காரிகை என்னும் யாப்பிலக்கண நூலில் (நிபுணர் என்னும்) முதலான பேர் எனக்குத் தான். உனக்கோ மடல் கோவை ஒன்று பாட ... உன் பேரில் (96 சிற்றிலக்கிய பிரபந்த வகைகளில்) ஒன்றான மடல் கோவையில் கவி ஒன்று பாடுவதற்கு, உழப்பாது இபக் கோடு எழுத்தாணியைத் தேடி ... காலம் தாமதிக்காமல், யானையின் தந்தப் பிடி அமைந்த எழுத்தாணியைத் தேடி எடுத்து, உனைப் பாரில் ஒப்பார்கள் கண்டிலன் யான் ... உலகத்தில் உன்னை நிகரானவர்கள் யாரையும் நான் கண்டதில்லை, குரைக்கு ஆன வித்யா கவிப் பூபருக்கே குடிக்காண் ... பெருமைக்கு உரிய வித்தை வல்ல கவி அரசர்களுக்கு நீ ஒரு புகலிடமாக விளங்குகிறாய், முடிப்போடு கொண்டு வா பொன் குலப் பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய் ... பண முடிச்சோடு பொற் காசுகளைக் கொண்டு வா, சிறந்த ஆபரணங்களையும் ரத்தினம் முதலியவற்றையும் அழகிய ஆடைகளையும் எடுத்துக் கொண்டு வா, எனக் கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ ... என்றெல்லாம் சொல்லிப் புகழும் துன்பத்தில் நான் அகப்பட்டு, மதிப்பு குன்றி வாழ்வேனோ? அரைக்கு ஆடை சுற்றார் தமிழ்க் கூடலில் போய் ... இடுப்பில் ஆடையைச் சுற்றாது (கோரைப்புல்லைச் சுற்றும்) சமணர்கள் வாழ்ந்த, தமிழ் வளர்ந்த மதுரைத் தலத்துக்கு (திருஞான சம்பந்தராகச்) சென்று, அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு அறத்தாய் எனப் பேர் படைத்தாய் ... அங்கே (அவர்களை வாதில் வெல்ல) நெருப்பிலும், நீரிலும் (தேவாரங்கள்) எழுதப்பட்ட ஏட்டினை இட்டு, அறச் செல்வன் என்னும் புகழைக் கொண்டாய். புனல் சேல் அறப் பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே ... நீரில் சேல் மீன்கள் நிரம்பப் பாய்கின்ற வயல்களின் கீழ்ப்புறத்தில் வீற்றிருக்கும் செவ்வேளே, திரைக் காவிரிக்கே கரைக் கானகத்தே சிவ த்யானம் உற்றோர் சிலந்தி நூல் செய் ... அலைகள் வீசும் காவிரியின் கரையில் இருந்த காட்டில் சிவத் தியானம் நிறைந்திருந்த சிலந்திப் பூச்சியின் நூலால் அமைக்கப் பெற்ற திருக் காவணத்தே இருப்பார் அருள் கூர் ... (திருவானைக்காவின்) அழகிய பந்தலின் கீழ் இருந்து வரும், அருள் மிக்க திருச் சாலகச் சோதி தம்பிரானே. ... அழகிய சிலந்தி வலைக் கீழ் விளங்குபவரான ஜோதி சொரூபமான சிவபிரானின் தலைவனே.