கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர்
பிசித அசன மறவர் இவர் முதலிய
கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி
கல கல என நெறி கெட முறை முறை முறை கதறி
வதறிய குதறிய
கலை கொடு கருத அரியதை
விழி புனல் வர மொழி குழறா
அன்பு உருகி உனது அருள் பரவு வகை வரில்
விரகு ஒழியில் உலக இயல் பிணை விடில்
உரை செயல் உணர்வு கெடில்
உயிர் புணர் இருவினை அளறு அது போக உதறில்
எனது எனும் மலம் அறில்
அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது
ஒரு உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு நாளே
தருண சத தள பரிமள பரிபுர சரணி
தமனிய தநு தரி திரி புர தகனி
கவுரி பவதி பகவதி பயிரவி சூலி
சடில தரி அநுபவை உமை திரி புரை
சகல புவனமும் உதவிய பதிவ்ருதை
சமய முதல்வி தனய பகிரதி சுத
சத கோடி அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை
வருணித தனுபர குருபர
அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே
அடவி சரர் குல மரகத வனிதையும்
அமரர் குமரியும் அனவரதமும் அருகு அழகு பெற நிலை பெற
வரம் அருளிய பெருமாளே.
கருணை என்பதே சிறிதும் இல்லாது, தலை மயிர் பறிப்பவரும், அரக்கர்களுக்கு ஒப்பானவரும், புலால் உண்ணும் வேடர்களை ஒத்தவரும் ஆகிய சமணர் முதலிய வெகுவான பர சமய வாதிகள் பலரும் கலகங்கள் செய்தும், விபரீத உணர்ச்சியால் மாறுபட்டும், ஒன்று சேர்ந்து, ஆரவாரம் செய்து நீதி முறை கெட்டு, அவரவர் முறை வரும் போதெல்லாம் பெருங் கூச்சலிட்டுக் கதறி, வாயாடி, திட்டி, பண்பு தவறிப் பேசுகின்ற ஒன்றை, கலை நூல்களால் கருதவும் அரிதான மெய்ப் பொருளை, கண்களில் நீர் வர, பேச்சுக் குழறி, அன்புடன் மனம் உருகி உன் திருவருளைப் போற்றும் மன நிலை வந்தால், தந்திர புத்தி ஒழிந்தால், உலக சம்பந்தமான கட்டுக்கள் விட்டால், மனம், வாக்கு, காயம் இம் மூன்றின் தொழிலும் அழிந்தால், உயிரைச் சார்ந்து ஆட்டுவிக்கும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி உதறி விலக்கினால், எனது என்னும் ஆசையாகிய குற்றம் அற்றுப் போனால், அறிவில் எளிதாகப் பெறுதல் முடியும் என்று வேதங்கள் பறையறைந்து சொல்லுவதான அதனை, ஒப்பற்ற, தோற்றமும் முடிவும் இல்லாத பொருளை அடியேனுக்கு நீ அருள் செய்யும் ஒரு நாள் கிட்டுமா? என்றும் இளமையோடு கூடியதாய், தாமரை போன்றதாய், நறு மணம் வீசுவதாய், சிலம்பு அணிந்ததாயுள்ள திருவடிகளை உடையவள், பொன் மயமான மேருவை வில்லாக ஏந்தியவள், திரி புரத்தை எரித்தவள், கெளரி, பார்வதி, பகவதி, பயிரவி, சூலத்தைக் கையில் ஏந்தியவள், சடை தரித்தவள், போகங்களை நுகர்பவள், உமா தேவி, திரிபுரை, எல்லா உலகங்களையும் ஈன்றருளிய பதிவிரதை, எல்லா சமயங்களுக்கும் தலைவியும் ஆன பார்வதியின் மகனே, பாகீரதியின் (கங்கையின்) மகனே, நூறு கோடி சிவந்த சூரியர்களை விட அழகான ஒளியை வீசும் கருணையே, அலங்கார உருவான உடலை உடையவனே, குருபரனே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சரவணனே, குரா மலரை அணிந்த புயங்களை உடைய தலைவனே, காட்டில் சஞ்சரிக்கும் வேடர் குலத்து, பச்சை நிறம் உள்ள பெண்ணான வள்ளியும், தேவர் குமரியான தேவயானையும் எப்போதும் இரு பக்கத்திலும் அழகு விளங்க நிலை பெற்றிருக்க, அவர்களுக்கு வரம் தந்தருளிய பெருமாளே.
கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர் ... கருணை என்பதே சிறிதும் இல்லாது, தலை மயிர் பறிப்பவரும், அரக்கர்களுக்கு ஒப்பானவரும், பிசித அசன மறவர் இவர் முதலிய ... புலால் உண்ணும் வேடர்களை ஒத்தவரும் ஆகிய சமணர் முதலிய கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி ... வெகுவான பர சமய வாதிகள் பலரும் கலகங்கள் செய்தும், விபரீத உணர்ச்சியால் மாறுபட்டும், ஒன்று சேர்ந்து, கல கல என நெறி கெட முறை முறை முறை கதறி ... ஆரவாரம் செய்து நீதி முறை கெட்டு, அவரவர் முறை வரும் போதெல்லாம் பெருங் கூச்சலிட்டுக் கதறி, வதறிய குதறிய ... வாயாடி, திட்டி, பண்பு தவறிப் பேசுகின்ற ஒன்றை, கலை கொடு கருத அரியதை ... கலை நூல்களால் கருதவும் அரிதான மெய்ப் பொருளை, விழி புனல் வர மொழி குழறா ... கண்களில் நீர் வர, பேச்சுக் குழறி, அன்பு உருகி உனது அருள் பரவு வகை வரில் ... அன்புடன் மனம் உருகி உன் திருவருளைப் போற்றும் மன நிலை வந்தால், விரகு ஒழியில் உலக இயல் பிணை விடில் ... தந்திர புத்தி ஒழிந்தால், உலக சம்பந்தமான கட்டுக்கள் விட்டால், உரை செயல் உணர்வு கெடில் ... மனம், வாக்கு, காயம் இம் மூன்றின் தொழிலும் அழிந்தால், உயிர் புணர் இருவினை அளறு அது போக உதறில் ... உயிரைச் சார்ந்து ஆட்டுவிக்கும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி உதறி விலக்கினால், எனது எனும் மலம் அறில் ... எனது என்னும் ஆசையாகிய குற்றம் அற்றுப் போனால், அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது ... அறிவில் எளிதாகப் பெறுதல் முடியும் என்று வேதங்கள் பறையறைந்து சொல்லுவதான அதனை, ஒரு உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு நாளே ... ஒப்பற்ற, தோற்றமும் முடிவும் இல்லாத பொருளை அடியேனுக்கு நீ அருள் செய்யும் ஒரு நாள் கிட்டுமா? தருண சத தள பரிமள பரிபுர சரணி ... என்றும் இளமையோடு கூடியதாய், தாமரை போன்றதாய், நறு மணம் வீசுவதாய், சிலம்பு அணிந்ததாயுள்ள திருவடிகளை உடையவள், தமனிய தநு தரி திரி புர தகனி ... பொன் மயமான மேருவை வில்லாக ஏந்தியவள், திரி புரத்தை எரித்தவள், கவுரி பவதி பகவதி பயிரவி சூலி ... கெளரி, பார்வதி, பகவதி, பயிரவி, சூலத்தைக் கையில் ஏந்தியவள், சடில தரி அநுபவை உமை திரி புரை ... சடை தரித்தவள், போகங்களை நுகர்பவள், உமா தேவி, திரிபுரை, சகல புவனமும் உதவிய பதிவ்ருதை ... எல்லா உலகங்களையும் ஈன்றருளிய பதிவிரதை, சமய முதல்வி தனய பகிரதி சுத ... எல்லா சமயங்களுக்கும் தலைவியும் ஆன பார்வதியின் மகனே, பாகீரதியின் (கங்கையின்) மகனே, சத கோடி அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை ... நூறு கோடி சிவந்த சூரியர்களை விட அழகான ஒளியை வீசும் கருணையே, வருணித தனுபர குருபர ... அலங்கார உருவான உடலை உடையவனே, குருபரனே, அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே ... திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சரவணனே, குரா மலரை அணிந்த புயங்களை உடைய தலைவனே, அடவி சரர் குல மரகத வனிதையும் ... காட்டில் சஞ்சரிக்கும் வேடர் குலத்து, பச்சை நிறம் உள்ள பெண்ணான வள்ளியும், அமரர் குமரியும் அனவரதமும் அருகு அழகு பெற நிலை பெற ... தேவர் குமரியான தேவயானையும் எப்போதும் இரு பக்கத்திலும் அழகு விளங்க நிலை பெற்றிருக்க, வரம் அருளிய பெருமாளே. ... அவர்களுக்கு வரம் தந்தருளிய பெருமாளே.