விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அ(ல்)ல தழல் முழுகிய சரம் என விரை செய் ம்ருகமத அளகமும் முகில் அ(ல்)ல ஒரு ஞான விழியின் வழி கெட இருள்வது இருள் என
மொழியும் அமுது அ(ல்)ல உயிர் கவர் வலை என விழையும் இள நகை தளவு அ(ல்)ல களவு என வியன் நாபித் தடமும் மடு அ(ல்)ல படு குழி என
இடை துடியும் அ(ல்)ல மதன் உரு என வன முலை சயிலம் அ(ல்)ல கொலை யமன் என முலை மிசை புரள் கோவை தரளம் மணி அ(ல்)ல யமன் விடு கயிறு என
மகளிர் மகளிரும் அ(ல்)ல வினை கொ(ண்)டு சமையும் உரு என உணர்வொடு புணர்வதும் ஒரு நாளே
அடவி வனிதையர் தனது இரு பரிபுர சரண மலர் அடி மலர் கொ(ண்)டு வழி பட
அசல(ம்) மிசை விளை புனம் அதில் இனிது உறை தனி மானும் அமரர் அரிவையும் இரு புடையினும் வர
முகர(ம்) முக படம் கவள(ம்) தவள கர அசல(ம்) மிசை வரும் அபிநவ
கலவியும் விளையாடும் கடக(ம்) புளகித புய கிரி சமுக விகட அக
கச ரத துரகத நிசிசரர் கடக பயிரவ கயிரவ மலர்களும் எரி தீயும் கருக ஒளி விடு தனு
பர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர் கருணை உமை தரு சரவண சுரபதி பெருமாளே.
விஷமும் அமுதமும் ஒன்று சேர்ந்து விளங்குகின்ற இரண்டு கண்களும் தாமரைகள் அல்ல, நெருப்பில் தோய்த்த அம்புகளாம் என்றும், நறு மணம் கமழும் கஸ்தூரி வாசனை கொண்ட கூந்தல் கரு மேகம் அல்ல, ஒப்பற்ற ஞான விழி நாடும் வழியை மறைக்கும் சூனியத்தைத் தரும் தனி இருளாம் என்றும், பேச்சும் அமுதம் அன்று, உயிரையே கவரும் வலை என்றும், விரும்பும் காமத்தை ஊட்டும் பற்கள் முல்லை அரும்பு அன்று, திருட்டுத்தனத்தைத் தம்மிடம் ஒளித்து வைத்துள்ளவை என்றும், வியப்பைத் தரும் தொப்புள் என்னும் இடமும் ஆற்றிடைப் பள்ளம் அன்று, (யானைகளைப் பிடிக்க அமைந்த) பெருங்குழியாம் என்றும், இடை உடுக்கை அன்று, மன்மதனின் உருவமாம் என்றும் (அதாவது அருவமானது), அழகிய மார்பகம் மலை அன்று, கொலை செய்யும் யமனே என்றும், மார்பிலே புரளுகின்ற கோத்த வடம் முத்து மாலை அன்று, யமன் விட்ட பாசக் கயிறே ஆகும் என்றும், இந்த விலைமாதர்கள் மாதர்களே அல்ல, பல வினைகள் சேர்ந்து அமைந்த உருவமே என்றும் காண வல்ல ஞான உணர்ச்சியோடு கலப்பதாகிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? வன தேவதைகள் உன்னுடைய இரண்டு சிலம்பணிந்த, அடைக்கலம் புகத் தக்க, தாமரைத் திருவடிகளை மலர் கொண்டு வழிபட, வள்ளிமலைக்கு அருகிலே விளைந்துள்ள தினைப் புனத்தில் இனிது அமர்ந்திருந்த ஒப்பற்ற மான் போன்ற வள்ளியும், தேவர்கள் வளர்த்த மகளாகிய தேவயானையும் இரண்டு பக்கங்களிலும் வர, பிளிறுவதும், முகத்தில் தொங்கும் அலங்காரத் துணி கொண்டதும், உணவு உண்டைகளை உட்கொள்வதும், வெண்ணிறம் கொண்டதும், துதிக்கை உடையதுமான மலை போன்ற யானையின் மீது எழுந்தருளும் புதுமை வாய்ந்தவனே, (வள்ளி, தேவயானையுடன்) சேர்க்கை இன்பத்தில் விளையாடுகின்றனவும், கங்கணம் அணிந்தனவும், புளகிதம் கொண்டுள்ளனவுமாகிய புய மலைக் கூட்டத்தை உடைய அழகு வாய்ந்த உள்ளத்தவனே, அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகியவைகளுக்கு பயங்கரத்தை ஊட்டுபவனே, செவ்வாம்பல் மலர்களும், எரிகின்ற தீயும் கருகும்படி சிவந்த ஒளியை வீசுகின்ற உடலை உடையவனே, மேலான கெளதமர் என்னும் பரிசுத்தமான முனிவர் தொழுது பூசிக்க, திருவண்ணாமலையில் அற நெறியை வளர்த்த கருணை நிறைந்த உமா தேவி பெற்றருளிய சரவண பவனே, தேவர்கள் தலைவனாகிய இந்திரனுக்குப் பெருமாளே.
விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அ(ல்)ல தழல் முழுகிய சரம் என விரை செய் ம்ருகமத அளகமும் முகில் அ(ல்)ல ஒரு ஞான விழியின் வழி கெட இருள்வது இருள் என ... விஷமும் அமுதமும் ஒன்று சேர்ந்து விளங்குகின்ற இரண்டு கண்களும் தாமரைகள் அல்ல, நெருப்பில் தோய்த்த அம்புகளாம் என்றும், நறு மணம் கமழும் கஸ்தூரி வாசனை கொண்ட கூந்தல் கரு மேகம் அல்ல, ஒப்பற்ற ஞான விழி நாடும் வழியை மறைக்கும் சூனியத்தைத் தரும் தனி இருளாம் என்றும், மொழியும் அமுது அ(ல்)ல உயிர் கவர் வலை என விழையும் இள நகை தளவு அ(ல்)ல களவு என வியன் நாபித் தடமும் மடு அ(ல்)ல படு குழி என ... பேச்சும் அமுதம் அன்று, உயிரையே கவரும் வலை என்றும், விரும்பும் காமத்தை ஊட்டும் பற்கள் முல்லை அரும்பு அன்று, திருட்டுத்தனத்தைத் தம்மிடம் ஒளித்து வைத்துள்ளவை என்றும், வியப்பைத் தரும் தொப்புள் என்னும் இடமும் ஆற்றிடைப் பள்ளம் அன்று, (யானைகளைப் பிடிக்க அமைந்த) பெருங்குழியாம் என்றும், இடை துடியும் அ(ல்)ல மதன் உரு என வன முலை சயிலம் அ(ல்)ல கொலை யமன் என முலை மிசை புரள் கோவை தரளம் மணி அ(ல்)ல யமன் விடு கயிறு என ... இடை உடுக்கை அன்று, மன்மதனின் உருவமாம் என்றும் (அதாவது அருவமானது), அழகிய மார்பகம் மலை அன்று, கொலை செய்யும் யமனே என்றும், மார்பிலே புரளுகின்ற கோத்த வடம் முத்து மாலை அன்று, யமன் விட்ட பாசக் கயிறே ஆகும் என்றும், மகளிர் மகளிரும் அ(ல்)ல வினை கொ(ண்)டு சமையும் உரு என உணர்வொடு புணர்வதும் ஒரு நாளே ... இந்த விலைமாதர்கள் மாதர்களே அல்ல, பல வினைகள் சேர்ந்து அமைந்த உருவமே என்றும் காண வல்ல ஞான உணர்ச்சியோடு கலப்பதாகிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? அடவி வனிதையர் தனது இரு பரிபுர சரண மலர் அடி மலர் கொ(ண்)டு வழி பட ... வன தேவதைகள் உன்னுடைய இரண்டு சிலம்பணிந்த, அடைக்கலம் புகத் தக்க, தாமரைத் திருவடிகளை மலர் கொண்டு வழிபட, அசல(ம்) மிசை விளை புனம் அதில் இனிது உறை தனி மானும் அமரர் அரிவையும் இரு புடையினும் வர ... வள்ளிமலைக்கு அருகிலே விளைந்துள்ள தினைப் புனத்தில் இனிது அமர்ந்திருந்த ஒப்பற்ற மான் போன்ற வள்ளியும், தேவர்கள் வளர்த்த மகளாகிய தேவயானையும் இரண்டு பக்கங்களிலும் வர, முகர(ம்) முக படம் கவள(ம்) தவள கர அசல(ம்) மிசை வரும் அபிநவ ... பிளிறுவதும், முகத்தில் தொங்கும் அலங்காரத் துணி கொண்டதும், உணவு உண்டைகளை உட்கொள்வதும், வெண்ணிறம் கொண்டதும், துதிக்கை உடையதுமான மலை போன்ற யானையின் மீது எழுந்தருளும் புதுமை வாய்ந்தவனே, கலவியும் விளையாடும் கடக(ம்) புளகித புய கிரி சமுக விகட அக ... (வள்ளி, தேவயானையுடன்) சேர்க்கை இன்பத்தில் விளையாடுகின்றனவும், கங்கணம் அணிந்தனவும், புளகிதம் கொண்டுள்ளனவுமாகிய புய மலைக் கூட்டத்தை உடைய அழகு வாய்ந்த உள்ளத்தவனே, கச ரத துரகத நிசிசரர் கடக பயிரவ கயிரவ மலர்களும் எரி தீயும் கருக ஒளி விடு தனு ... அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகியவைகளுக்கு பயங்கரத்தை ஊட்டுபவனே, செவ்வாம்பல் மலர்களும், எரிகின்ற தீயும் கருகும்படி சிவந்த ஒளியை வீசுகின்ற உடலை உடையவனே, பர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர் கருணை உமை தரு சரவண சுரபதி பெருமாளே. ... மேலான கெளதமர் என்னும் பரிசுத்தமான முனிவர் தொழுது பூசிக்க, திருவண்ணாமலையில் அற நெறியை வளர்த்த கருணை நிறைந்த உமா தேவி பெற்றருளிய சரவண பவனே, தேவர்கள் தலைவனாகிய இந்திரனுக்குப் பெருமாளே.