கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர்
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல
திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு திலத மணிமுக அழகு சுழலிகள்
இதழ் ஊறல் திரையில் அமுதென கழைகள் பல சுளை எனவும் அவர் மயல் தழுவும் அசடனை திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய்
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் குரை செய் முரசமொடு அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என குமுற
திமிலை சலரி கி(ன்)னரி முதல் இவை பாட அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதம் உற
அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா
அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் அருண கிரி குற மகளை மருவிய பெருமாளே.
நிறைந்த வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அவிழ்ந்து சரிய, புளகிதம் கொண்ட பொன் மயமான மலையைப் போன்ற மார்பகங்கள் அசைய, போரிடுவது போன்ற கண்கள் அம்புகள் என்னும்படியாக விளங்க, நெற்றி புரள, ஆடையை நெகிழ விடுகின்ற விலைமாதர்கள், கழுத்தில் கரிய மணி மாலை புரள்வதால் அருமையான ஜோதி ஒளி பரவ, இரண்டு குண்டலங்களும் அசைய, ஒளி விளக்கமுள்ள பொன்னாலாகிய வளையல்கள் கலகல என ஒலிக்க, மயில் போல நடை பயிற்றுபவர்கள், பூசப்பட்ட சாரமான புனுகு சட்டம் ஒழுகும்படி வீதியில் அலைய, விற்கப்படும் மார்பு வெளித்தோன்ற காமப் பற்றுடன் நெற்றிப் பொட்டு அணிந்துள்ள முக அழகுடன் அங்குமிங்கும் திரிபவர்களாகிய விலைமாதர்களின் வாயிதழ் ஊறலை பாற்கடலில் எடுத்த அமுதே இது என்றும், கரும்புச் சாறு இது என்றும், பலாப்பழத்தின் சுளை இது என்றும் கருதி, அந்த விலைமாதர்களை மோகத்தில் தழுவுகின்ற முட்டாளாகிய எனது குற்றங்கள், இழிவான குணங்கள், கொலைக்கு ஈடான நீசபுத்தி முதலியவைகள் சிதறி விலக அருள் புரிவாயாக. குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என்னும் ஓசையுடன் தாளங்கள் ஒலி செய்கின்ற முரசு போன்ற போர்ப் பறையுடன் அருமையான வெற்றி ஒலிகள் டமடம டமட டம டமட இவ்வாறு பலத்து ஒலிக்க, திமிலைப் பறை, சல்லரி என்னும் ஜாலரா வகை, கின்னரி என்னும் யாழ்வகை முதலிய வாத்தியங்கள் இசைக்க, தேவர்களும், முனிவர்களும் பிரமனும் மற்றும் எல்லாரும் தேன் நிறைந்த பூக்களோடு வணங்கி தத்தம் பதவிகளைப் பெற, அசுரர்களின் குதிரை, யானை, தேர்ப்படைகள் உடைபட்டு ஒழியவும் வேலாயுதத்தைச் செலுத்தியவனே, எல்லா உலகங்களும் எங்கும் ஒளி பெறவும் அழகிய பாதங்களை மயிலின் மேல் இருத்தி, ஒப்பற்ற திருவண்ணாமலையில் குறப் பெண்ணாகிய வள்ளியைச் சேர்ந்த பெருமாளே.
கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர் ... நிறைந்த வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அவிழ்ந்து சரிய, புளகிதம் கொண்ட பொன் மயமான மலையைப் போன்ற மார்பகங்கள் அசைய, போரிடுவது போன்ற கண்கள் அம்புகள் என்னும்படியாக விளங்க, நெற்றி புரள, ஆடையை நெகிழ விடுகின்ற விலைமாதர்கள், கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல ... கழுத்தில் கரிய மணி மாலை புரள்வதால் அருமையான ஜோதி ஒளி பரவ, இரண்டு குண்டலங்களும் அசைய, ஒளி விளக்கமுள்ள பொன்னாலாகிய வளையல்கள் கலகல என ஒலிக்க, மயில் போல நடை பயிற்றுபவர்கள், திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு திலத மணிமுக அழகு சுழலிகள் ... பூசப்பட்ட சாரமான புனுகு சட்டம் ஒழுகும்படி வீதியில் அலைய, விற்கப்படும் மார்பு வெளித்தோன்ற காமப் பற்றுடன் நெற்றிப் பொட்டு அணிந்துள்ள முக அழகுடன் அங்குமிங்கும் திரிபவர்களாகிய விலைமாதர்களின் இதழ் ஊறல் திரையில் அமுதென கழைகள் பல சுளை எனவும் அவர் மயல் தழுவும் அசடனை திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய் ... வாயிதழ் ஊறலை பாற்கடலில் எடுத்த அமுதே இது என்றும், கரும்புச் சாறு இது என்றும், பலாப்பழத்தின் சுளை இது என்றும் கருதி, அந்த விலைமாதர்களை மோகத்தில் தழுவுகின்ற முட்டாளாகிய எனது குற்றங்கள், இழிவான குணங்கள், கொலைக்கு ஈடான நீசபுத்தி முதலியவைகள் சிதறி விலக அருள் புரிவாயாக. குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் குரை செய் முரசமொடு அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என குமுற ... குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என்னும் ஓசையுடன் தாளங்கள் ஒலி செய்கின்ற முரசு போன்ற போர்ப் பறையுடன் அருமையான வெற்றி ஒலிகள் டமடம டமட டம டமட இவ்வாறு பலத்து ஒலிக்க, திமிலை சலரி கி(ன்)னரி முதல் இவை பாட அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதம் உற ... திமிலைப் பறை, சல்லரி என்னும் ஜாலரா வகை, கின்னரி என்னும் யாழ்வகை முதலிய வாத்தியங்கள் இசைக்க, தேவர்களும், முனிவர்களும் பிரமனும் மற்றும் எல்லாரும் தேன் நிறைந்த பூக்களோடு வணங்கி தத்தம் பதவிகளைப் பெற, அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா ... அசுரர்களின் குதிரை, யானை, தேர்ப்படைகள் உடைபட்டு ஒழியவும் வேலாயுதத்தைச் செலுத்தியவனே, அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் அருண கிரி குற மகளை மருவிய பெருமாளே. ... எல்லா உலகங்களும் எங்கும் ஒளி பெறவும் அழகிய பாதங்களை மயிலின் மேல் இருத்தி, ஒப்பற்ற திருவண்ணாமலையில் குறப் பெண்ணாகிய வள்ளியைச் சேர்ந்த பெருமாளே.