கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா
கிலெசம் அது உறு பாழ் வினையாலே கெதி பெற நினையா துதி தனை அறியா
கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே தசை அது மருவீ வசை உடல் உடனே தரணியில் மிகவே உலைவேனோ
சத தள மலர் வார் புணை நின கழலார் தரு நிழல் புகவே தருவாயே
திசை முகவனை நீள் சிறை உற விடுவாய் திரு நெடு கரு மால் மருகோனே
திரி புர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரி புரை அருள் சீர் முருகோனே
நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா நிறை அயில் முடுகா விடுவோனே
நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட சார் பெருமாளே.
(பெண்) யானையின் நடையைக் கொண்ட பொது மகளிருக்கு மனம் வசப்பட்டு, வருத்தம் தருகின்ற பாழான வினைப் பயனால், நல்ல கதியை அடைவதற்கு நினையாமலும், உன்னைத் துதிப்பதை அறியாமலும், அழிவைத் தரும் சிற்றின்பத்தில் ஆழ்ந்து போகின்ற புத்தியினால், சதையைக் கொண்டதும், பழிப்புக்கு இடமானதுமான உடலுடன் பூமியில் மிகவும் அலைவேனோ? நூறு இதழ்களை உடைய தாமரை போன்றதும், பிறவிக் கடலைத் தாண்டத் தெப்பம் போன்றதுமான உனது திருவடி நிரம்பத் தருகின்ற நிழலில் வந்தடைய அருள்வாயாக. நான்முகனான பிரமனை பெரிய சிறைக்குள் புக வைத்தவனே, அழகிய பெரிய கரிய நிறம் கொண்ட திருமாலின் மருகனே, திரிபுரங்களையும் நெருப்பிட்டு அழித்த சிவபெருமானுடைய இடது பாகத்தில் மகிழ்ந்திருக்கும் திரிபுரையாகிய பார்வதி ஈன்ற சிறப்பான குழந்தையே, அசுரர்கள் இருந்த பெரிய கிரெளஞ்ச மலை இரண்டு பிளவாகும்படி வீரம் நிறைந்த வேலை வேகத்துடன் செலுத்தியவனே, பூமியில் புகழ் நிறைந்த தலம் என்னும் பேர் பெற்ற திருவண்ணாமலையில் பெரிய மதிலின் வடப் புறத்தே வீற்றிருக்கும் பெருமாளே.
கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா ... (பெண்) யானையின் நடையைக் கொண்ட பொது மகளிருக்கு மனம் வசப்பட்டு, கிலெசம் அது உறு பாழ் வினையாலே கெதி பெற நினையா துதி தனை அறியா ... வருத்தம் தருகின்ற பாழான வினைப் பயனால், நல்ல கதியை அடைவதற்கு நினையாமலும், உன்னைத் துதிப்பதை அறியாமலும், கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே தசை அது மருவீ வசை உடல் உடனே தரணியில் மிகவே உலைவேனோ ... அழிவைத் தரும் சிற்றின்பத்தில் ஆழ்ந்து போகின்ற புத்தியினால், சதையைக் கொண்டதும், பழிப்புக்கு இடமானதுமான உடலுடன் பூமியில் மிகவும் அலைவேனோ? சத தள மலர் வார் புணை நின கழலார் தரு நிழல் புகவே தருவாயே ... நூறு இதழ்களை உடைய தாமரை போன்றதும், பிறவிக் கடலைத் தாண்டத் தெப்பம் போன்றதுமான உனது திருவடி நிரம்பத் தருகின்ற நிழலில் வந்தடைய அருள்வாயாக. திசை முகவனை நீள் சிறை உற விடுவாய் திரு நெடு கரு மால் மருகோனே ... நான்முகனான பிரமனை பெரிய சிறைக்குள் புக வைத்தவனே, அழகிய பெரிய கரிய நிறம் கொண்ட திருமாலின் மருகனே, திரி புர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரி புரை அருள் சீர் முருகோனே ... திரிபுரங்களையும் நெருப்பிட்டு அழித்த சிவபெருமானுடைய இடது பாகத்தில் மகிழ்ந்திருக்கும் திரிபுரையாகிய பார்வதி ஈன்ற சிறப்பான குழந்தையே, நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா நிறை அயில் முடுகா விடுவோனே ... அசுரர்கள் இருந்த பெரிய கிரெளஞ்ச மலை இரண்டு பிளவாகும்படி வீரம் நிறைந்த வேலை வேகத்துடன் செலுத்தியவனே, நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட சார் பெருமாளே. ... பூமியில் புகழ் நிறைந்த தலம் என்னும் பேர் பெற்ற திருவண்ணாமலையில் பெரிய மதிலின் வடப் புறத்தே வீற்றிருக்கும் பெருமாளே.