நல்வினை, தீவினை இரண்டுமே அஞ்சி ஒழிய, மலக் கூட்டங்கள் (மாசுகள்) மங்கி அழிய, அஞ்ஞானமும், நோய்களும் அகல, நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து, அருள் வாக்குகளும், அன்பான மொழிகளும் கூற, உன் கடப்பமலரின் உயிர்தரு மருந்தாம் தேனைச்சுற்றி வண்டுகள் ரீங்காரம் செய்து முரல, யானைமுகன் கணபதி என் தம்பியே, முருகா என்றழைக்க, தேவர்கள் மகிழ்ந்து மலர் மாரி பொழிய, என் முன்னே கருணை மிகக் காட்டி மலர்ந்த முகத்தோடு வேகமாக நடனம் செய்தவாறு வந்து அருள் புரியவேண்டும். திரிபுரம் அழியவும், மன்மதனின் உடல் எரியவும், விளங்கும் புன்சிரிப்பைச் சிரித்தே எரித்த ரிஷப வாகனம் ஏறும் சிவபெருமான் பரவெளியில் திருவருளோடு வீற்றிருந்து, விளங்க நடனம் செய்து, எம்மைப் பெற்ற தேவியை இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு, மழு ஆயுதத்தை ஏந்திய எம் தந்தை மாசற்றவன் மகிழ்ச்சியடைந்த குருநாதனே, திருஅண்ணாமலைக் குன்றிலே மகிழும் குறமங்கையின் மலர்ப்படுக்கையிலே மனமகிழும் பெருமாளே.