குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய்
வீடு காதலி குலவனுமாய் நாடு காடொடு தடுமாறி
குனி கொடு கூன் நீடு மாகிடு கிழவனுமாய்
ஆவி போய்விட விறகுடனே தூளியாவதும் அறியா தாய்
பழய சட் ஆதார மேல் நிகழ் கழி உடல் காணா
நிராதர பரிவிலி வான் நாலை நாடொறும் மடை மாறி
பல பலவாம் யோக சாதக உடல் கொடு
மாயாத போதக பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ
எழு கடல் தீமூள மேருவும் இடிபட
வேதாவும் வேதமும் இரவியும் வாய் பாறி ஓடிட
முது சேடன் இருள் அறு பாதாள லோகமும் இமையமும் நீறாக
வாள் கிரி இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய
அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர் பூத மாறு செய்
அவுணர் தம் மா சேனை தூள் எழ விளையாடி
வேலாயுதா
உயர் அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே.
குழந்தையாகப் பிறந்து, மாயை, காம மயக்கம் இவை உடைய வாலிபனாக வளர்ந்து, வீடு, மனைவி இவைகளோடு கூடிய நல்ல குலத்தவனாய் வாழ்ந்து, பின்பு நாட்டிலும், காட்டிலும் உழன்று தடுமாற்றம் அடைந்து, உடல் வளைந்து, கூன் பெரியதாய் ஆன கிழவனுமாக ஆகி, உயிர் போன பிறகு (உடல்) விறகுடன் சாம்பற் பொடி ஆவதையும் அறிந்து, (அந்த எண்ணத்தை விட்டுத்) தாவி, (குண்டலினி சக்ரத்தின்) பழமையான ஆறு ஆதாரங்களின் மேல் நிலையில் நிகழும் உடம்பு கழிபட்ட நிலையை அடைந்து, சார்பு அற்றதும், துன்பம் இல்லாததுமானஆகாயத்தில் நாள் தோறும் நாலு அங்குல அளவு வாயுவைக் கழியாது திருப்பி, பல விதமான யோகப் பயிற்சிகள் செய்த உடலை வளர்த்து, (இத்தனையும் செய்தபின்) சாவில்லாததும், அறிவு மயமானதுமான அழியாத முத்தி வீட்டை நாடிச் சென்று இனியாவது யான் போய்ச் சேருவேனோ? ஏழு கடல்களும் நெருப்பு மூண்டு எரியவும் மேரு மலையும் பொடிபடவும், பிரமனும், நான்கு வேதங்களும், சூரியனும் திசைமாறித் தறிகெட்டு ஓடவும், பழைய ஆதிசேஷன் உள்ள இருட்டற்ற பாதாள லோகமும், இமயமலையும் பொடிப்பொடியாகவும், சக்ரவாளகிரி இரண்டு பிளவுபட்டு வீழவும், எட்டுத் திக்குகளில் உள்ள மலைகள் சாய்ந்து விழவும், அழகு வாய்ந்த, சிறந்த இந்திரனும், தேவர்களும் (தங்கள்) பொன்னுலகில் குடியேறவும் செய்வித்து, அசுரர்களுடைய பெரிய சேனையை விளையாட்டுப்போல தூள்தூளாகச் செய்து, அமரினை மேவாத சூரரை அமர் செயும் அமைதியைப் பொருந்தாத சூரர்களோடு சண்டை செய்த வேலாயுதனே, சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலையில் வாழ்வாக வீற்றிருக்கும் பெருமாளே.
குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய் ... குழந்தையாகப் பிறந்து, மாயை, காம மயக்கம் இவை உடைய வாலிபனாக வளர்ந்து, வீடு காதலி குலவனுமாய் நாடு காடொடு தடுமாறி ... வீடு, மனைவி இவைகளோடு கூடிய நல்ல குலத்தவனாய் வாழ்ந்து, பின்பு நாட்டிலும், காட்டிலும் உழன்று தடுமாற்றம் அடைந்து, குனி கொடு கூன் நீடு மாகிடு கிழவனுமாய் ... உடல் வளைந்து, கூன் பெரியதாய் ஆன கிழவனுமாக ஆகி, ஆவி போய்விட விறகுடனே தூளியாவதும் அறியா தாய் ... உயிர் போன பிறகு (உடல்) விறகுடன் சாம்பற் பொடி ஆவதையும் அறிந்து, (அந்த எண்ணத்தை விட்டுத்) தாவி, பழய சட் ஆதார மேல் நிகழ் கழி உடல் காணா ... (குண்டலினி சக்ரத்தின்) பழமையான ஆறு ஆதாரங்களின் மேல் நிலையில் நிகழும் உடம்பு கழிபட்ட நிலையை அடைந்து, நிராதர பரிவிலி வான் நாலை நாடொறும் மடை மாறி ... சார்பு அற்றதும், துன்பம் இல்லாததுமானஆகாயத்தில் நாள் தோறும் நாலு அங்குல அளவு வாயுவைக் கழியாது திருப்பி, பல பலவாம் யோக சாதக உடல் கொடு ... பல விதமான யோகப் பயிற்சிகள் செய்த உடலை வளர்த்து, மாயாத போதக பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ ... (இத்தனையும் செய்தபின்) சாவில்லாததும், அறிவு மயமானதுமான அழியாத முத்தி வீட்டை நாடிச் சென்று இனியாவது யான் போய்ச் சேருவேனோ? எழு கடல் தீமூள மேருவும் இடிபட ... ஏழு கடல்களும் நெருப்பு மூண்டு எரியவும் மேரு மலையும் பொடிபடவும், வேதாவும் வேதமும் இரவியும் வாய் பாறி ஓடிட ... பிரமனும், நான்கு வேதங்களும், சூரியனும் திசைமாறித் தறிகெட்டு ஓடவும், முது சேடன் இருள் அறு பாதாள லோகமும் இமையமும் நீறாக ... பழைய ஆதிசேஷன் உள்ள இருட்டற்ற பாதாள லோகமும், இமயமலையும் பொடிப்பொடியாகவும், வாள் கிரி இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய ... சக்ரவாளகிரி இரண்டு பிளவுபட்டு வீழவும், எட்டுத் திக்குகளில் உள்ள மலைகள் சாய்ந்து விழவும், அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர் பூத மாறு செய் ... அழகு வாய்ந்த, சிறந்த இந்திரனும், தேவர்களும் (தங்கள்) பொன்னுலகில் குடியேறவும் செய்வித்து, அவுணர் தம் மா சேனை தூள் எழ விளையாடி ... அசுரர்களுடைய பெரிய சேனையை விளையாட்டுப்போல தூள்தூளாகச் செய்து, அமரினை மேவாத சூரரை அமர் செயும் வேலாயுதா ... அமைதியைப் பொருந்தாத சூரர்களோடு சண்டை செய்த வேலாயுதனே, உயர் அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே. ... சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலையில் வாழ்வாக வீற்றிருக்கும் பெருமாளே.