சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும் செடம்
அளறு மல சலமொடு என்பு துன்றும் கலம்
துன்பம் மேவும் செனன வலை மரண வலை இரண்டு(ம்) முன் பின் தொடர்ந்து அணுகும் உடல்
அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம் சிறு மணலை அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்று(ம்) நாயேன்
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்(கு) குறுக இனி அருள் கிருபை வந்து தந்து
என்றும் உன் கடன் எனது உடல் உயிரும் உன் பரம்
தொண்டு கொண்டு அன்பரோடே கலவி நலம் மருவி வடிவம் சிறந்து
உன் பதம் புணர் கரணம் மயில் புறமொடு இன்பு கொண்டு அண்டரும் கனக மலர் பொழிய உனது அன்பு உகந்து இன்று முன் சிந்தியாதோ
தனனதன தனனதன தந்தனந் தந்தனந் தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந் தடம் தவில்முரசு பறைதிமிலை டிங்கு டிங்குந்து அடர்ந்த
அண்டர் பேரி தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண் டிமிடிமிட டகுர திகுகு
சங்கு வெண் கொம்பு திண் கடையுகம் ஒடு ஒலிய
கடல் அஞ்ச வஞ்சன் குலம் சிந்தி மாளச் சினம் முடுகி அயில் அருளி
உம்பர் அந்த அம்பரம் திசை உரகர் புவி உளது மந்தரம் பங்கயன் செகம் முழுது மகிழ
அரி அம்புயன் தொண்டு கொண்டு அஞ்சல் பாட
திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்கு உறும் கவுரி மனம் உருக
ஒரு கங்கை கண்டு அன்புறும் திரு அருணை கிரி மருவு சங்கரன் கும்பிடும் தம்பிரானே.
இந்த உடலானது கோபம் கொள்ளும் நாய், நரி, கழுகு இவைகளுடன் பருந்துகளின் கூட்டம், காக்கை, கருடன், பேய், புழுக்கள் இவை யாவற்றாலும் உண்ணப்படுவதற்கும், கண்டு களிக்கப்படுவதற்கும் அமைந்தது. இவ்வுடல் சேறு போன்ற மலம், நீருடன், எலும்பும் கூடியுள்ள பாத்திரம். துன்பத்துடன் கூடிய பிறப்பு வலை, இறப்பு வலை இரண்டும் முன் பின்னாகத் தொடர்ந்து நெருங்கி வரும் உடல் இது. பல உருவங்கள் இவ்வுலகில் அடைந்து, கடலின் சிறு மணலை அளவிட்டாலும் அங்கு அந்த அளவைக் காட்டிலும் மேற்பட்டு, இங்கு அழிவதற்காகவே பிறவியில் பொருந்தும் நாயினும் கீழான நான், பொன்னுலகின் நிழலில் இருந்து, (உன் மீது) அன்பு பூண்டுள்ள அடியார்களின் பக்கத்தில் இருந்து பொருந்த, இனி அருட் கிருபையை வந்து தர எப்போதும் உன்னுடைய கடமையாகும் என்னுடைய உடலும், உயிரும் உன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டதாகும். அடியேனுடைய தொண்டை ஏற்றுக் கொண்டு, அன்பர்களுடன் இணக்க இன்பம் பொருந்தி, என் அழகு சிறப்புற்று, உனது திருவடியில் என் மனமும் கரணங்களும் பொருந்த, உனது மயிலின் புறத்தே மகிழ்ச்சி கொண்டு தேவர்களும் பொன் மலர்களைப் பொழிய, உன்னுடைய அன்பு மகிழ்ச்சி கூடி இன்றே என்னை முன்னதாகக் கருதக் கூடாதோ? தனனதன தனனதன தந்தனந் தந்தனந் தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடம் - என்று வளைந்த மேளம், முரசு, பறை, திமிலை (இவை எல்லாம் கூடி) டிங்கு டிங்குந்து என்று பேரொலி எழுப்ப, தேவர்களின் பேரி வாத்தியம் தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண் டிமிடிமிட டகுர திகுகு என்று ஒலிக்க, சங்கும், வெண்ணிறமுடைய ஊது கொம்பும் வலிமையாக ஊதி யுக முடிவு போல்ஒலி செய்ய, கடலும் அஞ்ச, வஞ்சகனாகிய சூரனுடைய குலம் சிதறுண்ட அழிய, கோபம் மிக உண்டாக வேலாயுதத்தைச் செலுத்தி, தேவர்கள், அந்தச் சமுத்திரம், திக்குகள், நாகர், பூமியில் உள்ள மந்தர மலையில் உள்ளோர், தாமரையில் இருக்கும் பிரமன் உலகங்கள் (இங்ஙனம்) யாவரும் மகிழ, திருமாலும், பிரமனும் அடிமை பூண்டு அபயம் தா என்று ஓலமிடும் பாடல்களைப் பாட, அழகிய புன்னகையைப் பூத்தருளி எனது தந்தையாகிய சிவபெருமானின் பக்கத்தில் உறையும் உமையவள் மனம் குழைய, ஒப்பற்ற கங்கை (உன் ஆடலைப்) பார்த்து அன்பு கொள்ளும் திரு அண்ணா மலையில் வீற்றிருக்கும் சங்கரன் வணங்கும் தலைவனே.
சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும் செடம் ... இந்த உடலானது கோபம் கொள்ளும் நாய், நரி, கழுகு இவைகளுடன் பருந்துகளின் கூட்டம், காக்கை, கருடன், பேய், புழுக்கள் இவை யாவற்றாலும் உண்ணப்படுவதற்கும், கண்டு களிக்கப்படுவதற்கும் அமைந்தது. அளறு மல சலமொடு என்பு துன்றும் கலம் ... இவ்வுடல் சேறு போன்ற மலம், நீருடன், எலும்பும் கூடியுள்ள பாத்திரம். துன்பம் மேவும் செனன வலை மரண வலை இரண்டு(ம்) முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் ... துன்பத்துடன் கூடிய பிறப்பு வலை, இறப்பு வலை இரண்டும் முன் பின்னாகத் தொடர்ந்து நெருங்கி வரும் உடல் இது. அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம் சிறு மணலை அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்று(ம்) நாயேன் ... பல உருவங்கள் இவ்வுலகில் அடைந்து, கடலின் சிறு மணலை அளவிட்டாலும் அங்கு அந்த அளவைக் காட்டிலும் மேற்பட்டு, இங்கு அழிவதற்காகவே பிறவியில் பொருந்தும் நாயினும் கீழான நான், கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்(கு) குறுக இனி அருள் கிருபை வந்து தந்து ... பொன்னுலகின் நிழலில் இருந்து, (உன் மீது) அன்பு பூண்டுள்ள அடியார்களின் பக்கத்தில் இருந்து பொருந்த, இனி அருட் கிருபையை வந்து தர என்றும் உன் கடன் எனது உடல் உயிரும் உன் பரம் ... எப்போதும் உன்னுடைய கடமையாகும் என்னுடைய உடலும், உயிரும் உன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டதாகும். தொண்டு கொண்டு அன்பரோடே கலவி நலம் மருவி வடிவம் சிறந்து ... அடியேனுடைய தொண்டை ஏற்றுக் கொண்டு, அன்பர்களுடன் இணக்க இன்பம் பொருந்தி, என் அழகு சிறப்புற்று, உன் பதம் புணர் கரணம் மயில் புறமொடு இன்பு கொண்டு அண்டரும் கனக மலர் பொழிய உனது அன்பு உகந்து இன்று முன் சிந்தியாதோ ... உனது திருவடியில் என் மனமும் கரணங்களும் பொருந்த, உனது மயிலின் புறத்தே மகிழ்ச்சி கொண்டு தேவர்களும் பொன் மலர்களைப் பொழிய, உன்னுடைய அன்பு மகிழ்ச்சி கூடி இன்றே என்னை முன்னதாகக் கருதக் கூடாதோ? தனனதன தனனதன தந்தனந் தந்தனந் தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந் தடம் தவில்முரசு பறைதிமிலை டிங்கு டிங்குந்து அடர்ந்த ... தனனதன தனனதன தந்தனந் தந்தனந் தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடம் - என்று வளைந்த மேளம், முரசு, பறை, திமிலை (இவை எல்லாம் கூடி) டிங்கு டிங்குந்து என்று பேரொலி எழுப்ப, அண்டர் பேரி தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண் டிமிடிமிட டகுர திகுகு ... தேவர்களின் பேரி வாத்தியம் தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண் டிமிடிமிட டகுர திகுகு என்று ஒலிக்க, சங்கு வெண் கொம்பு திண் கடையுகம் ஒடு ஒலிய ... சங்கும், வெண்ணிறமுடைய ஊது கொம்பும் வலிமையாக ஊதி யுக முடிவு போல்ஒலி செய்ய, கடல் அஞ்ச வஞ்சன் குலம் சிந்தி மாளச் சினம் முடுகி அயில் அருளி ... கடலும் அஞ்ச, வஞ்சகனாகிய சூரனுடைய குலம் சிதறுண்ட அழிய, கோபம் மிக உண்டாக வேலாயுதத்தைச் செலுத்தி, உம்பர் அந்த அம்பரம் திசை உரகர் புவி உளது மந்தரம் பங்கயன் செகம் முழுது மகிழ ... தேவர்கள், அந்தச் சமுத்திரம், திக்குகள், நாகர், பூமியில் உள்ள மந்தர மலையில் உள்ளோர், தாமரையில் இருக்கும் பிரமன் உலகங்கள் (இங்ஙனம்) யாவரும் மகிழ, அரி அம்புயன் தொண்டு கொண்டு அஞ்சல் பாட ... திருமாலும், பிரமனும் அடிமை பூண்டு அபயம் தா என்று ஓலமிடும் பாடல்களைப் பாட, திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்கு உறும் கவுரி மனம் உருக ... அழகிய புன்னகையைப் பூத்தருளி எனது தந்தையாகிய சிவபெருமானின் பக்கத்தில் உறையும் உமையவள் மனம் குழைய, ஒரு கங்கை கண்டு அன்புறும் திரு அருணை கிரி மருவு சங்கரன் கும்பிடும் தம்பிரானே. ... ஒப்பற்ற கங்கை (உன் ஆடலைப்) பார்த்து அன்பு கொள்ளும் திரு அண்ணா மலையில் வீற்றிருக்கும் சங்கரன் வணங்கும் தலைவனே.