சுக்கிலச் சுரொணிதத்தில் உற்ற நளினத்தில் அப்பு என ரத்த(ம்) முற்றி
சுக சுக்கிலக் குளிகை ஒத்து கெர்ப்ப குகை வந்து கோலத் தொப்பை இட்ட வயிறில் பெருத்து
மிக வட்டம் இட்டு உடல் வெப்பம் உற்று மதி சொற்ற பத்தின் மறி அக்ஷரத்தினுடை விஞ்சையாலே
கக்க நல் புவியில் உற்று அரற்றி முலையைக் கொடுக்க அமுர்தைப் புசித்து
வளர்கைக்கு அசத்தியொடு உழைத்து தத்து நடை அந்தம் மேவி
கற்று வெற்று அறிவு பெற்று தொக்கை மயில் ஒத்த மக்கள் மயலில் குளித்து
நெறி கட்டி இப்படிப் பிறப்பில் உற்று உடல(ம்) மங்குவேனோ
தெற்கு அரக்கர் பவிஷைக் குலைத்து வி (வீ) டணற்கு நத்து அரசு அளித்து முத்தி கொடு
சித்திரத் திரு உரத்த சக்கிரி தன் மருகோனே
செக் கரத்தின் மலை முப்புரத்தில் எரி இட்ட சத்தி சிவன் உற்று நத்த மிகு சித்து அனைத்தையும் விழித்த சத்தி உமை தந்த பாலா
தர்க்கம் இட்ட அசுரரைக் கெலித்து மலை உக்க எழுக் கடல் கொளுத்தி
அட்ட திசை தட்ட முட்டை அடையக் கொடிப் புகையின் மண்டும் வேலா
தத்தை வித்ரும நிறத்தி முத்து அணி குறத்தி கற்பக வனத்தி சித்தம் அவை தக்கு நத்த அருணைக் கிரிக்குள் மகிழ் தம்பிரானே.
ஆணின் விந்துவும், பெண்ணின் ரத்தத்திலுள்ள இந்திரியமும் ஒன்றுபட்டு (சிசு உற்பத்தியாகி), தாமரை இலையில் நீர் போல ரத்தம் நிறைந்து, சுகத்தைத் தரும் சுக்கிலத்தாலாகிய ஒரு மந்திர சக்தி உள்ள மாத்திரை அளவைப் பூண்டு, கருப்பையில் தோன்றி, அழகிய தொப்பை இடுகின்ற வயிற்றில் வளர்ந்து, அந்த வயிற்றில் மிகவும் சுழன்று, உடலில் சூடு வரப் பெற்று, சொல்லப்பட்ட பத்தாவது மாதத்தில் கீழ் மேலாக விழச் செய்யவல்ல (பிரமனுடைய) எழுத்துக்களின் மந்திர சக்தியால், வெளியில் தள்ளிவிட, நல்ல இப் பூமியில் சேர்ந்து, குழந்தை அழுது (தாயின்) முலையைத் தர, முலைப்பால் அமுதை உண்டு, வளர்வதற்கு வலிமையின்மையால் முயன்று, தத்தித் தத்தி நடக்கும் நடையழகைப் பெற்று, நூல்களைப் படித்து பயனில்லாத அறிவைப் பெற்று, தோகை மயில் போன்ற பெண்களின் மோகத்தில் மூழ்கி, விதியினால் கட்டுண்டு இவ்வாறு பிறவியை அடைந்து, (இறுதியாக) உடல் அழிபட்டு இறந்து படுவேனோ? தெற்கில் இருந்த அரக்கர்களின் செருக்கை அழித்து, விபீஷணனுக்கு விரும்பத் தக்க (இலங்கை) அரசாட்சியைத் தந்து முக்தியைக் கொடுத்தவரும், மிக்க அழகிய லக்ஷ்மியை மார்பில் தரித்தவரும், சக்கரத்தை ஏந்தியவரும் ஆகிய திருமாலின் மருகனே, சம்மையான திருக்கரத்தில் மேரு மலையாகிய வில்லை ஏந்தி திரிபுரங்களில் தீ பற்றும்படிச் செய்த தேவி, சிவபெருமானின் அருகாமையில் இருந்து, மிகவும் விரும்பத்தக்க அஷ்ட சித்துக்கள் முதலான யாவற்றையும் தரிசித்த (சித்துக்களுக்குப் பிறப்பிடமான) பார்வதி பெற்ற குழந்தையே, வாதிட்டு போருக்கு வந்த அசுரர்களை வென்று, மலைகளைப் பொடியாக்கி, ஏழு கடல்களையும் எரி இட்டு, எட்டுத் திசைகளும் தரைமட்டமாகி தவிடு பட, நெருப்பின் புகைக் கொடியுடன் விரைந்து உக்கிரத்துடன் நெருங்கும் வேலனே, கிளி போன்றவளும், பவள நிறம் உடையவளும், முத்து மாலை அணிந்தவளும் ஆகிய குறப் பெண் (வள்ளி), கற்பக மரக் காடு உள்ள பான்னுலகத்தவள் (தேவயானை) ஆகிய இருவர்களின் மனங்கள் பொருந்தி விரும்ப, திருவண்ணாமலைக்குள் மகிழும் தம்பிரானே.
சுக்கிலச் சுரொணிதத்தில் உற்ற நளினத்தில் அப்பு என ரத்த(ம்) முற்றி ... ஆணின் விந்துவும், பெண்ணின் ரத்தத்திலுள்ள இந்திரியமும் ஒன்றுபட்டு (சிசு உற்பத்தியாகி), தாமரை இலையில் நீர் போல ரத்தம் நிறைந்து, சுக சுக்கிலக் குளிகை ஒத்து கெர்ப்ப குகை வந்து கோலத் தொப்பை இட்ட வயிறில் பெருத்து ... சுகத்தைத் தரும் சுக்கிலத்தாலாகிய ஒரு மந்திர சக்தி உள்ள மாத்திரை அளவைப் பூண்டு, கருப்பையில் தோன்றி, அழகிய தொப்பை இடுகின்ற வயிற்றில் வளர்ந்து, மிக வட்டம் இட்டு உடல் வெப்பம் உற்று மதி சொற்ற பத்தின் மறி அக்ஷரத்தினுடை விஞ்சையாலே ... அந்த வயிற்றில் மிகவும் சுழன்று, உடலில் சூடு வரப் பெற்று, சொல்லப்பட்ட பத்தாவது மாதத்தில் கீழ் மேலாக விழச் செய்யவல்ல (பிரமனுடைய) எழுத்துக்களின் மந்திர சக்தியால், கக்க நல் புவியில் உற்று அரற்றி முலையைக் கொடுக்க அமுர்தைப் புசித்து ... வெளியில் தள்ளிவிட, நல்ல இப் பூமியில் சேர்ந்து, குழந்தை அழுது (தாயின்) முலையைத் தர, முலைப்பால் அமுதை உண்டு, வளர்கைக்கு அசத்தியொடு உழைத்து தத்து நடை அந்தம் மேவி ... வளர்வதற்கு வலிமையின்மையால் முயன்று, தத்தித் தத்தி நடக்கும் நடையழகைப் பெற்று, கற்று வெற்று அறிவு பெற்று தொக்கை மயில் ஒத்த மக்கள் மயலில் குளித்து ... நூல்களைப் படித்து பயனில்லாத அறிவைப் பெற்று, தோகை மயில் போன்ற பெண்களின் மோகத்தில் மூழ்கி, நெறி கட்டி இப்படிப் பிறப்பில் உற்று உடல(ம்) மங்குவேனோ ... விதியினால் கட்டுண்டு இவ்வாறு பிறவியை அடைந்து, (இறுதியாக) உடல் அழிபட்டு இறந்து படுவேனோ? தெற்கு அரக்கர் பவிஷைக் குலைத்து வி (வீ) டணற்கு நத்து அரசு அளித்து முத்தி கொடு ... தெற்கில் இருந்த அரக்கர்களின் செருக்கை அழித்து, விபீஷணனுக்கு விரும்பத் தக்க (இலங்கை) அரசாட்சியைத் தந்து முக்தியைக் கொடுத்தவரும், சித்திரத் திரு உரத்த சக்கிரி தன் மருகோனே ... மிக்க அழகிய லக்ஷ்மியை மார்பில் தரித்தவரும், சக்கரத்தை ஏந்தியவரும் ஆகிய திருமாலின் மருகனே, செக் கரத்தின் மலை முப்புரத்தில் எரி இட்ட சத்தி சிவன் உற்று நத்த மிகு சித்து அனைத்தையும் விழித்த சத்தி உமை தந்த பாலா ... சம்மையான திருக்கரத்தில் மேரு மலையாகிய வில்லை ஏந்தி திரிபுரங்களில் தீ பற்றும்படிச் செய்த தேவி, சிவபெருமானின் அருகாமையில் இருந்து, மிகவும் விரும்பத்தக்க அஷ்ட சித்துக்கள் முதலான யாவற்றையும் தரிசித்த (சித்துக்களுக்குப் பிறப்பிடமான) பார்வதி பெற்ற குழந்தையே, தர்க்கம் இட்ட அசுரரைக் கெலித்து மலை உக்க எழுக் கடல் கொளுத்தி ... வாதிட்டு போருக்கு வந்த அசுரர்களை வென்று, மலைகளைப் பொடியாக்கி, ஏழு கடல்களையும் எரி இட்டு, அட்ட திசை தட்ட முட்டை அடையக் கொடிப் புகையின் மண்டும் வேலா ... எட்டுத் திசைகளும் தரைமட்டமாகி தவிடு பட, நெருப்பின் புகைக் கொடியுடன் விரைந்து உக்கிரத்துடன் நெருங்கும் வேலனே, தத்தை வித்ரும நிறத்தி முத்து அணி குறத்தி கற்பக வனத்தி சித்தம் அவை தக்கு நத்த அருணைக் கிரிக்குள் மகிழ் தம்பிரானே. ... கிளி போன்றவளும், பவள நிறம் உடையவளும், முத்து மாலை அணிந்தவளும் ஆகிய குறப் பெண் (வள்ளி), கற்பக மரக் காடு உள்ள பான்னுலகத்தவள் (தேவயானை) ஆகிய இருவர்களின் மனங்கள் பொருந்தி விரும்ப, திருவண்ணாமலைக்குள் மகிழும் தம்பிரானே.