பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
பாகாய் வாய்ச் சொல் கொடியார் தாம்
பாடா வாடா வேள் தாவாலே
பாடாய் ஈடு அற்று இடை பீறும்
தோலாலே காலாலே ஊனாலே
சூழ் பாசக் குடில் மாசு
தோயா மாயா ஓயா நோயால்
சோர்வாய் மாளக் கடவேனோ
ஞாலா மேலா வேதா போதா
நாதா சோதிக் கிரியோனே
ஞான ஆசார வான் ஆள் கோனே
நானா வேதப் பொருளோனே
வேலா பாலா சீல ஆகாரா
வேளே வேடக் கொடி கோவே
வீர ஆதாரா ஆறு ஆதாரா
வீரா வீரப் பெருமாளே.
பால் போன்றதும், (இனிய தமிழ்) நூல் போன்றதும், தேன் போன்றதும், நீண்டு கம்பிப் பதமாய் வருகின்ற காய்ச்சின வெல்லம் போன்றதுமாய் இனிக்கும் வாய்ச் சொல்லை உடைய கொடி போன்ற விலைமாதர்கள் பாடியும், ஆடியும் விருப்பத்தைத் தெரிவிக்கும் வலிமையினாலே காமநோய் உற்றவனாய் என் தகுதி தொலைந்துபோய் நின்று, வாழ்க்கையின் இடையிலேயே கிழிபட்டுப் போகும் தோலாலும், காற்றினாலும், மாமிசத்தாலும் சூழப்பட்டுள்ளதும், பற்றுகளுக்கு இடமானதுமான குடிசையாகிய இந்த உடல் குற்றங்கள் தோய்ந்தும், ஒளி மழுங்கியும், முடிவில்லாத நோயினால் தளர்ச்சி உற்றும் இறந்துபடக் கடவேனோ? பூமியில் மேம்பட்டு நிற்பவனே, பிரமனுக்கு போதித்தவனே, நாதனே, ஜோதி மலையாகிய அருணாசலப் பிரானே, ஞான மார்க்கத்தில் முதல்வனே, வானுலகை ஆள்கின்ற தலைவனே, பல வகையான வேதங்களுக்கும் உட் பொருளானவனே, வேலனே, பரமசிவ பாலனே, பரிசுத்த வடிவனே, செவ்வேளே, கொடி போன்ற வேடப் பெண் வள்ளியின் மணவாளனே, வீரத்துக்கு ஆதாரமானவனே, மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களுக்கும் உரியவனே, வீரனே, வீரமுள்ள பெருமாளே.