யாவரும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நிறம் கருமையடைந்து, மகர மீன்களின் கூட்டத்தால் கலக்கப்பட்டு, கிடைக்கின்ற முழு இடத்தையும் வளைத்து ஆரவாரம் செய்யும் கடலாலும், (சந்திரனின் கலைகள்) வளர்ந்து, விஷத்தை எங்கும் பரப்பி, (யுக முடிவில் தீப் பிரளயமாக வரும்) வடவா முகாக்கினியை மொண்டு கொண்டும், நெருப்பில் மூழ்கியும் எழுந்துவரும் நிலவாலும், கார்மேகம் போன்ற கூந்தலைக் கொண்ட, வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய என் மகள் அடைந்த விரக தாபம் தணியும்படிக்கு நீ நினைந்து, பச்சை நிறம், தூய்மை, வெற்றி இவைகளைக் கொண்டதாகவும், அழகுள்ள நடனம் கொண்டதாகவும் உள்ள அலங்கார மயில் மீது வந்து அவளுக்கு முக்தியைத் தரவேண்டும். அழகிய மென்மை வாய்ந்த குறத்தி வள்ளியின் புளகம் கொண்டதும், சந்தனமும் அமுதமும் பொதிந்ததுமான மார்பகத்தை அணைந்துள்ள திருமார்பனே, தேவர்களின் ஊராகிய அமராவதியிலும், அழகிய திருச்செந்தூரிலும், திருவருணை என்ற வளமான தலத்திலும் தங்கும் இறைவனே, ஏழு உலகங்களும் பிழைக்க, அசுரர்களின் தலைகள் தெறிக்கும்படியாக ஏழு மலைகளையும் தொளைத்த ஒளி வேலனே, ஆதித்தர்கள் (அதிதியின் புத்திரர்கள்), விண்ணுலகத்தவர், திருமால், ருத்திரன், தாமரை மீதமர்ந்த பிரமன் இவர்களது பயத்தை ஒழித்த பெருமாளே.