பங்கயனார் பெற்றிடும் சர(ம்) அசர(ம்)
அண்டமதாய் உற்றிருந்த பார் மிசை
பஞ்சவர் கூடித் திரண்டது ஓர் நர உருவாயே
பந்தமது ஆகிப் பிணிந்த ஆசையில் இங்கிதமாகத் திரிந்து
மாதர்கள் பண்பு ஒழி சூதைக் கடந்திடாது உழல் படிறு ஆயே
சங்கடன் ஆகித் தளர்ந்து நோய் வினை வந்து உடல் மூட
கலங்கிடா மதி தந்து அடியேனைப் புரந்திடாய் உனது அருளாலே
சங்கரர் வாமத்து இருந்த நூபுர சுந்தரி ஆதி தரு(ம்) சுதா
பத தண்டையனே குக்குடம் பதாகையின் முருகோனே
திங்கள் உலாவப் பணிந்த வேணியர்
பொங்கு அரவு ஆடப் புனைந்த மார்பினர்
திண் சிலை சூலத்து அழுந்து பாணியர்
நெடிது ஆழ்வார் சிந்துவிலே உற்று எழுந்த காள விடம்
கள(ம்) மீதில் சிறந்த சோதியர்
திண் புய(ம்) மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா
சிங்கமதாகத் திரிந்த மால் கெருவம் பொடியாக
பறந்து சீறிய சிம்புளதாகச் சிறந்து அகா என வரு கோ
முன் செம் கதிரோனைக் கடிந்த தீ வினைதுஞ்சிடவே
நல் தவம் செய்து ஏறிய
தென்கயிலாயத்து அமர்ந்து வாழ்வருள் பெருமாளே.
தாமரை மலரில் உள்ள பிரமன் படைத்துள்ள அசைவன, அசையாதனவாய் உள்ள அண்டமாகிப் பொருந்தி இருக்கும் இந்தப் பூமி மேல் ஐம்பூதங்களும் கூடி ஒன்றாகி ஒரு மனித உருவம் அமைந்து, பாசத்தால் கட்டுண்ட ஆசையால் இன்பமுற்றுத் திரிந்து, விலைமாதரின் நற்குணம் இல்லாத வஞ்சகச் சூழ்ச்சிகளைக் கடந்திடாமல் திரிகின்ற, பொய் கலந்தவனாய் வேதனைப் படுபவனாகிச் சோர்வடைந்து, பிணியும் வினையும் வந்து உடலை மூடி, அதனால், கலக்கம் அடையாத அறிவைத் தந்து அடியேனை உன்னுடைய திருவருளைப் பாலித்துக் காப்பாற்றுவாயாக. சிவபெருமானுடைய இடது பாகத்தில் உறையும் சிலம்பணிந்த அழகி ஆதி தேவி பெற்ற குழந்தையே, தண்டைகள் அணிந்த பாதங்களை உடையவனே, கோழிக் கொடியைக் கொண்ட முருகனே, நிலவு (சடையில்) உலாவும்படியாக அருளிய சடையை உடையவர், மேலெழுந்து பாம்பு ஆடும்படி அணிந்துள்ள மார்பை உடையவர், வலிமை வாய்ந்த (பினாகம் என்னும்) வில்லும், சூலாயுதமும் பொருந்தி உள்ள திருக்கையை உடையவர், நிரம்ப ஆழமாகவும் நீண்டும் உள்ள பாற்கடலில் இருந்து தோன்றிய கரிய ஆலகால விஷத்தை தனது கண்டத்தில் விளங்கும்படி வைத்த பேரொளியினர் (நீலகண்டர்), (அத்தகைய சிவபெருமானுடைய) வலிய தோள்களில் தவழ்ந்து பொலிந்த குருநாதனே, நரசிங்கமாக திரிந்த திருமாலின் அகந்தை பொடிபட்டு அழியும்படியாக, பறந்து கோபித்த சரபப் பட்சியாய் (உரு எடுத்து) விளங்கி ஆகா என்று சப்தித்து வந்த பெருமானாகிய வீரபத்திரர் முன்பு, சூரியனை (தக்ஷயாகத்தின்போது) தண்டித்த தீவினை தோஷம் நீங்க, நல்ல தவத்தைச் செய்து சிறப்படைந்த தக்ஷிண கயிலாயமாகிய திருக்காளத்தியில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருளும் பெருமாளே.
பங்கயனார் பெற்றிடும் சர(ம்) அசர(ம்) ... தாமரை மலரில் உள்ள பிரமன் படைத்துள்ள அசைவன, அசையாதனவாய் உள்ள அண்டமதாய் உற்றிருந்த பார் மிசை ... அண்டமாகிப் பொருந்தி இருக்கும் இந்தப் பூமி மேல் பஞ்சவர் கூடித் திரண்டது ஓர் நர உருவாயே ... ஐம்பூதங்களும் கூடி ஒன்றாகி ஒரு மனித உருவம் அமைந்து, பந்தமது ஆகிப் பிணிந்த ஆசையில் இங்கிதமாகத் திரிந்து ... பாசத்தால் கட்டுண்ட ஆசையால் இன்பமுற்றுத் திரிந்து, மாதர்கள் பண்பு ஒழி சூதைக் கடந்திடாது உழல் படிறு ஆயே ... விலைமாதரின் நற்குணம் இல்லாத வஞ்சகச் சூழ்ச்சிகளைக் கடந்திடாமல் திரிகின்ற, பொய் கலந்தவனாய் சங்கடன் ஆகித் தளர்ந்து நோய் வினை வந்து உடல் மூட ... வேதனைப் படுபவனாகிச் சோர்வடைந்து, பிணியும் வினையும் வந்து உடலை மூடி, கலங்கிடா மதி தந்து அடியேனைப் புரந்திடாய் உனது அருளாலே ... அதனால், கலக்கம் அடையாத அறிவைத் தந்து அடியேனை உன்னுடைய திருவருளைப் பாலித்துக் காப்பாற்றுவாயாக. சங்கரர் வாமத்து இருந்த நூபுர சுந்தரி ஆதி தரு(ம்) சுதா ... சிவபெருமானுடைய இடது பாகத்தில் உறையும் சிலம்பணிந்த அழகி ஆதி தேவி பெற்ற குழந்தையே, பத தண்டையனே குக்குடம் பதாகையின் முருகோனே ... தண்டைகள் அணிந்த பாதங்களை உடையவனே, கோழிக் கொடியைக் கொண்ட முருகனே, திங்கள் உலாவப் பணிந்த வேணியர் ... நிலவு (சடையில்) உலாவும்படியாக அருளிய சடையை உடையவர், பொங்கு அரவு ஆடப் புனைந்த மார்பினர் ... மேலெழுந்து பாம்பு ஆடும்படி அணிந்துள்ள மார்பை உடையவர், திண் சிலை சூலத்து அழுந்து பாணியர் ... வலிமை வாய்ந்த (பினாகம் என்னும்) வில்லும், சூலாயுதமும் பொருந்தி உள்ள திருக்கையை உடையவர், நெடிது ஆழ்வார் சிந்துவிலே உற்று எழுந்த காள விடம் ... நிரம்ப ஆழமாகவும் நீண்டும் உள்ள பாற்கடலில் இருந்து தோன்றிய கரிய ஆலகால விஷத்தை கள(ம்) மீதில் சிறந்த சோதியர் ... தனது கண்டத்தில் விளங்கும்படி வைத்த பேரொளியினர் (நீலகண்டர்), திண் புய(ம்) மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா ... (அத்தகைய சிவபெருமானுடைய) வலிய தோள்களில் தவழ்ந்து பொலிந்த குருநாதனே, சிங்கமதாகத் திரிந்த மால் கெருவம் பொடியாக ... நரசிங்கமாக திரிந்த திருமாலின் அகந்தை பொடிபட்டு அழியும்படியாக, பறந்து சீறிய சிம்புளதாகச் சிறந்து அகா என வரு கோ ... பறந்து கோபித்த சரபப் பட்சியாய் (உரு எடுத்து) விளங்கி ஆகா என்று சப்தித்து வந்த பெருமானாகிய வீரபத்திரர் முன் செம் கதிரோனைக் கடிந்த தீ வினைதுஞ்சிடவே ... முன்பு, சூரியனை (தக்ஷயாகத்தின்போது) தண்டித்த தீவினை தோஷம் நீங்க, நல் தவம் செய்து ஏறிய ... நல்ல தவத்தைச் செய்து சிறப்படைந்த தென்கயிலாயத்து அமர்ந்து வாழ்வருள் பெருமாளே. ... தக்ஷிண கயிலாயமாகிய திருக்காளத்தியில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருளும் பெருமாளே.