தனத்தில் குங்குமத்தைச் சந்தனத்தைக் கொண்டு அணைத்துச் சங்கிலிக் கொத்தும் பிலுக்குப் பொன் தனில் கொத்தும் தரித்துச் சுந்தரத்தில் பண்பு அழித்து
கண் சுழற்றிச் சண்பகப் புட்பம் குழல் மேவித் தரத்தைக் கொண்டு அசைத்துப் பொன் தகைப் பட்டும் தரித்துப் பின் சிரித்துக் கொண்டு அழைத்துக் கொந்தளத்தைத் தண் குலுக்கி
சங்கு அலப்புத் தன் கரத்துக் கொண்டு அணைத்துச் சம்ப்ரமித்துக் கொண்டு உறவாடிப் புனித்தப் பஞ்சு அணைக் கண் திண் படுத்துச் சந்தனப் பொட்டும் குலைத்துப் பின் புயத்தைக் கொண்டு அணைத்து
பின் சுகித்திட்டு இன்பு கட்டிப் பொன் சரக் கொத்தும் சிதைப்பப் பொன் தரப்பற்றும் பொது மாதர் புணர்ப் பித்தும் பிடித்துப் பொன் கொடுத்துப் பின் பிதிர்ச் சித்தன்
திணிக் கட்டும் சிதைத்துக் கண் சிறுப்பப் புண் பிடித்த அப்புண் புடைத்துக் கண் பழுத்துக் கண்டவர்க்குக் கண் புதைப்பச் சென்று உழல்வேனோ
சினத்துக் கண் சிவப்பச் சங்கு ஒலிப்பத் திண் கவட்டுச் செம் குவட்டைச் சென்று இடித்துச் செண் தரைத் துக்கம் பிடிக்கப் பண் சிரத்தைப் பந்தடித்துக் கொண்டு இறைத்துத் தெண் கடல் திட்டும் கொ(ள்)ளை போக
செழித்துப் பொன் சுரர் சுற்றம் களித்துக் கொண்டு அளிப் புட்பம் சிறக்கப் பண் சிரத்தில் கொண்டு இறைத்துச் செம் பதத்தில் கண் திளைப்பத் தந்து தலைத் தழ்த்து அம் புகழ்ச் செப்பும் சயத்துத் திண் புய வேளே
பனித்து உட்க அங்கசற்குக் கண் பரப்பித் தன் சினத்தில் திண் புரத்தைக் கண்டு எரித்துப் பண் கயத்தைப் பண்டு உரித்துப்பன் பகைத் தக்கன் தவத்தைச் சென்று அழித்துக் கொன்ற அடல் பித்தன் தரு வாழ்வே
படைத் துப்பு ஒன்றுடைத் திட்பன் தனைக் குட்டும் படுத்திப் பண் கடிப் புட்பம் கலைச் சுற்றும் பதத்த பண்புறச் சிற்றம்பலத்தின் கண் களித்தப் பைம் புனத்தில் செம் குறத்திப் பெண் பெருமாளே.
மார்பகத்தில் செஞ்சாந்தையும் சந்தனத்தையும் கொண்டு அப்பி, சங்கிலிக் கொத்தும், மினுக்கும் பொன்னாலாகிய கூட்டமான நகைகளையும் அணிந்து, தமது அழகில் ஈடுபட்டவரின் நற்குணங்களை அழித்து, கண்களைச் சுழற்றி, சண்பக மலர்களை கூந்தலில் வைத்து அலங்கரித்து, தமது உடலைக் கொண்டு மேன்மை விளங்க அசைத்து, பொற்சரிகை பொருந்திய பட்டாடையைத் தரித்து, பின்பு சிரித்து, கொண்டு வந்து அழைத்துச் சென்று கூந்தலை அன்பாக அசைத்து, வளையல்கள் சப்திக்கும் தமது கைகளால் கொண்டு போய் அணைத்து, பெருங் களிப்புடன் உறவு பூண்டு, உயர்ந்த பஞ்சணை மெத்தையில் நன்றாகப் படுத்து, (வந்தவருடைய) சந்தனப் பொட்டைக் கலைத்து, பின்பு தனது கைகளால் அவர்களது தோளைத் தழுவி, பின்னர் இன்ப சுகத்தை அனுபவித்து, பொன் கட்டிகளால் ஆன மணி வடத் திரள்களும் செலவழித்துத் தொலையும்படி பொன்னைத் தருமாறு பற்றுகின்ற விலைமாதர்களுடன் சேரும் பைத்தியமும், (அந்த மாதர்களுக்குப்) பொன்னைக் கொடுத்த பிறகு கலக்கம் அடையும் மனமுடைய நான், உடல் வலிமை சிதைத்துத் தளர்ந்து, கண்கள் சிறுத்துப் போய், உடம்பெல்லாம் புண்ணாகி, அந்தப் புண் வீங்கிச் சீழ் பிடித்து, அதைப் பார்த்தவர்கள் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு செல்லும்படியாக நான் திரிவேனோ? கோபித்துக் கண் சிவக்கவும், சங்குகள் ஒலிக்கவும், வலிய கிளைகளை உடைய செவ்விய கிரெளஞ்ச மலையைப் பொடிபடுத்தி, விண்ணோரையும் மண்ணுலகில் உள்ளோரையும் துயரத்தில் ஆழ்த்திய அசுரர்களுடைய தலைகளை பந்தடிப்பது போல் அடித்து, அத் தலைகளைப் போர்க் களத்தில் எங்கும் சிதற வைத்து, தெள்ளிய கடலினை மேடாக மாறச் செய்து, செழிப்புற்று பொன்னுலகத்தில் வாழும் தேவர்களும் அவர்களின் சுற்றத்தார்களும் மகிழ்ச்சி பூண்டு, வண்டு மொய்க்கும் மலர்களை விளக்கமுற அலங்காரமாகத் தலையில் சுமந்து சென்று, உனது செவ்விய திருவடியில் இட்டுப் பூஜித்துத் தமது கண்கள் மகிழ, தலைகளைத் தாழ்த்தி அழகிய உனது திருப்புகழைச் சொல்லும் வெற்றி விளங்கும் வலிய திருப்புயங்களை உடைய தலைவனே, நடுங்கி அச்சம் கொள்ளுமாறு மன்மதன் மேல் நெற்றிக் கண்ணைச் செலுத்தி, தான் கொண்ட கோபத்தால் வலிய திரிபுரங்களை விழித்து எரித்து, முன்பு சினத்துடன் வந்த யானையின் தோலை உரித்த திறம் கொண்டவரும், பகைமை பூண்டிருந்த தக்ஷனுடைய யாகத்தைப் போய் அழித்து அவனையும் கொன்ற வலிமை வாய்ந்த பித்தருமான சிவபெருமான் ஈன்ற செல்வமே, படைக்கின்ற ஆற்றல் ஒன்றை உடைய திறமை கொண்டவனாகிய பிரமனை தலையில் குட்டித் தண்டித்தவனே, தகுதியான வாசனை மிக்க மலர்களைக் கொண்ட திருவடிகளை உடையவனே, பரத சாஸ்திர முறைப்படி சுழன்று நடனம் செய்யும் பாதங்களை உடையவனே, அலங்காரத்துடன் திருச் சிற்றம்பலத்தில் குளிர்ச்சி உற மகிழ்பவனே, பசுமையான தினைப் புனத்தில் வாழும் செவ்விய குறப் பெண்ணாகிய வள்ளியின் பெருமாளே.
தனத்தில் குங்குமத்தைச் சந்தனத்தைக் கொண்டு அணைத்துச் சங்கிலிக் கொத்தும் பிலுக்குப் பொன் தனில் கொத்தும் தரித்துச் சுந்தரத்தில் பண்பு அழித்து ... மார்பகத்தில் செஞ்சாந்தையும் சந்தனத்தையும் கொண்டு அப்பி, சங்கிலிக் கொத்தும், மினுக்கும் பொன்னாலாகிய கூட்டமான நகைகளையும் அணிந்து, தமது அழகில் ஈடுபட்டவரின் நற்குணங்களை அழித்து, கண் சுழற்றிச் சண்பகப் புட்பம் குழல் மேவித் தரத்தைக் கொண்டு அசைத்துப் பொன் தகைப் பட்டும் தரித்துப் பின் சிரித்துக் கொண்டு அழைத்துக் கொந்தளத்தைத் தண் குலுக்கி ... கண்களைச் சுழற்றி, சண்பக மலர்களை கூந்தலில் வைத்து அலங்கரித்து, தமது உடலைக் கொண்டு மேன்மை விளங்க அசைத்து, பொற்சரிகை பொருந்திய பட்டாடையைத் தரித்து, பின்பு சிரித்து, கொண்டு வந்து அழைத்துச் சென்று கூந்தலை அன்பாக அசைத்து, சங்கு அலப்புத் தன் கரத்துக் கொண்டு அணைத்துச் சம்ப்ரமித்துக் கொண்டு உறவாடிப் புனித்தப் பஞ்சு அணைக் கண் திண் படுத்துச் சந்தனப் பொட்டும் குலைத்துப் பின் புயத்தைக் கொண்டு அணைத்து ... வளையல்கள் சப்திக்கும் தமது கைகளால் கொண்டு போய் அணைத்து, பெருங் களிப்புடன் உறவு பூண்டு, உயர்ந்த பஞ்சணை மெத்தையில் நன்றாகப் படுத்து, (வந்தவருடைய) சந்தனப் பொட்டைக் கலைத்து, பின்பு தனது கைகளால் அவர்களது தோளைத் தழுவி, பின் சுகித்திட்டு இன்பு கட்டிப் பொன் சரக் கொத்தும் சிதைப்பப் பொன் தரப்பற்றும் பொது மாதர் புணர்ப் பித்தும் பிடித்துப் பொன் கொடுத்துப் பின் பிதிர்ச் சித்தன் ... பின்னர் இன்ப சுகத்தை அனுபவித்து, பொன் கட்டிகளால் ஆன மணி வடத் திரள்களும் செலவழித்துத் தொலையும்படி பொன்னைத் தருமாறு பற்றுகின்ற விலைமாதர்களுடன் சேரும் பைத்தியமும், (அந்த மாதர்களுக்குப்) பொன்னைக் கொடுத்த பிறகு கலக்கம் அடையும் மனமுடைய நான், திணிக் கட்டும் சிதைத்துக் கண் சிறுப்பப் புண் பிடித்த அப்புண் புடைத்துக் கண் பழுத்துக் கண்டவர்க்குக் கண் புதைப்பச் சென்று உழல்வேனோ ... உடல் வலிமை சிதைத்துத் தளர்ந்து, கண்கள் சிறுத்துப் போய், உடம்பெல்லாம் புண்ணாகி, அந்தப் புண் வீங்கிச் சீழ் பிடித்து, அதைப் பார்த்தவர்கள் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு செல்லும்படியாக நான் திரிவேனோ? சினத்துக் கண் சிவப்பச் சங்கு ஒலிப்பத் திண் கவட்டுச் செம் குவட்டைச் சென்று இடித்துச் செண் தரைத் துக்கம் பிடிக்கப் பண் சிரத்தைப் பந்தடித்துக் கொண்டு இறைத்துத் தெண் கடல் திட்டும் கொ(ள்)ளை போக ... கோபித்துக் கண் சிவக்கவும், சங்குகள் ஒலிக்கவும், வலிய கிளைகளை உடைய செவ்விய கிரெளஞ்ச மலையைப் பொடிபடுத்தி, விண்ணோரையும் மண்ணுலகில் உள்ளோரையும் துயரத்தில் ஆழ்த்திய அசுரர்களுடைய தலைகளை பந்தடிப்பது போல் அடித்து, அத் தலைகளைப் போர்க் களத்தில் எங்கும் சிதற வைத்து, தெள்ளிய கடலினை மேடாக மாறச் செய்து, செழித்துப் பொன் சுரர் சுற்றம் களித்துக் கொண்டு அளிப் புட்பம் சிறக்கப் பண் சிரத்தில் கொண்டு இறைத்துச் செம் பதத்தில் கண் திளைப்பத் தந்து தலைத் தழ்த்து அம் புகழ்ச் செப்பும் சயத்துத் திண் புய வேளே ... செழிப்புற்று பொன்னுலகத்தில் வாழும் தேவர்களும் அவர்களின் சுற்றத்தார்களும் மகிழ்ச்சி பூண்டு, வண்டு மொய்க்கும் மலர்களை விளக்கமுற அலங்காரமாகத் தலையில் சுமந்து சென்று, உனது செவ்விய திருவடியில் இட்டுப் பூஜித்துத் தமது கண்கள் மகிழ, தலைகளைத் தாழ்த்தி அழகிய உனது திருப்புகழைச் சொல்லும் வெற்றி விளங்கும் வலிய திருப்புயங்களை உடைய தலைவனே, பனித்து உட்க அங்கசற்குக் கண் பரப்பித் தன் சினத்தில் திண் புரத்தைக் கண்டு எரித்துப் பண் கயத்தைப் பண்டு உரித்துப்பன் பகைத் தக்கன் தவத்தைச் சென்று அழித்துக் கொன்ற அடல் பித்தன் தரு வாழ்வே ... நடுங்கி அச்சம் கொள்ளுமாறு மன்மதன் மேல் நெற்றிக் கண்ணைச் செலுத்தி, தான் கொண்ட கோபத்தால் வலிய திரிபுரங்களை விழித்து எரித்து, முன்பு சினத்துடன் வந்த யானையின் தோலை உரித்த திறம் கொண்டவரும், பகைமை பூண்டிருந்த தக்ஷனுடைய யாகத்தைப் போய் அழித்து அவனையும் கொன்ற வலிமை வாய்ந்த பித்தருமான சிவபெருமான் ஈன்ற செல்வமே, படைத் துப்பு ஒன்றுடைத் திட்பன் தனைக் குட்டும் படுத்திப் பண் கடிப் புட்பம் கலைச் சுற்றும் பதத்த பண்புறச் சிற்றம்பலத்தின் கண் களித்தப் பைம் புனத்தில் செம் குறத்திப் பெண் பெருமாளே. ... படைக்கின்ற ஆற்றல் ஒன்றை உடைய திறமை கொண்டவனாகிய பிரமனை தலையில் குட்டித் தண்டித்தவனே, தகுதியான வாசனை மிக்க மலர்களைக் கொண்ட திருவடிகளை உடையவனே, பரத சாஸ்திர முறைப்படி சுழன்று நடனம் செய்யும் பாதங்களை உடையவனே, அலங்காரத்துடன் திருச் சிற்றம்பலத்தில் குளிர்ச்சி உற மகிழ்பவனே, பசுமையான தினைப் புனத்தில் வாழும் செவ்விய குறப் பெண்ணாகிய வள்ளியின் பெருமாளே.