பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு எனத் திரண்டு பவளம் பதித்த செம் பொன் நிற மார்பில் படரும் கனத்த கொங்கை மி(ன்)னல் கொந்தளித்து சிந்த
பல விஞ்சையைப் புலம்பி அழகான புருவம் சுழற்றி இந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு கயல் மேவும் பொறிகள் சுழற்றி
ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடி கொண்டு அழிக்கும் வஞ்சர் உறவாமோ
உருவம் தரித்து உகந்து கரமும் பிடித்து உவந்து உறவும் பிடித்த அணங்கை
வனம் மீதே ஒளிர் கொம்பினைச் சவுந்தரிய உம்பலைக் கொணர்ந்து ஒளிர் வஞ்சியைப் புணர்ந்த மணி மார்பா
செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே
தினமும் களித்து செம் பொன் உலகம் துதித்து இறைஞ்சு திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே.
இளமையான, பருத்த, இரு யானைத் தந்தங்கள் என்று சொல்லும்படி திரட்சியுற்று, பவளம் பதித்தது போன்ற செவ்விய பொன்னிறமான மார்பில் பரந்துள்ள கனம் கொண்ட மார்பகங்கள் மின்னல் மின்னி எழுந்தது போல ஒளி வீச, பல மாய வித்தைப் பேச்சுக்களைப் பலமாகப் பேசி, தமது அழகான புருவங்களைச் சுழற்றி, வானவில் வந்து தோன்றியது போலப் புளகம் தருகின்ற இரண்டு கயல் மீன் போல் உள்ள உறுப்பாகிய கண்களைச் சுழற்றி, நிரம்பவும் தொட்டுப் பயின்று, சொக்குப் பொடி கொண்டு அழிக்கின்ற வஞ்சகர்களாகிய பொது மகளிருடைய உறவு நல்லதாகுமோ? மாறுவேடம் பூண்டு, ஆசையுடன் (வளைச் செட்டியாய் வள்ளியின்) கைகளைப் பற்றி மகிழ்ந்து, அவளது உறவையும் கொண்டு, வள்ளிமலைக் காட்டில் விளங்கும் கொம்பினை உடைய அழகிய (கணபதியாகிய) யானையை வரவழைத்து, விளங்கும் வஞ்சிக்கொடி போன்ற வள்ளியைக் கலந்த அழகிய மார்பனே, போர் நடந்த கொடிய போர்க்களத்தில் வந்த சூரன் பிளவுபட்டு அழிய (நமசிவாய என்ற) பஞ்சாக்ஷரத்தின் ஆற்றலைக் கொண்ட வேலை வேகமாகச் செலுத்தியவனே, நாள்தோறும் மகிழ்ச்சியுடன் செவ்விய பொன்னுலகத்தினரான தேவர்கள் துதித்து வணங்கும் திரு அம்பலத்தில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே.
பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு எனத் திரண்டு பவளம் பதித்த செம் பொன் நிற மார்பில் படரும் கனத்த கொங்கை மி(ன்)னல் கொந்தளித்து சிந்த ... இளமையான, பருத்த, இரு யானைத் தந்தங்கள் என்று சொல்லும்படி திரட்சியுற்று, பவளம் பதித்தது போன்ற செவ்விய பொன்னிறமான மார்பில் பரந்துள்ள கனம் கொண்ட மார்பகங்கள் மின்னல் மின்னி எழுந்தது போல ஒளி வீச, பல விஞ்சையைப் புலம்பி அழகான புருவம் சுழற்றி இந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு கயல் மேவும் பொறிகள் சுழற்றி ... பல மாய வித்தைப் பேச்சுக்களைப் பலமாகப் பேசி, தமது அழகான புருவங்களைச் சுழற்றி, வானவில் வந்து தோன்றியது போலப் புளகம் தருகின்ற இரண்டு கயல் மீன் போல் உள்ள உறுப்பாகிய கண்களைச் சுழற்றி, ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடி கொண்டு அழிக்கும் வஞ்சர் உறவாமோ ... நிரம்பவும் தொட்டுப் பயின்று, சொக்குப் பொடி கொண்டு அழிக்கின்ற வஞ்சகர்களாகிய பொது மகளிருடைய உறவு நல்லதாகுமோ? உருவம் தரித்து உகந்து கரமும் பிடித்து உவந்து உறவும் பிடித்த அணங்கை ... மாறுவேடம் பூண்டு, ஆசையுடன் (வளைச் செட்டியாய் வள்ளியின்) கைகளைப் பற்றி மகிழ்ந்து, அவளது உறவையும் கொண்டு, வனம் மீதே ஒளிர் கொம்பினைச் சவுந்தரிய உம்பலைக் கொணர்ந்து ஒளிர் வஞ்சியைப் புணர்ந்த மணி மார்பா ... வள்ளிமலைக் காட்டில் விளங்கும் கொம்பினை உடைய அழகிய (கணபதியாகிய) யானையை வரவழைத்து, விளங்கும் வஞ்சிக்கொடி போன்ற வள்ளியைக் கலந்த அழகிய மார்பனே, செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே ... போர் நடந்த கொடிய போர்க்களத்தில் வந்த சூரன் பிளவுபட்டு அழிய (நமசிவாய என்ற) பஞ்சாக்ஷரத்தின் ஆற்றலைக் கொண்ட வேலை வேகமாகச் செலுத்தியவனே, தினமும் களித்து செம் பொன் உலகம் துதித்து இறைஞ்சு திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே. ... நாள்தோறும் மகிழ்ச்சியுடன் செவ்விய பொன்னுலகத்தினரான தேவர்கள் துதித்து வணங்கும் திரு அம்பலத்தில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே.