முக(ம்) சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம்குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் குழை ஆட
அம் கர சமுகம் முழவ பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் முரணும் சிறு பவளம் தரள வடம் தொடை ஆட
கொடி போலத் துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு துதை பஞ்சு அணை மிசை அங்கசன் ரதி இன்பம் அதாகிச் செயல் மேவி
தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும் சுக சந்திர முகமும் பத அழகும் தமியேனுக்கு அருள்வாயே
அகர அம் திரு உயிர் பண்பு உற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் க(ண்)ணில் வளரும் சிவகாமி அமுதம் பொழி பரை அந்தரி உமை பங்க அரனாருக்கு ஒரு சேயே
அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போலத் திகழ்வோனே
மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத மறையன் தலை உடையும்படி நடனம் கொளு மாழைக் கதிர் வேலா
வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குற மகள் பங்கொடு வளர் தென் புலியூரில் மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேசப் பெருமாளே.
முகம், சந்திரன். புருவம், வில். கண், கயல் மீன். கரிய மேகம் போன்றது அழகிய கூந்தல். ஒளி வீசும் மாலையில் இருந்து இசைகளை வண்டுகள் பாட, பேச்சும் கிளி போன்றது. வாயிதழ், தாமரை. பற்கள் சங்கின் ஒளி கொண்டன. காதில் குண்டலங்கள் அசைவன. அழகிய கையிணைகள் (வளையல்களால்) ஒலி செய்ய, வாசனை உள்ள செஞ்சாந்தின் நறு மணம் கொண்ட மார்பகங்கள் என்னும் இன்பச் சாறு பொருந்திய குடத்துக்கும், மலைக்கும் ஒப்பாகி, பரந்த மார்பில் நிறத்தில் மாறுபடும் சிறிய பவள வடமும், முத்து மாலையும் அசைந்தாட, கொடி அசைவது போல, பவளக் கொடி ஒடிவது போன்ற இடை துவள, நடனம் செய்து, வாழை போன்ற தொடை மறையும்படி அசைந்தாடுகின்ற, அழகிய சுகம் தருகின்ற பெண்களோடு, நெருங்கிய பஞ்சு மெத்தையில் மன்மதன் ரதியும் போல இன்பம் தரும் லீலைகளைச் செய்து, மாலை சிதறவும், பேச்சு கொஞ்சவும், கூந்தல் சுழன்று அசையவும், கண்கள் சோர்வு அடையவும், இடை தளரவும், காம மயக்கம் கொண்டு நான் விலைமாதர்களைத் தழுவிய போதிலும், அழகிய சந்திரன் போன்ற உனது முக தரிசனத்தையும், திருவாயால் கூறும் உபதேச மொழியையும் அடியேனுக்கு அருள் செய்வாயாக. அகர எழுத்தைப் போல் தனித்தும் வேறாக இருந்தும் ஆன்மாக்கள் உய்ய வழி காட்டும் திருமால் ஆகி, என் கண்ணில் விளங்கும் சுடர் ஒளியாம் சிவகாமியாகிய, அமுதத்தைப் பொழியும் பராசக்தி உமா தேவியின் பாகத்தில் உறையும் சிவபெருமானுக்கு ஒப்பற்ற குழந்தையே, அசுரனுடைய தலை, தேர், குதிரை, வில் இவை எல்லாம் கெட, (அவனுக்குக் காவலாயிருந்த) எழு கிரி, அம்பு முதலிய பல படைகளும் பொடிந்து தூளாக, கடலும், கிரவுஞ்ச மலையும் சாய்ந்து விழ, போரை மேற் கொண்டு வேலைச் செலுத்திய செவ்விய கரத்தினனே, ஒளி வீசும் செஞ்சுடர்ச் சூரியனைப் போல விளங்குபவனே, மகர மீனைக் கொடியாகவும் நிலவைக் குடையாகவும் உடைய மன்மதனின் அழகிய தந்தையாகிய திருமாலின் மருமகன் என்று அழகிய வெற்றிச் சின்னமும், முரசம் என்னும் பறைகளும், சாஸ்திர நூல்களும் புகழ்ந்து நிற்க, பிரமனின் தலை உடையும்படி (அவனைக் குட்டி) திருவிளையாடல் கொண்டவனும், பொன்னின் நிறத்தை உடையவனும் ஆகிய ஒளி வீசும் வேலனே, அழகு நிறைந்த இந்திரனுடைய மகளாகிய தேவயானையோடு அழகிய திருமணத்தைச் செய்து கொண்டு, (பின்பு) காம லீலைகளை குறப் பெண் வள்ளியோடு விளையாடி, திருவளரும் தென்புலியூரில் (சிதம்பரத்தில்) யாவரும் கண்டு களிக்கும் திருவம்பலத்தில் விளங்கும் குமரேசப் பெருமாளே.
முக(ம்) சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம்குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் குழை ஆட ... முகம், சந்திரன். புருவம், வில். கண், கயல் மீன். கரிய மேகம் போன்றது அழகிய கூந்தல். ஒளி வீசும் மாலையில் இருந்து இசைகளை வண்டுகள் பாட, பேச்சும் கிளி போன்றது. வாயிதழ், தாமரை. பற்கள் சங்கின் ஒளி கொண்டன. காதில் குண்டலங்கள் அசைவன. அம் கர சமுகம் முழவ பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் முரணும் சிறு பவளம் தரள வடம் தொடை ஆட ... அழகிய கையிணைகள் (வளையல்களால்) ஒலி செய்ய, வாசனை உள்ள செஞ்சாந்தின் நறு மணம் கொண்ட மார்பகங்கள் என்னும் இன்பச் சாறு பொருந்திய குடத்துக்கும், மலைக்கும் ஒப்பாகி, பரந்த மார்பில் நிறத்தில் மாறுபடும் சிறிய பவள வடமும், முத்து மாலையும் அசைந்தாட, கொடி போலத் துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு துதை பஞ்சு அணை மிசை அங்கசன் ரதி இன்பம் அதாகிச் செயல் மேவி ... கொடி அசைவது போல, பவளக் கொடி ஒடிவது போன்ற இடை துவள, நடனம் செய்து, வாழை போன்ற தொடை மறையும்படி அசைந்தாடுகின்ற, அழகிய சுகம் தருகின்ற பெண்களோடு, நெருங்கிய பஞ்சு மெத்தையில் மன்மதன் ரதியும் போல இன்பம் தரும் லீலைகளைச் செய்து, தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும் சுக சந்திர முகமும் பத அழகும் தமியேனுக்கு அருள்வாயே ... மாலை சிதறவும், பேச்சு கொஞ்சவும், கூந்தல் சுழன்று அசையவும், கண்கள் சோர்வு அடையவும், இடை தளரவும், காம மயக்கம் கொண்டு நான் விலைமாதர்களைத் தழுவிய போதிலும், அழகிய சந்திரன் போன்ற உனது முக தரிசனத்தையும், திருவாயால் கூறும் உபதேச மொழியையும் அடியேனுக்கு அருள் செய்வாயாக. அகர அம் திரு உயிர் பண்பு உற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் க(ண்)ணில் வளரும் சிவகாமி அமுதம் பொழி பரை அந்தரி உமை பங்க அரனாருக்கு ஒரு சேயே ... அகர எழுத்தைப் போல் தனித்தும் வேறாக இருந்தும் ஆன்மாக்கள் உய்ய வழி காட்டும் திருமால் ஆகி, என் கண்ணில் விளங்கும் சுடர் ஒளியாம் சிவகாமியாகிய, அமுதத்தைப் பொழியும் பராசக்தி உமா தேவியின் பாகத்தில் உறையும் சிவபெருமானுக்கு ஒப்பற்ற குழந்தையே, அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போலத் திகழ்வோனே ... அசுரனுடைய தலை, தேர், குதிரை, வில் இவை எல்லாம் கெட, (அவனுக்குக் காவலாயிருந்த) எழு கிரி, அம்பு முதலிய பல படைகளும் பொடிந்து தூளாக, கடலும், கிரவுஞ்ச மலையும் சாய்ந்து விழ, போரை மேற் கொண்டு வேலைச் செலுத்திய செவ்விய கரத்தினனே, ஒளி வீசும் செஞ்சுடர்ச் சூரியனைப் போல விளங்குபவனே, மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத மறையன் தலை உடையும்படி நடனம் கொளு மாழைக் கதிர் வேலா ... மகர மீனைக் கொடியாகவும் நிலவைக் குடையாகவும் உடைய மன்மதனின் அழகிய தந்தையாகிய திருமாலின் மருமகன் என்று அழகிய வெற்றிச் சின்னமும், முரசம் என்னும் பறைகளும், சாஸ்திர நூல்களும் புகழ்ந்து நிற்க, பிரமனின் தலை உடையும்படி (அவனைக் குட்டி) திருவிளையாடல் கொண்டவனும், பொன்னின் நிறத்தை உடையவனும் ஆகிய ஒளி வீசும் வேலனே, வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குற மகள் பங்கொடு வளர் தென் புலியூரில் மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேசப் பெருமாளே. ... அழகு நிறைந்த இந்திரனுடைய மகளாகிய தேவயானையோடு அழகிய திருமணத்தைச் செய்து கொண்டு, (பின்பு) காம லீலைகளை குறப் பெண் வள்ளியோடு விளையாடி, திருவளரும் தென்புலியூரில் (சிதம்பரத்தில்) யாவரும் கண்டு களிக்கும் திருவம்பலத்தில் விளங்கும் குமரேசப் பெருமாளே.