காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி அற்ற காமப் பூசல் இட்டு மதியாதே
கார் ஒத்த ஏய் நிறத்த ஓதிக் காவனத்தின் நீழற்கே தருக்கி விளையாடி
சேதித்தே கருத்தை நேர் உற்றே பெருத்த சேல் ஒத்தே வருத்தும் விழி மானார்
தேமல் பார வெற்பில் மூழ்கித் தாபம் மிக்க தீமைக்கு ஆவி தப்ப நெறி தாராய்
மாதைக் காதலித்து வேடக் கானகத்து வாசத் தாள் சிவப்ப வருவோனே
வாரிக்கே ஒளித்த மாயச் சூரை வெட்டி மாளப் போர் தொலைத்த வடிவேலா
வீதித் தேர் நடத்து தூள் அத்தால் அருக்கன் வீரத் தேர் மறைத்த புலியூர் வாழ்
மேலைக் கோபுரத்து மேவிக் கேள்வி மிக்க வேதத்தோர் துதித்த பெருமாளே.
காதை வெட்டுவது போல வேகமாக (அந்தக் காதின் மேல்) மோதி, கேட்டறியாத காமப் போரை விளைவித்து, யாரையும் மதிக்காமல், மேகத்தை ஒத்து நிகர்க்கும் கருநிறத்தை உடைய கூந்தலாகிய காட்டின் நிழலிலே களிப்புற்று விளையாடி, (தன்னைக் கண்டவர்களுடைய) கருத்தை அழித்து, ஒழுங்காக பெரிதாக விளங்கி சேல் மீன் போன்று (ஆண்களை) வருத்துகின்ற கண்களை உடைய பெண்களின் தேமல் படர்ந்துள்ள கனத்த மலை போன்ற மார்பிலே மூழ்கி, காம வேட்கை மிக்க கொடுமையினின்றும், என்னுடைய உயிர் பிழைக்கும்படியான நல்ல வழிகளைத் தந்தருளுக. (வள்ளிப்) பெண் மீது ஆசை கொண்டு, வேடர்கள் வாழும் காட்டில் நறுமணம் வீசும் திருவடிகள் சிவந்து போகச் சென்றவனே, கடலில் சென்று ஒளிந்துகொண்ட, மாயத்தில் வல்ல (மாமரமாகிய) சூரனை வெட்டி, அவன் மாளும்படி போர் செய்து முடித்த கூரிய வேலனே, வீதியில் தேர் செல்லுவதால் எழும் தூசியிலே சூரியனுடைய வீரத் தேரும் மறைபடும் புலியூர் ஆகிய சிதம்பரத்தில் இருக்கும் மேற்குக் கோபுரத்தில் வீற்றிருந்து, கேள்வி ஞானம் மிக்க மறையோர்கள் துதிக்கின்ற பெருமாளே.
காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி அற்ற காமப் பூசல் இட்டு மதியாதே ... காதை வெட்டுவது போல வேகமாக (அந்தக் காதின் மேல்) மோதி, கேட்டறியாத காமப் போரை விளைவித்து, யாரையும் மதிக்காமல், கார் ஒத்த ஏய் நிறத்த ஓதிக் காவனத்தின் நீழற்கே தருக்கி விளையாடி ... மேகத்தை ஒத்து நிகர்க்கும் கருநிறத்தை உடைய கூந்தலாகிய காட்டின் நிழலிலே களிப்புற்று விளையாடி, சேதித்தே கருத்தை நேர் உற்றே பெருத்த சேல் ஒத்தே வருத்தும் விழி மானார் ... (தன்னைக் கண்டவர்களுடைய) கருத்தை அழித்து, ஒழுங்காக பெரிதாக விளங்கி சேல் மீன் போன்று (ஆண்களை) வருத்துகின்ற கண்களை உடைய பெண்களின் தேமல் பார வெற்பில் மூழ்கித் தாபம் மிக்க தீமைக்கு ஆவி தப்ப நெறி தாராய் ... தேமல் படர்ந்துள்ள கனத்த மலை போன்ற மார்பிலே மூழ்கி, காம வேட்கை மிக்க கொடுமையினின்றும், என்னுடைய உயிர் பிழைக்கும்படியான நல்ல வழிகளைத் தந்தருளுக. மாதைக் காதலித்து வேடக் கானகத்து வாசத் தாள் சிவப்ப வருவோனே ... (வள்ளிப்) பெண் மீது ஆசை கொண்டு, வேடர்கள் வாழும் காட்டில் நறுமணம் வீசும் திருவடிகள் சிவந்து போகச் சென்றவனே, வாரிக்கே ஒளித்த மாயச் சூரை வெட்டி மாளப் போர் தொலைத்த வடிவேலா ... கடலில் சென்று ஒளிந்துகொண்ட, மாயத்தில் வல்ல (மாமரமாகிய) சூரனை வெட்டி, அவன் மாளும்படி போர் செய்து முடித்த கூரிய வேலனே, வீதித் தேர் நடத்து தூள் அத்தால் அருக்கன் வீரத் தேர் மறைத்த புலியூர் வாழ் ... வீதியில் தேர் செல்லுவதால் எழும் தூசியிலே சூரியனுடைய வீரத் தேரும் மறைபடும் புலியூர் ஆகிய சிதம்பரத்தில் இருக்கும் மேலைக் கோபுரத்து மேவிக் கேள்வி மிக்க வேதத்தோர் துதித்த பெருமாளே. ... மேற்குக் கோபுரத்தில் வீற்றிருந்து, கேள்வி ஞானம் மிக்க மறையோர்கள் துதிக்கின்ற பெருமாளே.