கொந்தள ஓலைகள் ஆடப் பண் சங்கு ஒளி போல் நகை வீசித் தண் கொங்கைகள் மார்பினில் ஆட
கொண்டை என் மேகம் கொங்கு எழு தோள் வளை ஆடக் கண் செம் கயல் வாளிகள் போல
பண் கொஞ்சிய கோகிலமாகப் பொன் பறிகாரர் தந்திரமாம் என ஏகி
பொன் தொங்கலொடு ஆரமும் ஆடச் செம் தம்பல வாயொடு பேசிக் கொண்டு உறவாடி
சம்பளம் ஈது என ஓதிப் பின் பஞ்சணை மேல் மயல் ஆடு அச்சம் சங்கை இல் மூளியர் பால் வைக்கும் செயல் தீராய்
அந்தகன் ஆருயிர் போகப் பொன் திண் புரமோடு எரி பாயப் பண்டு அங்கசனார் உடல் வேகக் கண் தழல் மேவி
அண்டர்களோடு அடல் ஆர் தக்கன் சந்திர சூரியர் வீழச் சென்று அம்பல மீதினில் ஆடு அத்தன் குருநாதா
சிந்துரமோடு அரி தேர் வர்க்கம் பொங்கமொடு ஏழ் கடல் சூர் பத்மன் சிந்திட வேல் விடு வாகைத் திண் புய வேளே
செம் குற மாது மி(ன்)னாளைக் கண்டு இங்கிதமாய் உறவாடிப் பண் செந்தமிழ் மால் புலியூர் நத்தும் பெருமாளே.
தலை மயிர்ச் சுருளின் கீழுள்ள காதோலைகள் அசைய, சீரான சங்கின் ஒளியைப் போல பற்கள் ஒளியை வீசி, குளிர்ச்சியான மார்பகங்கள் நெஞ்சில் அசைய, கொண்டை என்கின்ற கறுத்த மேகமும் வாசனையை எழுப்பி வீச, தோள் வளையல்கள் ஆட, கண்கள் சிவந்த கயல் மீன் போலவும் அம்புகள் போலவும் விளங்க, இசை கொஞ்சும் குயிலென விளங்கி, பொன் காசுக்களைப் பறிப்பவர்களாகிய விலைமாதர்கள் தந்திரச் செயல்களுடன் சென்று, பொன் மாலையுடன் ஆரமும் கழுத்தில் அசைய, சிவந்த தாம்பூலக் கரையுடைய வாயுடன் பேசியிருந்து, பல உறவு முறைகளைக் கையாண்டு, (தனக்குக் கொடுக்க வேண்டிய) தொகை இவ்வளவு என்று நிச்சயித்து, அதன் பின்னர் பஞ்சு மெத்தையின் மேல் காம மயக்கப் பேச்சுக்களைப் பேசும், பயமும் வெட்கமும் இல்லாத அறிவிலிகளிடத்தே அன்பு வைக்கும் இழிச் செயலை ஒழித்தருளுக. யமனுடைய அரிய உயிர் அழிந்து போகவும், அழகிய வலிய திரி புரங்கள் எரி பாய்ந்து அழியவும், முன்பு மன்மதனுடைய உடல் வெந்து விழவும், நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பைச் செலுத்தி, தேவர்களுடன் வலிமை பொருந்திய தக்கன், சந்திர சூரியர்களும் பங்கப்பட விழச் செய்தபின் போய் (சிதம்பரத்திலுள்ள) பொன் அம்பலத்தின் மீது கூத்தாடின பெருமானாகிய சிவபிரானுக்குக் குரு நாதனே, யானையுடன், குதிரை, தேர்க் கூட்டங்களின் சேனைகள் எழுச்சியுடன், ஏழு கடல்களும், சூரபத்மனும் அழிபட வேலைச் செலுத்திய வெற்றி வாய்ந்த வலிய புயங்களைக் கொண்ட தலைவனே, செவ்விய குற மாதாகிய வள்ளி என்னும் மின்னல் போன்ற அழகியைப் பார்த்து, இனிமையாய் உறவு பூண்டு, இசை நிரம்பிய செந்தமிழ் விளங்கும் புலியூராகிய சிதம்பரத்தை விரும்பும் பெருமாளே.
கொந்தள ஓலைகள் ஆடப் பண் சங்கு ஒளி போல் நகை வீசித் தண் கொங்கைகள் மார்பினில் ஆட ... தலை மயிர்ச் சுருளின் கீழுள்ள காதோலைகள் அசைய, சீரான சங்கின் ஒளியைப் போல பற்கள் ஒளியை வீசி, குளிர்ச்சியான மார்பகங்கள் நெஞ்சில் அசைய, கொண்டை என் மேகம் கொங்கு எழு தோள் வளை ஆடக் கண் செம் கயல் வாளிகள் போல ... கொண்டை என்கின்ற கறுத்த மேகமும் வாசனையை எழுப்பி வீச, தோள் வளையல்கள் ஆட, கண்கள் சிவந்த கயல் மீன் போலவும் அம்புகள் போலவும் விளங்க, பண் கொஞ்சிய கோகிலமாகப் பொன் பறிகாரர் தந்திரமாம் என ஏகி ... இசை கொஞ்சும் குயிலென விளங்கி, பொன் காசுக்களைப் பறிப்பவர்களாகிய விலைமாதர்கள் தந்திரச் செயல்களுடன் சென்று, பொன் தொங்கலொடு ஆரமும் ஆடச் செம் தம்பல வாயொடு பேசிக் கொண்டு உறவாடி ... பொன் மாலையுடன் ஆரமும் கழுத்தில் அசைய, சிவந்த தாம்பூலக் கரையுடைய வாயுடன் பேசியிருந்து, பல உறவு முறைகளைக் கையாண்டு, சம்பளம் ஈது என ஓதிப் பின் பஞ்சணை மேல் மயல் ஆடு அச்சம் சங்கை இல் மூளியர் பால் வைக்கும் செயல் தீராய் ... (தனக்குக் கொடுக்க வேண்டிய) தொகை இவ்வளவு என்று நிச்சயித்து, அதன் பின்னர் பஞ்சு மெத்தையின் மேல் காம மயக்கப் பேச்சுக்களைப் பேசும், பயமும் வெட்கமும் இல்லாத அறிவிலிகளிடத்தே அன்பு வைக்கும் இழிச் செயலை ஒழித்தருளுக. அந்தகன் ஆருயிர் போகப் பொன் திண் புரமோடு எரி பாயப் பண்டு அங்கசனார் உடல் வேகக் கண் தழல் மேவி ... யமனுடைய அரிய உயிர் அழிந்து போகவும், அழகிய வலிய திரி புரங்கள் எரி பாய்ந்து அழியவும், முன்பு மன்மதனுடைய உடல் வெந்து விழவும், நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பைச் செலுத்தி, அண்டர்களோடு அடல் ஆர் தக்கன் சந்திர சூரியர் வீழச் சென்று அம்பல மீதினில் ஆடு அத்தன் குருநாதா ... தேவர்களுடன் வலிமை பொருந்திய தக்கன், சந்திர சூரியர்களும் பங்கப்பட விழச் செய்தபின் போய் (சிதம்பரத்திலுள்ள) பொன் அம்பலத்தின் மீது கூத்தாடின பெருமானாகிய சிவபிரானுக்குக் குரு நாதனே, சிந்துரமோடு அரி தேர் வர்க்கம் பொங்கமொடு ஏழ் கடல் சூர் பத்மன் சிந்திட வேல் விடு வாகைத் திண் புய வேளே ... யானையுடன், குதிரை, தேர்க் கூட்டங்களின் சேனைகள் எழுச்சியுடன், ஏழு கடல்களும், சூரபத்மனும் அழிபட வேலைச் செலுத்திய வெற்றி வாய்ந்த வலிய புயங்களைக் கொண்ட தலைவனே, செம் குற மாது மி(ன்)னாளைக் கண்டு இங்கிதமாய் உறவாடிப் பண் செந்தமிழ் மால் புலியூர் நத்தும் பெருமாளே. ... செவ்விய குற மாதாகிய வள்ளி என்னும் மின்னல் போன்ற அழகியைப் பார்த்து, இனிமையாய் உறவு பூண்டு, இசை நிரம்பிய செந்தமிழ் விளங்கும் புலியூராகிய சிதம்பரத்தை விரும்பும் பெருமாளே.