முத்த(ம்) மோகன(ம்) தத்தையினார் குரல் ஒத்த வாய் இத சர்க்கரையார்
நகை முத்து வார் அணி பொன் குவடு ஆர் முலை விலைமாதர் மொக்கை போக செகுத்திடுவார்
பொருள் பற்றி வேறும் அழைத்திடுவார் சிலர் முச் சலீலிகை சொக்கிடுவார் இடர் கலி சூழச் சித்தில் ஆட அழைத்திடுவார்
கவடு உற்ற மாதர் வலைப் புகு நாயெனை சித்தி ஞானம் வெளிப்படவே சுடர் மட(ம்) மீதே சித்தி எ(ல்)லாம் ஒருமித்து
உனது ஆறு இனம் வைத்து நாயென் அருள் பெறவே பொருள் செப்பி ஆறுமுகப் பரிவோடு உணர்வு அருள்வாயே
தத்த னானத னத்தன தா எனு(ம்) உடுக்கை பேரி முழக்கிடவே கடல் சத்த தீவு தயித்தியர் மாளிட விடும் வேலா
சத்தி லோக பரப் பரமேசுர நிர்த்தம் ஆடு கழல் கருணாகர தற்பரா பர நித்தன ஒர் பால் உறை உமை பாலா
துத்தி மார் முலை முத்து அணி மோகன பொன் ப்ரகாசம் உளக் குற மான் மகள் துப்பு வாய் இதழ் வைத்து அணை சோதி பொன் மணி மார்பா
சுட்டி நீல இரத்தின மா மயில் உற்று மேவிய அருள் புலியூர் வளர் சுத்தனே சசி பெற்ற பெண் நாயகி பெருமாளே.
முத்தம் தந்து காம மயக்கத்தைத் தருகின்ற கிளி போன்றவர்கள். (கிளி போன்ற) குரலைக் கொண்ட வாயினின்றும் இனிய சர்க்கரை போன்ற மொழியினர். முத்தைப் போன்ற பற்கள் உடையவர். கச்சு அணிந்த அழகிய மலை போன்ற மார்பகங்களை உடைய பொது மகளிர். மதிப்பை இழக்கும்படி அழிப்பவர்கள். பொருள் காரணமாக வேறு ஆடவர்களையும் அழைப்பவர்கள். சிலர் வாய் நீர், சிறு நீர், நாத நீர் ஆகிய மூன்று நீர்கள் சம்பந்தப்பட்ட சொக்கு மருந்தைக் கொடுப்பவர்கள். துன்பமும் தரித்திரமும் சூழத் தொடர மாய வித்தைகள் ஆடி அழைப்பவர்கள். வஞ்சனை கொண்ட விலைமாதர்களின் வலையில் புகுகின்ற அடியேனுக்கு அஷ்டமா சித்திகளும் நல்ல அறிவும் தோன்ற, (நந்தி) ஒளி காணப்படும் (லலாட) புருவ நடுநிலையில், அறிவு எல்லாம் ஒன்று கூடி அமைந்துள்ள உன்னுடைய ஆறு எழுத்தை முறைப்படி வைத்து, அடியேன் உன் திருவருளைப் பெறுமாறு (அந்த ஆறெழுத்தின்) பொருளை விளக்கிச் சொல்லி, உனது திருமுகங்கள் ஆறும் கருணை கொண்டவனாய் ஞானத்தை அருள்வாயாக. தத்த னானத னத்தனதா இவ்வாறான ஒலிகளை உடுக்கையும் பேரிகைகளும் பேரொலி செய்ய, கடல் சூழ்ந்த ஏழு தீவுகளிலும் இருந்த அசுரர்கள் இறந்து போகும்படியாக வேலைச் செலுத்தியவனே, அருள் சக்தி உலகங்களுக்கு எல்லாம் முழு முதற் கடவுளாய், பரம ஈசுவரனாய், நடனம் ஆடுகின்ற திருவடிகளை உடைய கருணாகரனாய், தாமே பரம் பொருளாய், அழியாதவராய் உள்ள சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உள்ள உமா தேவியின் குழந்தையே, தேமல் படர்ந்துள்ள மார்பகத்தின் மீது முத்து மாலை அணிந்துள்ள, அழகும் பொலிவுள்ள ஒளியும் கொண்டுள்ள, மான் பெற்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் பவளம் போலச் சிவந்துள்ள வாயிதழ் ஊறலைப் பருகி அவளைத் தழுவும், ஒளி வீசும் அழகிய மணிகள் அணிந்துள்ள மார்பனே, நீலக் கொண்டையும், நீல நிறமும், ரத்தின ஒளியும் கொண்டுள்ள சிறந்த மயில் மீது பொருந்தி அமர்ந்து சிதம்பரத்தில் வீறுடன் விளங்கும் சுத்த மூர்த்தியே, இந்திராணி பெற்ற தேவயானையாகிய நாயகியின் பெருமாளே.
முத்த(ம்) மோகன(ம்) தத்தையினார் குரல் ஒத்த வாய் இத சர்க்கரையார் ... முத்தம் தந்து காம மயக்கத்தைத் தருகின்ற கிளி போன்றவர்கள். (கிளி போன்ற) குரலைக் கொண்ட வாயினின்றும் இனிய சர்க்கரை போன்ற மொழியினர். நகை முத்து வார் அணி பொன் குவடு ஆர் முலை விலைமாதர் மொக்கை போக செகுத்திடுவார் ... முத்தைப் போன்ற பற்கள் உடையவர். கச்சு அணிந்த அழகிய மலை போன்ற மார்பகங்களை உடைய பொது மகளிர். மதிப்பை இழக்கும்படி அழிப்பவர்கள். பொருள் பற்றி வேறும் அழைத்திடுவார் சிலர் முச் சலீலிகை சொக்கிடுவார் இடர் கலி சூழச் சித்தில் ஆட அழைத்திடுவார் ... பொருள் காரணமாக வேறு ஆடவர்களையும் அழைப்பவர்கள். சிலர் வாய் நீர், சிறு நீர், நாத நீர் ஆகிய மூன்று நீர்கள் சம்பந்தப்பட்ட சொக்கு மருந்தைக் கொடுப்பவர்கள். துன்பமும் தரித்திரமும் சூழத் தொடர மாய வித்தைகள் ஆடி அழைப்பவர்கள். கவடு உற்ற மாதர் வலைப் புகு நாயெனை சித்தி ஞானம் வெளிப்படவே சுடர் மட(ம்) மீதே சித்தி எ(ல்)லாம் ஒருமித்து ... வஞ்சனை கொண்ட விலைமாதர்களின் வலையில் புகுகின்ற அடியேனுக்கு அஷ்டமா சித்திகளும் நல்ல அறிவும் தோன்ற, (நந்தி) ஒளி காணப்படும் (லலாட) புருவ நடுநிலையில், அறிவு எல்லாம் ஒன்று கூடி அமைந்துள்ள உனது ஆறு இனம் வைத்து நாயென் அருள் பெறவே பொருள் செப்பி ஆறுமுகப் பரிவோடு உணர்வு அருள்வாயே ... உன்னுடைய ஆறு எழுத்தை முறைப்படி வைத்து, அடியேன் உன் திருவருளைப் பெறுமாறு (அந்த ஆறெழுத்தின்) பொருளை விளக்கிச் சொல்லி, உனது திருமுகங்கள் ஆறும் கருணை கொண்டவனாய் ஞானத்தை அருள்வாயாக. தத்த னானத னத்தன தா எனு(ம்) உடுக்கை பேரி முழக்கிடவே கடல் சத்த தீவு தயித்தியர் மாளிட விடும் வேலா ... தத்த னானத னத்தனதா இவ்வாறான ஒலிகளை உடுக்கையும் பேரிகைகளும் பேரொலி செய்ய, கடல் சூழ்ந்த ஏழு தீவுகளிலும் இருந்த அசுரர்கள் இறந்து போகும்படியாக வேலைச் செலுத்தியவனே, சத்தி லோக பரப் பரமேசுர நிர்த்தம் ஆடு கழல் கருணாகர தற்பரா பர நித்தன ஒர் பால் உறை உமை பாலா ... அருள் சக்தி உலகங்களுக்கு எல்லாம் முழு முதற் கடவுளாய், பரம ஈசுவரனாய், நடனம் ஆடுகின்ற திருவடிகளை உடைய கருணாகரனாய், தாமே பரம் பொருளாய், அழியாதவராய் உள்ள சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உள்ள உமா தேவியின் குழந்தையே, துத்தி மார் முலை முத்து அணி மோகன பொன் ப்ரகாசம் உளக் குற மான் மகள் துப்பு வாய் இதழ் வைத்து அணை சோதி பொன் மணி மார்பா ... தேமல் படர்ந்துள்ள மார்பகத்தின் மீது முத்து மாலை அணிந்துள்ள, அழகும் பொலிவுள்ள ஒளியும் கொண்டுள்ள, மான் பெற்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் பவளம் போலச் சிவந்துள்ள வாயிதழ் ஊறலைப் பருகி அவளைத் தழுவும், ஒளி வீசும் அழகிய மணிகள் அணிந்துள்ள மார்பனே, சுட்டி நீல இரத்தின மா மயில் உற்று மேவிய அருள் புலியூர் வளர் சுத்தனே சசி பெற்ற பெண் நாயகி பெருமாளே. ... நீலக் கொண்டையும், நீல நிறமும், ரத்தின ஒளியும் கொண்டுள்ள சிறந்த மயில் மீது பொருந்தி அமர்ந்து சிதம்பரத்தில் வீறுடன் விளங்கும் சுத்த மூர்த்தியே, இந்திராணி பெற்ற தேவயானையாகிய நாயகியின் பெருமாளே.