வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய வண் க(ண்)ணார்
ஆரவாரமும் அருள்வோராய் வம்பிலே வாது கூறிகள்
கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசையே தரு விலைமாதர்
பஞ்ச மா பாவமே தரு கொங்கை மேல் நேசமாய் வெகு பஞ்சியே பேசி நாள் தொறும் மெலியாதே
பந்தியாய் வான் உளோர் தொழ நின்ற சீரே குலாவிய பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே
அஞ்சவே சூரன் ஆனவன் உய்ஞ்சு போகாமலே அயில் அன்று தான் ஏவி வானவர் சிறை மீள
அன்பினோடே மனோரதம் மிஞ்ச மேலான வாழ்வு அருள் அண்டர் கோவே பராபர முதல்வோனே
கொஞ்சவே காலின் மேவு சதங்கைதான் ஆட ஆடிய கொன்றையான் நாளுமே மகிழ் புதல்வோனே
கொந்து சேர் சோலை மேவிய குன்று சூழ்வாகவே வரு
குன்று தோறாடல் மேவிய பெருமாளே.
வஞ்சகத்தையே கோடிக் கணக்காய் உள்ளத்தில் சேர்த்து வைத்துள்ள கொடியவர்கள், ஆரவாரத்துடன் அருள் புரிபவர்கள் போல காண்பித்து வீணில் வாது பேசுபவர்கள், கொஞ்சிப் பேசி காம விளையாட்டுகளைப் பற்றிப் புகழ்ந்து, ஆசையை வளர்க்கின்ற பொது மகளிரின் ஐந்து பெரிய பாவங்களுக்கும் இடமாகும் மார்பகங்களின் மேல் அன்பு வைத்து மிக வருத்தம் காட்டிப் பேசி, நான் நாள் தோறும் மெலிந்து போகாமல், வரிசையாக தேவர்கள் தொழ நின்ற பெருமை விளங்கும் பண்புகள் பொருந்திய திருவடித் தாமரைகளை எனக்கு அருள் செய்வாயாக. சூரன் பயப்படும்படியும், பிழைத்திராதபடியும் வேலை அன்றைக்கே செலுத்தி, தேவர்கள் சிறையினின்றும் மீள அன்புடன் அவர்களுடைய விருப்பம் நிறைவேற மேலான வாழ்வை அளித்த தேவர்கள் தலைவனே, பராபர முதல்வனே, கொஞ்சுதல் போல, காலில் கட்டியுள்ள சதங்கை ஒலிக்க நடனம் செய்த, கொன்றையை அணிந்த சிவபெருமான் நாள்தோறும் மகிழ்கின்ற பிள்ளையே, பூங்கொத்துக்கள் சேர்ந்த சோலைகள் பொருந்திய குன்றுகளின் சூழல் உள்ள பழமுதிர் சோலை ஆகிய குன்றுகளில் எல்லாம் வீற்றிருக்கும் பெருமாளே.
வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய வண் க(ண்)ணார் ... வஞ்சகத்தையே கோடிக் கணக்காய் உள்ளத்தில் சேர்த்து வைத்துள்ள கொடியவர்கள், ஆரவாரமும் அருள்வோராய் வம்பிலே வாது கூறிகள் ... ஆரவாரத்துடன் அருள் புரிபவர்கள் போல காண்பித்து வீணில் வாது பேசுபவர்கள், கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசையே தரு விலைமாதர் ... கொஞ்சிப் பேசி காம விளையாட்டுகளைப் பற்றிப் புகழ்ந்து, ஆசையை வளர்க்கின்ற பொது மகளிரின் பஞ்ச மா பாவமே தரு கொங்கை மேல் நேசமாய் வெகு பஞ்சியே பேசி நாள் தொறும் மெலியாதே ... ஐந்து பெரிய பாவங்களுக்கும் இடமாகும் மார்பகங்களின் மேல் அன்பு வைத்து மிக வருத்தம் காட்டிப் பேசி, நான் நாள் தோறும் மெலிந்து போகாமல், பந்தியாய் வான் உளோர் தொழ நின்ற சீரே குலாவிய பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே ... வரிசையாக தேவர்கள் தொழ நின்ற பெருமை விளங்கும் பண்புகள் பொருந்திய திருவடித் தாமரைகளை எனக்கு அருள் செய்வாயாக. அஞ்சவே சூரன் ஆனவன் உய்ஞ்சு போகாமலே அயில் அன்று தான் ஏவி வானவர் சிறை மீள ... சூரன் பயப்படும்படியும், பிழைத்திராதபடியும் வேலை அன்றைக்கே செலுத்தி, தேவர்கள் சிறையினின்றும் மீள அன்பினோடே மனோரதம் மிஞ்ச மேலான வாழ்வு அருள் அண்டர் கோவே பராபர முதல்வோனே ... அன்புடன் அவர்களுடைய விருப்பம் நிறைவேற மேலான வாழ்வை அளித்த தேவர்கள் தலைவனே, பராபர முதல்வனே, கொஞ்சவே காலின் மேவு சதங்கைதான் ஆட ஆடிய கொன்றையான் நாளுமே மகிழ் புதல்வோனே ... கொஞ்சுதல் போல, காலில் கட்டியுள்ள சதங்கை ஒலிக்க நடனம் செய்த, கொன்றையை அணிந்த சிவபெருமான் நாள்தோறும் மகிழ்கின்ற பிள்ளையே, கொந்து சேர் சோலை மேவிய குன்று சூழ்வாகவே வரு ... பூங்கொத்துக்கள் சேர்ந்த சோலைகள் பொருந்திய குன்றுகளின் சூழல் உள்ள குன்று தோறாடல் மேவிய பெருமாளே. ... பழமுதிர் சோலை ஆகிய குன்றுகளில் எல்லாம் வீற்றிருக்கும் பெருமாளே.