முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந முலைக் கச்சு அவிழ்த்து அசைத்து முசியாதே
முழுக்கக் கழப்பி எத்தி மழுப்பிப் பொருள் பறித்து மொழிக்குள் படுத்தி அழைத்து அமளி மீதே
நகைத்திட்டு அழுத்தி முத்தம் அளித்துக் களித்து மெத்த நயத்தில் கழுத்து இறுக்கி அணைவார் பால்
நடுக்கு உற்று அவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து நயத்துத் தியக்கி நித்தம் அழிவேனோ
செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி என ஆடும் செகத்துக்கு ஒருத்தர் புத்ர
நினைத்துத் துதித்த பத்த ஜெனத்துக்கு இனித்த சித்தி அருள்வோனே
மிகைத்துத் திடத்தொடு உற்று அசைத்துப் பொறுத்த அரக்கன் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய மிசைக்கு உற்று
அடுத்து மற்ற பொருப்பைப் பொடித்து இடித்து மிதித்துத் துகைத்து விட்ட பெருமாளே.
முகத்தை நன்றாக ஒழுங்கு செய்து மிகவும் மினுக்கித் தொடைத்து, ரத்தின மயமான மார்க் கச்சை அவிழ்த்து சற்றேனும் பின் வாங்காமல் அசைத்து, முழுமையாகக் காலம் போக்கியும், வஞ்சித்தும், தாமதப் படுத்தியும், (வந்தவர்களிடம்) பொருளைப் பறித்தும், தங்களுடைய பேச்சில் மயங்கி உட்படச் செய்தும், அவர்களைஅழைத்துக் கொண்டு போய் படுக்கையின் மேல், சிரித்து அணைத்து முத்தம் கொடுத்து, மகிழ்ந்து, மிகுந்த பக்குவத்துடன் கழுத்தை அழுந்த அணைந்து கொள்ளும் விலைமாதர்களுக்கு அஞ்சி நடுங்கியும், மிகவும் மனதை அவர்கள் பால் (ஓடை போலப்) பெருகிப் பாய வைத்தும், (அவர்களை) நயந்து வேண்டியும், கலக்கம் உற்று தினந்தோறும் அழிந்து போவேனோ? செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி என்ற தாள ஒத்துக்களுடன் கூத்தாடுகின்ற, உலகுக்கு ஒப்பற்றவராய் நிற்கும் சிவபெருமானுடைய குமரனே, (உன்னைத்) தியானித்து வணங்கும் அடியார் கூட்டத்துக்கு இனிமையான பேற்றை அருள்பவனே, மேல்சென்று திடத்துடன் பொருந்தி (மலையின் பாரத்தைப்) பொறுத்து, ராவணன் ஆணவம் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய மலையில் வீற்றிருந்து, அந்தக் கயிலை மலைக்கு அடுத்திருந்த பிறிதொரு மலையான கிரவுஞ்சத்தைப் பொடியாகும்படி தூள் செய்து அடக்கித் தொகைத்து விட்ட பெருமாளே.