கோங்கு இள நீர் இளக வீங்கு பயோதரமும்
வாங்கிய வேல் விழியும் இருள் கூரும் கூந்தலும் நீள் வளை கொள் காந்தளு(ம்) நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி
பூங்கொடியார் கலவி நீங்க அரிதாகி மிகு தீங்குடனே உழலும் உயிர் வாழ்வு பூண்டு அடியேன் எறியில் மாண்டு இ(ங்)ஙனே நரகில் வீழ்ந்து அலையாமல் அருள் புரிவாயே
பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மா முநியும் வேங்கையுமாய் மற மி(ன்)னுடன் வாழ்வாய்
பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக பாண்டியன் நீறு அணிய மொழிவோனே
வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர் வேங்கட மா மலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு(ம்) பெருமாளே.
கோங்கு மரத்தின் முகை, இளநீர் (இவை இரண்டும்) தோற்கும்படி பெருகி வளரும் மார்பகங்களும், செலுத்தப்பட்ட வேல் போன்ற கண்களும், இருள் மிகுந்த கூந்தலும், பெரிய வளையல்களை அணிந்துள்ள காந்தள் மலர் போன்ற கைகளும், நூல் போன்ற இடுப்பும், மாந்தளிர் போன்ற மேனியும் (ஆகிய இவைகளை) மிகவும் விரும்பி, பூங்கொடி போன்ற பொது மாதர்களின் சேர்க்கையை விடுதற்கு முடியாமல் மிக்க தீமைச் செயல்களுடன் திரிகின்ற உயிர் வாழ்க்கையை மேற்கொண்டு அடியவனாகிய நான் அந்த இழிந்த வழியிலேயே நின்று இறந்து இங்ஙனம் நரகத்தில் விழுந்து அலையாமல் அருள் புரிவாயாக. தோழியும் வேடர்களும் திகைக்கும்படி சிறந்த தவ முனியாக வந்த கிழவர் போலவும், வேங்கை மரமாகவும் வேடங்கொண்டு வேட்டுவர்களின் மின்னல் போன்ற வள்ளியுடன் வாழ்பவனே, பாண்டவர்களின் தேரைச் சாரதியாகச் செலுத்தியவனும், நீண்ட (திரிவிக்கிரம) உருவை எடுத்தவனும் ஆகிய பிரானாகிய திருமாலின் மருகனே, (கூன்) பாண்டியன் திரு நீறு அணியும்படி பதிகம் பாடிய திருஞானசம்பந்தனே, புலியும் யானையும் வேங்கை மரமும் மானும் மிகுந்த திருவேங்கடமாகிய சிறந்த மலையில் உறைபவனே, தங்களுக்குக் குறைகள் உண்டான போது அடியார்கள் அவர்களுக்கு வேண்டிய சுக போகங்களை முறையிட்டு வேண்ட, (சற்றேனும்) வெறுப்பு இல்லாமல் அதை உதவுகின்ற பெருமாளே.
கோங்கு இள நீர் இளக வீங்கு பயோதரமும் ... கோங்கு மரத்தின் முகை, இளநீர் (இவை இரண்டும்) தோற்கும்படி பெருகி வளரும் மார்பகங்களும், வாங்கிய வேல் விழியும் இருள் கூரும் கூந்தலும் நீள் வளை கொள் காந்தளு(ம்) நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி ... செலுத்தப்பட்ட வேல் போன்ற கண்களும், இருள் மிகுந்த கூந்தலும், பெரிய வளையல்களை அணிந்துள்ள காந்தள் மலர் போன்ற கைகளும், நூல் போன்ற இடுப்பும், மாந்தளிர் போன்ற மேனியும் (ஆகிய இவைகளை) மிகவும் விரும்பி, பூங்கொடியார் கலவி நீங்க அரிதாகி மிகு தீங்குடனே உழலும் உயிர் வாழ்வு பூண்டு அடியேன் எறியில் மாண்டு இ(ங்)ஙனே நரகில் வீழ்ந்து அலையாமல் அருள் புரிவாயே ... பூங்கொடி போன்ற பொது மாதர்களின் சேர்க்கையை விடுதற்கு முடியாமல் மிக்க தீமைச் செயல்களுடன் திரிகின்ற உயிர் வாழ்க்கையை மேற்கொண்டு அடியவனாகிய நான் அந்த இழிந்த வழியிலேயே நின்று இறந்து இங்ஙனம் நரகத்தில் விழுந்து அலையாமல் அருள் புரிவாயாக. பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மா முநியும் வேங்கையுமாய் மற மி(ன்)னுடன் வாழ்வாய் ... தோழியும் வேடர்களும் திகைக்கும்படி சிறந்த தவ முனியாக வந்த கிழவர் போலவும், வேங்கை மரமாகவும் வேடங்கொண்டு வேட்டுவர்களின் மின்னல் போன்ற வள்ளியுடன் வாழ்பவனே, பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக பாண்டியன் நீறு அணிய மொழிவோனே ... பாண்டவர்களின் தேரைச் சாரதியாகச் செலுத்தியவனும், நீண்ட (திரிவிக்கிரம) உருவை எடுத்தவனும் ஆகிய பிரானாகிய திருமாலின் மருகனே, (கூன்) பாண்டியன் திரு நீறு அணியும்படி பதிகம் பாடிய திருஞானசம்பந்தனே, வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர் வேங்கட மா மலையில் உறைவோனே ... புலியும் யானையும் வேங்கை மரமும் மானும் மிகுந்த திருவேங்கடமாகிய சிறந்த மலையில் உறைபவனே, வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு(ம்) பெருமாளே. ... தங்களுக்குக் குறைகள் உண்டான போது அடியார்கள் அவர்களுக்கு வேண்டிய சுக போகங்களை முறையிட்டு வேண்ட, (சற்றேனும்) வெறுப்பு இல்லாமல் அதை உதவுகின்ற பெருமாளே.