வரைவில் பொய் மங்கையர் தங்கள் அஞ்சன விழியை உகந்து முகந்து கொண்டு அடி வருடி நிதம்பம் அளைந்து
தெந்தென அளிகாடை மயில் குயில் அன்றில் எனும் பு(ள்)ளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற மடுவில் விழுந்து கிடந்து செம் தழல் மெழுகாகி
உருகி உகந்து இதழ் தின்று மென்று கையடியில் நகங்கள் வரைந்து குங்கும உபய தனங்கள் ததும்ப அன்புடன் அணையா
மஞ்சு உலவிய கொண்டை குலைந்து அலைந்து எழ அமளியில் மின் சொல் மருங்குல் இலங்கிட உணர்வு அழி இன்பம் மறந்து நின் தனை நினைவேனோ
விரவி நெருங்கு குரங்கு இனம் கொடு மொகுமொகு எனும் கடலும் கடந்து உறு விசை கொடு இலங்கை புகுந்து
அரும் தவர் களி கூர வெயில் நிலவு உம்பரும் இம்பரும் படி ஜெயஜெய என்று விடும் கொடும் கணை விறல் நிருதன் தலை சிந்தினன் திரு மருகோனே
அருகர் கணங்கள் பிணங்கிடும்படி மதுரையில் வெண் பொடியும் பரந்திட அரகர சங்கர என்று வென்று அருள் புகழ் வேலா
அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய சந்த வண் கரை அரிவை விலங்கலில் வந்து உகந்து அருள் பெருமாளே.
(பொருள் கொடுப்பின் வேண்டியவர், வேண்டாதோர் என்னும்) அளவு இல்லாமல் அன்பு காட்டும் பொய்யே பேசும் பொது மகளிர்களுடைய மை தீட்டிய கண்களில் மகிழ்ந்தும், அந்த இன்பத்தைப் பருகியும், அவர்களுடைய காலைப் பிடித்துத் தடவியும், புணர்ச்சி இன்பத்தை அனுபவித்தும், இவ்வாறு வண்டு, காடை, மயில், குயில், அன்றில் என்னும் பறவைகளின் பல ஒலிகளை எழுப்பி, பின்னர் கொப்பூழ் என்னும் மடுவில் விழுந்தும் கிடந்தும், நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல் ஆகி, உருகிக் களித்து அதர பானம் செய்தும், தின்றும், மென்று உண்டும், கையடியிலுள்ள நகங்களால் குறி இட்டும், குங்குமம் உள்ள இரண்டு மார்பகங்களும் அசைய அன்புடன் தழுவி, அழகு விளங்கும் கூந்தல் அவிழ்ந்து அலைச்சல் உற, படுக்கையில் மின்னல் என்று சொல்லத் தக்க இடை விளக்கம் தர, நல்லறிவை அழிக்கும் அந்த இன்பத்தை மறந்து உன்னை நினைக்க மாட்டேனோ? தன்னுடன் கலந்து கூடி நெருங்கி வந்த குரங்குகளின் கூட்டத்துடன் சென்று, மொகுமொகு என்று ஒலிக்கும் கடலையும் கடந்து சென்று, பொருந்திய வேகத்துடன் இலங்கையில் புகுந்து, தவப் பெரியோர்கள் மகிழ்ச்சி மிகக் கொள்ள, சூரியன், சந்திரன் முதலான தேவர்களும் இவ்வுலகோரும் பூமியில் ஜெய ஜெய என்று மகிழ்ந்து ஒலி செய்ய, செலுத்திய கொடிய அம்பால் வீரமுள்ள அசுரனாகிய ராவணனின் தலையை அறுத்துத் தள்ளிய ராமனாகிய திருமாலின் மருகனே, சமணர்களின் கூட்டங்கள் கலங்கி நிற்க, மதுரை நகரில் திருநீறு பரவ, ஹர, ஹர சங்கரா என்று போற்றப்பெற வெற்றி அடைந்து அருளிய புகழ் கொண்ட (திருஞான சம்பந்தராக வந்த) வேலனே, (காமாட்சியாக வந்து முப்பத்திரண்டு) அறங்களைக் கச்சியில் வளர்த்த அழகியாகிய பார்வதியின் மகனே, குளிர்ந்த சோலைகளும் வயல்களும் பொருந்திய, அழகிய வளப்பமுள்ள நீர்க்கரைகளும் உள்ள, வள்ளி மலையில் வந்து மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் பெருமாளே.
வரைவில் பொய் மங்கையர் தங்கள் அஞ்சன விழியை உகந்து முகந்து கொண்டு அடி வருடி நிதம்பம் அளைந்து ... (பொருள் கொடுப்பின் வேண்டியவர், வேண்டாதோர் என்னும்) அளவு இல்லாமல் அன்பு காட்டும் பொய்யே பேசும் பொது மகளிர்களுடைய மை தீட்டிய கண்களில் மகிழ்ந்தும், அந்த இன்பத்தைப் பருகியும், அவர்களுடைய காலைப் பிடித்துத் தடவியும், புணர்ச்சி இன்பத்தை அனுபவித்தும், தெந்தென அளிகாடை மயில் குயில் அன்றில் எனும் பு(ள்)ளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற மடுவில் விழுந்து கிடந்து செம் தழல் மெழுகாகி ... இவ்வாறு வண்டு, காடை, மயில், குயில், அன்றில் என்னும் பறவைகளின் பல ஒலிகளை எழுப்பி, பின்னர் கொப்பூழ் என்னும் மடுவில் விழுந்தும் கிடந்தும், நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல் ஆகி, உருகி உகந்து இதழ் தின்று மென்று கையடியில் நகங்கள் வரைந்து குங்கும உபய தனங்கள் ததும்ப அன்புடன் அணையா ... உருகிக் களித்து அதர பானம் செய்தும், தின்றும், மென்று உண்டும், கையடியிலுள்ள நகங்களால் குறி இட்டும், குங்குமம் உள்ள இரண்டு மார்பகங்களும் அசைய அன்புடன் தழுவி, மஞ்சு உலவிய கொண்டை குலைந்து அலைந்து எழ அமளியில் மின் சொல் மருங்குல் இலங்கிட உணர்வு அழி இன்பம் மறந்து நின் தனை நினைவேனோ ... அழகு விளங்கும் கூந்தல் அவிழ்ந்து அலைச்சல் உற, படுக்கையில் மின்னல் என்று சொல்லத் தக்க இடை விளக்கம் தர, நல்லறிவை அழிக்கும் அந்த இன்பத்தை மறந்து உன்னை நினைக்க மாட்டேனோ? விரவி நெருங்கு குரங்கு இனம் கொடு மொகுமொகு எனும் கடலும் கடந்து உறு விசை கொடு இலங்கை புகுந்து ... தன்னுடன் கலந்து கூடி நெருங்கி வந்த குரங்குகளின் கூட்டத்துடன் சென்று, மொகுமொகு என்று ஒலிக்கும் கடலையும் கடந்து சென்று, பொருந்திய வேகத்துடன் இலங்கையில் புகுந்து, அரும் தவர் களி கூர வெயில் நிலவு உம்பரும் இம்பரும் படி ஜெயஜெய என்று விடும் கொடும் கணை விறல் நிருதன் தலை சிந்தினன் திரு மருகோனே ... தவப் பெரியோர்கள் மகிழ்ச்சி மிகக் கொள்ள, சூரியன், சந்திரன் முதலான தேவர்களும் இவ்வுலகோரும் பூமியில் ஜெய ஜெய என்று மகிழ்ந்து ஒலி செய்ய, செலுத்திய கொடிய அம்பால் வீரமுள்ள அசுரனாகிய ராவணனின் தலையை அறுத்துத் தள்ளிய ராமனாகிய திருமாலின் மருகனே, அருகர் கணங்கள் பிணங்கிடும்படி மதுரையில் வெண் பொடியும் பரந்திட அரகர சங்கர என்று வென்று அருள் புகழ் வேலா ... சமணர்களின் கூட்டங்கள் கலங்கி நிற்க, மதுரை நகரில் திருநீறு பரவ, ஹர, ஹர சங்கரா என்று போற்றப்பெற வெற்றி அடைந்து அருளிய புகழ் கொண்ட (திருஞான சம்பந்தராக வந்த) வேலனே, அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய சந்த வண் கரை அரிவை விலங்கலில் வந்து உகந்து அருள் பெருமாளே. ... (காமாட்சியாக வந்து முப்பத்திரண்டு) அறங்களைக் கச்சியில் வளர்த்த அழகியாகிய பார்வதியின் மகனே, குளிர்ந்த சோலைகளும் வயல்களும் பொருந்திய, அழகிய வளப்பமுள்ள நீர்க்கரைகளும் உள்ள, வள்ளி மலையில் வந்து மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் பெருமாளே.