நெறித்துப் பொருப்புக் கொத்த முலைக்குத் தனத்தைக் கொட்டி நிறைத்துச் சுகித்துச் சிக்கி ...... வெகுநாளாய் நினைத்துக் கொடத்துக் கத்தை யவத்தைக் கடுக்கைப் பெற்று நிசத்திற் சுழுத்திப் பட்ட ...... அடியேனை இறுக்கிப் பிடித்துக் கட்டி யுகைத்துத் துடிக்கப் பற்றி யிழுத்துத் துவைத்துச் சுற்றி ...... யமதூதர் எனக்குக் கணக்குக் கட்டு விரித்துத் தொகைக்குட் பட்ட இலக்கப் படிக்குத் தக்க ...... படியேதான் முறுக்கித் திருப்பிச் சுட்டு மலத்திற் புகட்டித் திட்டி முழுக்கக் கலக்கப் பட்டு ...... அலையாமல் மொழிக்குத் தரத்துக் குற்ற தமிழ்க்குச் சரித்துச் சித்தி முகத்திற் களிப்புப் பெற்று ...... மயிலேறி உறுக்கிச் சினத்துச் சத்தி யயிற்குத் தரத்தைக் கைக்குள் உதிக்கப் பணித்துப் பக்கல் ...... வருவாயே உனைச்சொற் றுதிக்கத் தக்க கருத்தைக் கொடுப்பைச் சித்தி யுடைக்கற் குடிக்குட் பத்தர் ...... பெருமாளே.
நெறித்துப் பொருப்புக்கு ஒத்த முலைக்குத் தனத்தைக் கொட்டி நிறைத்துச் சுகித்துச் சிக்கி
வெகு நாளாய் நினைத்துக் கொ(ண்)டு அத் துக்கத்தை அவத்தைக்கு அடுக்கைப் பெற்று
நிசத்தில் சுழுத்திப் பட்ட அடியேனை இறுக்கிப் பிடித்துக் கட்டி உதைத்துத் துடிக்கப் பற்றி இழுத்துத் துவைத்துச் சுற்றி யம தூதர்
எனக்குக் கணக்குக் கட்டு விரித்துத் தொகைக்கு உட்பட்ட இலக்கப் படிக்குத் தக்க படியே தான்
முறுக்கித் திருப்பிச் சுட்டு மலத்தில் புகட்டித் திட்டி முழுக்கக் கலக்கப் பட்டு அலையாமல்
மொழிக்குத் தரத்துக்கு உற்ற தமிழ்க்குச் சரித்துச் சித்தி முகத்தில் களிப்புப் பெற்று மயில் ஏறி
உறுக்கிச் சினத்துச் சத்தி அயிற்குத் தரத்தைக் கைக்குள் உதிக்கப் பணித்துப் பக்கல் வருவாயே
உனைச் சொல் துதிக்கத் தக்க கருத்தைக் கொடுப்பைச் சித்தி உடைக் கற்குடிக்குள் பத்தர் பெருமாளே.
காமத்தால் மனம் குழைந்து மிகவும் குனிந்து, மலை போன்றிருக்கும் மார்பகங்களுக்காகப் பொருள் எல்லாவற்றையும் கொட்டி, நிரம்ப இன்பத்தை அனுபவித்து, அதில் அகப்பட்டு, பல நாட்களாக அந்த இன்பத்தையே நினைத்துக் கொண்டு அதனால் வரும் துக்கங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, உண்மையில் செயலற்று (உண்மைப் பொருளைக் காணாது) உறங்கிய அடியேனை இறுக்கமாகக் கட்டி உதைத்தும், துடிக்கும்படி பற்றியும், இழுத்தும், மிதித்துத் துவைத்தும், என்னைச் சூழ்ந்த யம தூதர்கள் என்னுடைய கணக்குக் கட்டை விரித்துக் காட்டி, (நான் இவ்வுலகில் செய்த பாபச்செயல்கள் குறிக்கப்பட்ட கணக்கில் உள்ள) எண்ணிக்கைக்குத் தகுந்தபடி, என்னை முறுக்கியும், திருப்பியும் சுட்டும், மலத்தில் புகுவித்தும், வைதும், அந்தக் கலக்கத்தில் முற்றிலுமாக அகப்பட்டு நான் அலைபடாமல், எனது மொழியையும், மேன்மை உள்ள தமிழையும் அங்கீகரித்து, வீடு பேற்றைத் தரும் திருமுகத்தில் மகிழ்ச்சியுடன், மயிலின் மீது ஏறி, தண்டிக்கும் கோபம் வாய்ந்த சக்தி வேலை, தகுதியுடன் திருக்கரத்தில் தோன்ற எடுத்து என் பக்கத்தில் வருவாயாக. உன்னைச் சொல் கொண்டு துதிப்பதற்குத் தகுந்த கருத்தை கொடுத்தருள்வாயாக. (அஷ்டமா) சித்திகளும் பொருந்தியுள்ள திருக்கற்குடிக்குள் உள்ள பக்தர்களின் பெருமாளே.
நெறித்துப் பொருப்புக்கு ஒத்த முலைக்குத் தனத்தைக் கொட்டி நிறைத்துச் சுகித்துச் சிக்கி ... காமத்தால் மனம் குழைந்து மிகவும் குனிந்து, மலை போன்றிருக்கும் மார்பகங்களுக்காகப் பொருள் எல்லாவற்றையும் கொட்டி, நிரம்ப இன்பத்தை அனுபவித்து, அதில் அகப்பட்டு, வெகு நாளாய் நினைத்துக் கொ(ண்)டு அத் துக்கத்தை அவத்தைக்கு அடுக்கைப் பெற்று ... பல நாட்களாக அந்த இன்பத்தையே நினைத்துக் கொண்டு அதனால் வரும் துக்கங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, நிசத்தில் சுழுத்திப் பட்ட அடியேனை இறுக்கிப் பிடித்துக் கட்டி உதைத்துத் துடிக்கப் பற்றி இழுத்துத் துவைத்துச் சுற்றி யம தூதர் ... உண்மையில் செயலற்று (உண்மைப் பொருளைக் காணாது) உறங்கிய அடியேனை இறுக்கமாகக் கட்டி உதைத்தும், துடிக்கும்படி பற்றியும், இழுத்தும், மிதித்துத் துவைத்தும், என்னைச் சூழ்ந்த யம தூதர்கள் எனக்குக் கணக்குக் கட்டு விரித்துத் தொகைக்கு உட்பட்ட இலக்கப் படிக்குத் தக்க படியே தான் ... என்னுடைய கணக்குக் கட்டை விரித்துக் காட்டி, (நான் இவ்வுலகில் செய்த பாபச்செயல்கள் குறிக்கப்பட்ட கணக்கில் உள்ள) எண்ணிக்கைக்குத் தகுந்தபடி, முறுக்கித் திருப்பிச் சுட்டு மலத்தில் புகட்டித் திட்டி முழுக்கக் கலக்கப் பட்டு அலையாமல் ... என்னை முறுக்கியும், திருப்பியும் சுட்டும், மலத்தில் புகுவித்தும், வைதும், அந்தக் கலக்கத்தில் முற்றிலுமாக அகப்பட்டு நான் அலைபடாமல், மொழிக்குத் தரத்துக்கு உற்ற தமிழ்க்குச் சரித்துச் சித்தி முகத்தில் களிப்புப் பெற்று மயில் ஏறி ... எனது மொழியையும், மேன்மை உள்ள தமிழையும் அங்கீகரித்து, வீடு பேற்றைத் தரும் திருமுகத்தில் மகிழ்ச்சியுடன், மயிலின் மீது ஏறி, உறுக்கிச் சினத்துச் சத்தி அயிற்குத் தரத்தைக் கைக்குள் உதிக்கப் பணித்துப் பக்கல் வருவாயே ... தண்டிக்கும் கோபம் வாய்ந்த சக்தி வேலை, தகுதியுடன் திருக்கரத்தில் தோன்ற எடுத்து என் பக்கத்தில் வருவாயாக. உனைச் சொல் துதிக்கத் தக்க கருத்தைக் கொடுப்பைச் சித்தி உடைக் கற்குடிக்குள் பத்தர் பெருமாளே. ... உன்னைச் சொல் கொண்டு துதிப்பதற்குத் தகுந்த கருத்தை கொடுத்தருள்வாயாக. (அஷ்டமா) சித்திகளும் பொருந்தியுள்ள திருக்கற்குடிக்குள் உள்ள பக்தர்களின் பெருமாளே.