பயனற்ற பொல்லாத மொழிகளைச் சொல்லாத மனத்தை உடைய தவ முனிவர்கள் எல்லோரும் இரவும் பகலும் என்னைக் குறித்து இவன் ஆசையும், விளையாடல்களில் இன்ப மகிழ்ச்சியும், ஈயாமைக் குணமும், காம மயக்கமும் இல்லாதவன், இவனும் ஓர் உத்தம புருஷன் எனக் கூறும் சொல் பொருந்தும்படிச் செய்து, இனிய குணத்தனே, தூய்மைக்கு இருப்பிடமானவனே, சந்திரனைத் தரித்தவனே1, கருணை நிறைந்தவனே, சதாசிவமாக இருப்பவனே, மஹேஸ்வரனே, எல்லா உலகங்களிலும் உள்ள இயங்குவன - நிலைத்திருப்பன அனைத்திலும் கலந்திருப்பவனே, பரம் பொருளே, மனம் ஒடுங்கிய சமாதியில் ஒன்றுபடும் நிலையை நான் பெறவேண்டும் என்று நீ நினைத்தருள்வாயாக. சந்திரிகை விரிந்து ஒளி செய்யும் பிறைமதியையும், நில்லாது அலைகின்ற காற்றைப் புசிக்கும் சர்ப்பமாகி தர்மத்தைப் காப்பவனான ஆதிசேஷனையும்2, கங்கைநதியையும் சூடியவரும், அரக்கர் குலத்துக்கு அதிபதியாகிய ராவணனுடைய தோள்கள் வருந்துமாறு3 செய்தவரும், நோயற்றவரும், தாமரையின் மீது அமர்ந்தவருமான சிவனார் அருளிய பாலனே, வில்லையும் அம்பையும் வைத்துப் போர் புரிவதில் வல்லவர்கள் தாம் என்ற மகிழ்ச்சியில் போர் செய்யும் வேடர்களின் அற்புதப் புதல்வியாகிய வள்ளியின் மணவாளனே, மேன்மைமிகு வயலூர், திரிசிராப்பள்ளி, பிரான்மலை என்னும் கொடுங்குன்றம், மற்றும் விராலிமலையிலும்4 வாழ்கின்ற பெருமாளே.