அன்பாக வந்து உன்றாள் பணிந்து ஐம்பூத மொன்ற ...... நினையாமல் அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க ளம்போரு கங்கள் ...... முலைதானும் கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடு கின்ற ...... குழலாரைக் கொண்டே நினைந்து மன்பேது மண்டி குன்றா மலைந்து ...... அலைவேனோ மன்றாடி தந்த மைந்தா மிகுந்த வம்பார் கடம்பை ...... யணிவோனே வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த ...... வடிவேலா சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும் செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.
அன்பாக வந்து உன்தாள் பணிந்து
ஐம்பூதம் ஒன்ற நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்கள்
அம்போருகங்கள் முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடுகின்ற குழலாரைக்
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை அணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு வரவேணும்
செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த
செங்கோடு அமர்ந்த பெருமாளே.
அன்புடன் வந்து உன் பாதங்களைப் பணிந்து, பஞ்ச பூதங்களுடனும் ஒருவழிப்பட்டு உன்னை நினையாமல், அன்பு அதிகமாய்ப் போய், விஷம் நிறைந்த கண்களும், தாமரை மொட்டுப் போன்ற மார்பகங்களும், பூங்கொத்துக்கள் நிறைந்து வண்டுகள் விளையாடி மகிழ்கின்ற கூந்தலும் உடைய பொது மகளிரை மனதில் நினைத்தே, மிக்க அறியாமை பெருகி மனம் குன்றி ஒருவழிப்படாது அலைந்து திரிவேனோ? சபையில் நடனமாடும் சிவபிரான் தந்த குமரனே, மிக்க வாசனை நிறைந்த கடப்பமாலையை அணிபவனே, வந்து பணிந்து நின்ற அடியார்களின் பிறப்புக்களை அடியோடு தொலைக்கும் கூரிய வேலை உடையவனே, பல இடங்களுக்கும் சென்று கந்தா என அழைக்கும்போது செவ்விய சேவலை ஏந்தி என்முன் வரவேண்டும். செந்நெல் பயிரும் தாமரையும் ஒன்றாக வளரும் திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.
அன்பாக வந்து உன்தாள் பணிந்து ... அன்புடன் வந்து உன் பாதங்களைப் பணிந்து, ஐம்பூதம் ஒன்ற நினையாமல் ... பஞ்ச பூதங்களுடனும் ஒருவழிப்பட்டு உன்னை நினையாமல், அன்பால் மிகுந்து ... அன்பு அதிகமாய்ப் போய், நஞ்சாரு கண்கள் ... விஷம் நிறைந்த கண்களும், அம்போருகங்கள் முலைதானும் ... தாமரை மொட்டுப் போன்ற மார்பகங்களும், கொந்தே மிகுந்து ... பூங்கொத்துக்கள் நிறைந்து வண்டாடி நின்று கொண்டாடுகின்ற ... வண்டுகள் விளையாடி மகிழ்கின்ற குழலாரைக் கொண்டே நினைந்து ... கூந்தலும் உடைய பொது மகளிரை மனதில் நினைத்தே, மன்பேது மண்டி ... மிக்க அறியாமை பெருகி குன்றா மலைந்து அலைவேனோ ... மனம் குன்றி ஒருவழிப்படாது அலைந்து திரிவேனோ? மன்றாடி தந்த மைந்தா ... சபையில் நடனமாடும் சிவபிரான் தந்த குமரனே, மிகுந்த வம்பார் கடம்பை அணிவோனே ... மிக்க வாசனை நிறைந்த கடப்பமாலையை அணிபவனே, வந்தே பணிந்து நின்றார் பவங்கள் ... வந்து பணிந்து நின்ற அடியார்களின் பிறப்புக்களை வம்பே தொலைந்த வடிவேலா ... அடியோடு தொலைக்கும் கூரிய வேலை உடையவனே, சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ ... பல இடங்களுக்கும் சென்று கந்தா என அழைக்கும்போது செஞ்சேவல் கொண்டு வரவேணும் ... செவ்விய சேவலை ஏந்தி என்முன் வரவேண்டும். செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த ... செந்நெல் பயிரும் தாமரையும் ஒன்றாக வளரும் செங்கோடு அமர்ந்த பெருமாளே. ... திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.