குதலை மொழியினார் நிதிக் கொள்வார் அணி முலையை விலை செய்வார்
தமக்கு மா மயல் கொடிது கொடிது அதால் வருத்தமாய் உறு துயராலே
மதலை மறுகி வாலிபத்திலே வெகு பதகர் கொடியவாள் இடத்திலே
மிக வறுமை புகல்வதே எனக்குமோ இனி முடியாதே
முதல வரி வி(ல்)லோடு எதிர்த்த சூர் உடல் மடிய அயிலையே விடுத்தவா
கரு முகிலை அனையதா நிறத்த மால் திரு மருகோனே
கதலி கமுகு சூழ் வயற்குளே அளி இசையை முரல
மா அறத்தில் மீறிய கழுகு மலை மகா நகர்க்குள் மேவிய பெருமாளே.
மழலைச் சொல் போலப் பேசுபவர்கள், பிறரது பொருளைப் பறிப்பவர்கள், அழகிய மார்பகத்தை விலைக்கு விற்பவர்கள் (ஆகிய விலைமாதர்கள்) மீது உள்ள பெரிய மயக்கம் மிகவும் பொல்லாதது. அந்த மயக்கத்தால் ஏற்படும் வருத்தம் தரும் துன்பத்தால் சிறு பிள்ளையாகிய நான் கலக்கம் உற்று, இளமையில் மிக பாபிகளாகிய கொடியவர்களிடம் சென்று, என்னுடைய தரித்திர நிலையைக் கூறி நிற்பது என்னால் இனி முடியாது. முதல்வனே, கட்டப்பட்ட வில்லோடு எதிர்த்த சூரனுடைய உடல் அழிய வேலைச் செலுத்தியவனே. கரிய மேகத்தை ஒத்த நிறம் உடைய திருமாலின் திரு மருகனே, வாழை, கமுகு இவைகள் சூழ்ந்துள்ள வயலில் வண்டுகள் இசைகளை எழுப்ப, பெரிய தருமச் செயல்களில் மேம்பட்டு விளங்கும் கழுகு மலை என்ற சிறந்த நகரில் விரும்பி எழுந்தருளி இருக்கும் பெருமாளே.
குதலை மொழியினார் நிதிக் கொள்வார் அணி முலையை விலை செய்வார் ... மழலைச் சொல் போலப் பேசுபவர்கள், பிறரது பொருளைப் பறிப்பவர்கள், அழகிய மார்பகத்தை விலைக்கு விற்பவர்கள் (ஆகிய விலைமாதர்கள்) தமக்கு மா மயல் கொடிது கொடிது அதால் வருத்தமாய் உறு துயராலே ... மீது உள்ள பெரிய மயக்கம் மிகவும் பொல்லாதது. அந்த மயக்கத்தால் ஏற்படும் வருத்தம் தரும் துன்பத்தால் மதலை மறுகி வாலிபத்திலே வெகு பதகர் கொடியவாள் இடத்திலே ... சிறு பிள்ளையாகிய நான் கலக்கம் உற்று, இளமையில் மிக பாபிகளாகிய கொடியவர்களிடம் சென்று, மிக வறுமை புகல்வதே எனக்குமோ இனி முடியாதே ... என்னுடைய தரித்திர நிலையைக் கூறி நிற்பது என்னால் இனி முடியாது. முதல வரி வி(ல்)லோடு எதிர்த்த சூர் உடல் மடிய அயிலையே விடுத்தவா ... முதல்வனே, கட்டப்பட்ட வில்லோடு எதிர்த்த சூரனுடைய உடல் அழிய வேலைச் செலுத்தியவனே. கரு முகிலை அனையதா நிறத்த மால் திரு மருகோனே ... கரிய மேகத்தை ஒத்த நிறம் உடைய திருமாலின் திரு மருகனே, கதலி கமுகு சூழ் வயற்குளே அளி இசையை முரல ... வாழை, கமுகு இவைகள் சூழ்ந்துள்ள வயலில் வண்டுகள் இசைகளை எழுப்ப, மா அறத்தில் மீறிய கழுகு மலை மகா நகர்க்குள் மேவிய பெருமாளே. ... பெரிய தருமச் செயல்களில் மேம்பட்டு விளங்கும் கழுகு மலை என்ற சிறந்த நகரில் விரும்பி எழுந்தருளி இருக்கும் பெருமாளே.