திருமாலும் பிரமனும் அடி முடி காணமுடியாதவர், நெருப்பு திரிபுரத்திலும் புகுமாறு சிரித்தே எரித்த தலைவர், விளங்கும் சடை மீது கங்கை என்னும் ஒப்பற்ற மாதினைக் கொண்டு அவளது தலைவராகவும் இருப்பவர், சீறிவந்த நெருப்பையும் மழு ஆயுதத்தையும் நேராகக் கையில் ஏந்திய தலைவர், மலைமகளாம் பார்வதியை ஒரு பாகத்தில் உடையவர், மன்மதனின் உடல் சாம்பலாக விழ நெற்றிக் கண்னை ஏவிய தலைவர், (அத்தகைய சிவபிரான்) மனமகிழும் குமரனே, என்று கூறி உன் இரண்டு தாளாகிய மலர்ப் பாதங்களை வணங்கும்படி அருள் தருவாயாக. அரிய கிரெளஞ்சமலை இரு பிளவாகும்படிச் செய்து, ஒப்பற்ற மயில் மீது ஏறி உலகை வலமாக வந்தவனே, தேவர்களின் பகைவராம் பெரும் அசுரர்களின் தலைகள் மீது வேலை வேகமாய் எறிந்தவனே, வரிசையாக ஒப்பற்ற சிறந்த தினைச் செடிகள் வளரும் காட்டுக்குச் சென்று, ஓர் குறப்பெண் வள்ளியை அணைந்த வேடனே, குன்று கண்ட இடங்களில் குதூகலிப்பவனே, மனம் பொருந்தி நல்ல வடுகூர் என்ற தலத்தில் வருகிற தவமுனிவர்களின் பெருமாளே.