மூல முண்டகம் அனுபூதி மந்திர பராபரம் சுடர்கள் மூணு மண்டல (ஆ)தார சந்தி முகம் ஆறும் இந்த்ர தருவும் தளாமேல்
மூதுர அம்பலவர் பீடம் அந்தமும் இலாத பந்த ஒளி ஆயிரம் கிரண மூணும் இந்து ஒளிர் சோதி விண் படிக விந்து நாதம் ஓலம் என்று பல தாள சந்தம் இடு சேவை கண்டு அமுதை வாரி உண்டு
உலகு ஈர் ஏழு கண்டு விளையாடி இந்து கதிர் அங்கி சூலம் ஓடும் அந்த கலிகால் ஒடுங்க நடு தூணில் தங்க வரி ஞான வண் கயிறு மீது அணைந்து சத கோடி சந்திர ஒளி சந்தியாதோ
சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி பங்கி சிவகாமி சுந்தரி உகந்த சேயே
சூர சங்கர குமார இந்திர சகாய அன்பர் உபகாரி சுந்தர குகா எனும் சுருதி ஓலம் ஒன்ற நடனம் கொள் வேலா
சீல வெண் பொடி இடாத வெம் சமணர் மாள வெம் கழுவில் ஏறும் என்று பொடி நீறு இடும் கமல பாணி சந்திர முக கந்த வேளே
தேவ ரம்பை அமுது ஈண மங்கை தரு மான் அணைந்த புய தீர சங்கர தியாகர் வந்து உறை ந(ல்)லூர் அமர்ந்து வளர் தம்பிரானே.
மூலாதார கமலத்தில் உள்ள அனுபவ ஞானத்தைத் தரும் மந்திரம் மேல் நிலையில் உள்ள (சூரிய, சந்திர, அக்கினி எனப்படும்) முச்சுடர்கள், மூன்று மண்டலங்கள், ஆதாரங்களாக சந்திக்கப்படும் ஆறு ஆதாரங்கள், கற்பக விருக்ஷம் (போல விரும்பிய எல்லாம் அளிக்க வல்ல மேலைச் சிவ வீதி இவைகளை எல்லாம்) தாண்டி அவைகளின் மேல் சென்று, பழைய (எல்லா தத்துவங்களும் ஒடுங்கும் பரவொளிப்) பீடமாகிய லலாட மண்டபத்தில், முடிவில்லாத திரண்ட ஒளியாய் விளங்கும், ஆயிரம் கிரணங்கள் வீசும் மூன்றாம் பிறை நிலவின் வடிவைக் கொண்ட ஆக்ஞை ஆதாரத்தில், சந்திர ஒளியுடன் கூடி மேல் நிலையில் பளிங்கு போல் விளங்கும் விந்து சம்பந்த (சிவசக்தி ஐக்கிய) நாத ஒலி அபயம் என்று அழைத்தல் போன்ற ஒலியுடன் பல வகையான தாளங்கள் சந்தங்கள் கலக்கும் நடன தரிசனத்தைக் கண்டு தேவாம்ருத கடலைப் பருகி, பதினாலு உலகங்களையும் அங்கே விளக்கமுறத் தரிசித்து அனுபவித்து, சந்திரன், சூரியன், அக்கினி (இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்னும்) மூன்று நாடிகளின் வழியே சூலம் போல ஓடுகின்ற அந்தப் பிராண வாயு ஒடுங்க, (வீணா தண்டம் என்னும்) முதுகு எலும்பில் தங்கி, ஞான வளப்பம் பொருந்திய சுழு முனைக் கயிற்றின் வழியே மேலே தழுவி, நூறு கோடி சந்திரர்களின் ஒளியை (சிவப் பேரொளியைச்) சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ? சூலாயுதத்தை ஏந்தியவள், பராகாச வடிவை உடையவள், கபாலம் ஏந்திய சங்கரி, திரிபுரம் எரித்தவள், திரி புரம் எரித்த போது அம்பாக இருந்த வைஷ்ணவி, என்றும் இளையவள், எட்டு குணத்தினரான சிவபெருமான் பாகத்தில் உறைபவள் ஆகிய சிவகாம சுந்தரி மகிழும் குழந்தையே, சூரனை அழித்த குமார வேளே, இந்திரனுக்கு உதவி செய்தவனே, அடியார்களுக்கு உபகாரம் செய்தவனே, அழகனே, குகனே என்றெல்லாம் வேதங்கள் முறையிட்டு உரைக்க நடனம் செய்த வேலனே, பரிசுத்தமான திருவெண்ணீற்றை அணியாதவர்களும் கொடியவர்களும் ஆகிய சமணர்கள் இறக்கும்படி கொடிய கழுமரத்தில் ஏறுங்கள் என்று (திருஞானசம்பந்தராக வந்து) திருவிளையாடல் இயற்றி திருநீற்றை (கூன் பாண்டியனுக்கும், அடியார்களுக்கும்) அளித்த தாமரைக் கையனே, சந்திரன் போன்ற (ஆறு) முகமுடைய கந்த வேளே, தேவ லோகத்து ரம்பை போன்றவளும் பாற் கடல் அமுதத்துடன் தோன்றியவளும் ஆகிய லக்ஷ்மிதேவி அளித்த மானாகிய வள்ளி (அமுதவல்லி) அணைந்த திருப் புயத்தை உடையவனே, தீரனே, சங்கரத் தியாகர் என்னும் நாமம் உடைய சிவ பெருமான் வந்து எழுந்தருளிய திரு நல்லூர் என்னும் தலத்தில் பொருந்தி வீற்றிருக்கின்ற தம்பிரானே.
மூல முண்டகம் அனுபூதி மந்திர பராபரம் சுடர்கள் மூணு மண்டல (ஆ)தார சந்தி முகம் ஆறும் இந்த்ர தருவும் தளாமேல் ... மூலாதார கமலத்தில் உள்ள அனுபவ ஞானத்தைத் தரும் மந்திரம் மேல் நிலையில் உள்ள (சூரிய, சந்திர, அக்கினி எனப்படும்) முச்சுடர்கள், மூன்று மண்டலங்கள், ஆதாரங்களாக சந்திக்கப்படும் ஆறு ஆதாரங்கள், கற்பக விருக்ஷம் (போல விரும்பிய எல்லாம் அளிக்க வல்ல மேலைச் சிவ வீதி இவைகளை எல்லாம்) தாண்டி அவைகளின் மேல் சென்று, மூதுர அம்பலவர் பீடம் அந்தமும் இலாத பந்த ஒளி ஆயிரம் கிரண மூணும் இந்து ஒளிர் சோதி விண் படிக விந்து நாதம் ஓலம் என்று பல தாள சந்தம் இடு சேவை கண்டு அமுதை வாரி உண்டு ... பழைய (எல்லா தத்துவங்களும் ஒடுங்கும் பரவொளிப்) பீடமாகிய லலாட மண்டபத்தில், முடிவில்லாத திரண்ட ஒளியாய் விளங்கும், ஆயிரம் கிரணங்கள் வீசும் மூன்றாம் பிறை நிலவின் வடிவைக் கொண்ட ஆக்ஞை ஆதாரத்தில், சந்திர ஒளியுடன் கூடி மேல் நிலையில் பளிங்கு போல் விளங்கும் விந்து சம்பந்த (சிவசக்தி ஐக்கிய) நாத ஒலி அபயம் என்று அழைத்தல் போன்ற ஒலியுடன் பல வகையான தாளங்கள் சந்தங்கள் கலக்கும் நடன தரிசனத்தைக் கண்டு தேவாம்ருத கடலைப் பருகி, உலகு ஈர் ஏழு கண்டு விளையாடி இந்து கதிர் அங்கி சூலம் ஓடும் அந்த கலிகால் ஒடுங்க நடு தூணில் தங்க வரி ஞான வண் கயிறு மீது அணைந்து சத கோடி சந்திர ஒளி சந்தியாதோ ... பதினாலு உலகங்களையும் அங்கே விளக்கமுறத் தரிசித்து அனுபவித்து, சந்திரன், சூரியன், அக்கினி (இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்னும்) மூன்று நாடிகளின் வழியே சூலம் போல ஓடுகின்ற அந்தப் பிராண வாயு ஒடுங்க, (வீணா தண்டம் என்னும்) முதுகு எலும்பில் தங்கி, ஞான வளப்பம் பொருந்திய சுழு முனைக் கயிற்றின் வழியே மேலே தழுவி, நூறு கோடி சந்திரர்களின் ஒளியை (சிவப் பேரொளியைச்) சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ? சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி பங்கி சிவகாமி சுந்தரி உகந்த சேயே ... சூலாயுதத்தை ஏந்தியவள், பராகாச வடிவை உடையவள், கபாலம் ஏந்திய சங்கரி, திரிபுரம் எரித்தவள், திரி புரம் எரித்த போது அம்பாக இருந்த வைஷ்ணவி, என்றும் இளையவள், எட்டு குணத்தினரான சிவபெருமான் பாகத்தில் உறைபவள் ஆகிய சிவகாம சுந்தரி மகிழும் குழந்தையே, சூர சங்கர குமார இந்திர சகாய அன்பர் உபகாரி சுந்தர குகா எனும் சுருதி ஓலம் ஒன்ற நடனம் கொள் வேலா ... சூரனை அழித்த குமார வேளே, இந்திரனுக்கு உதவி செய்தவனே, அடியார்களுக்கு உபகாரம் செய்தவனே, அழகனே, குகனே என்றெல்லாம் வேதங்கள் முறையிட்டு உரைக்க நடனம் செய்த வேலனே, சீல வெண் பொடி இடாத வெம் சமணர் மாள வெம் கழுவில் ஏறும் என்று பொடி நீறு இடும் கமல பாணி சந்திர முக கந்த வேளே ... பரிசுத்தமான திருவெண்ணீற்றை அணியாதவர்களும் கொடியவர்களும் ஆகிய சமணர்கள் இறக்கும்படி கொடிய கழுமரத்தில் ஏறுங்கள் என்று (திருஞானசம்பந்தராக வந்து) திருவிளையாடல் இயற்றி திருநீற்றை (கூன் பாண்டியனுக்கும், அடியார்களுக்கும்) அளித்த தாமரைக் கையனே, சந்திரன் போன்ற (ஆறு) முகமுடைய கந்த வேளே, தேவ ரம்பை அமுது ஈண மங்கை தரு மான் அணைந்த புய தீர சங்கர தியாகர் வந்து உறை ந(ல்)லூர் அமர்ந்து வளர் தம்பிரானே. ... தேவ லோகத்து ரம்பை போன்றவளும் பாற் கடல் அமுதத்துடன் தோன்றியவளும் ஆகிய லக்ஷ்மிதேவி அளித்த மானாகிய வள்ளி (அமுதவல்லி) அணைந்த திருப் புயத்தை உடையவனே, தீரனே, சங்கரத் தியாகர் என்னும் நாமம் உடைய சிவ பெருமான் வந்து எழுந்தருளிய திரு நல்லூர் என்னும் தலத்தில் பொருந்தி வீற்றிருக்கின்ற தம்பிரானே.