அருக்கி மெத்தெனச் சிரித்து மைக் க(ண்)ணிட்டு அழைத்து இதப்படச் சில கூறி
அரைப் பணம் அத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து உருக்கி மட்டு அறப் பொருள் பறிப்பவர்க்கு
உளக் கருத்தினில் ப்ரமை கூராது உரைத்து செய்ப் பதித் தலத்தினைத் துதித்து உனைத் திருப்புகழ் பகர்வேனோ
தருக்க மற்கடப் படைப் பலத்தினில் தடப் பொருப்பு எடுத்து அணையாகச் சமுத்திரத்தினைக் குறுக்க அடைத்து
அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே போர் செருக்கு விக்ரமச் சரத்தை விட்டு உறச் செயித்த உத்தமத் திரு மாமன் திருத் தகப்பன் மெச்சு ஒருத்த
முத்தமிழ் திருப் படிக்கரைப் பெருமாளே.
அருமை பாராட்டி அமைதியாகச் சிரித்து, மை பூசிய கண் கொண்டு அழைத்து, இன்பம் பெருகும்படி சில வார்த்தைகளைப் பேசி, இடுப்பினில் உள்ள பெண்குறிக்காக பணம் பெறும்பொருட்டு அதனை விற்பனை செய்து, கட்டியுள்ள பட்டாடையை அவிழ்த்து, அணைத்து, வாயிதழ் ஊறலைத் தந்து, காமலீலையில் உள்ளத்தை உருக வைத்து, குறைவிலா வகையில் பொருள் பறிக்கும் பொது மகளிரிடம் எனது உள்ளக் கருத்தில் மயக்கம் மிக்கு எழாது, செய்ப்பதி எனப்படும் வயலூர் என்ற தலத்தைப் போற்றி உரைத்து, உன்னைத் துதித்து, திருப்புகழ்ப் பாடல்களைச் சொல்வேனோ? பெருமை உள்ள குரங்குப் படையின் பலத்தினால் பெரிய மலைகளை எடுத்துப் போட்டு அணை கட்டி, கடலைக் குறுக்கே அடைத்து, (அணைக்கு) அப்பால் இருந்த அரக்கர்கள் பொடியாக, சண்டை மிக்கெழ, வீரம் உள்ள அம்பைச் செலுத்தி வீழ்த்தி வெற்றி கொண்ட மேலான அழகிய (ராமனாகிய) திருமாலும், சிறந்த தந்தையாகிய சிவபெருமானும் மெச்சுகின்ற ஒப்பற்றவனே. முத்தமிழ் வல்லானே, திருப்படிக்கரையில் வீற்றிருக்கும் பெருமாளே.
அருக்கி மெத்தெனச் சிரித்து மைக் க(ண்)ணிட்டு அழைத்து இதப்படச் சில கூறி ... அருமை பாராட்டி அமைதியாகச் சிரித்து, மை பூசிய கண் கொண்டு அழைத்து, இன்பம் பெருகும்படி சில வார்த்தைகளைப் பேசி, அரைப் பணம் அத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து உருக்கி மட்டு அறப் பொருள் பறிப்பவர்க்கு ... இடுப்பினில் உள்ள பெண்குறிக்காக பணம் பெறும்பொருட்டு அதனை விற்பனை செய்து, கட்டியுள்ள பட்டாடையை அவிழ்த்து, அணைத்து, வாயிதழ் ஊறலைத் தந்து, காமலீலையில் உள்ளத்தை உருக வைத்து, குறைவிலா வகையில் பொருள் பறிக்கும் பொது மகளிரிடம் உளக் கருத்தினில் ப்ரமை கூராது உரைத்து செய்ப் பதித் தலத்தினைத் துதித்து உனைத் திருப்புகழ் பகர்வேனோ ... எனது உள்ளக் கருத்தில் மயக்கம் மிக்கு எழாது, செய்ப்பதி எனப்படும் வயலூர் என்ற தலத்தைப் போற்றி உரைத்து, உன்னைத் துதித்து, திருப்புகழ்ப் பாடல்களைச் சொல்வேனோ? தருக்க மற்கடப் படைப் பலத்தினில் தடப் பொருப்பு எடுத்து அணையாகச் சமுத்திரத்தினைக் குறுக்க அடைத்து ... பெருமை உள்ள குரங்குப் படையின் பலத்தினால் பெரிய மலைகளை எடுத்துப் போட்டு அணை கட்டி, கடலைக் குறுக்கே அடைத்து, அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே போர் செருக்கு விக்ரமச் சரத்தை விட்டு உறச் செயித்த உத்தமத் திரு மாமன் திருத் தகப்பன் மெச்சு ஒருத்த ... (அணைக்கு) அப்பால் இருந்த அரக்கர்கள் பொடியாக, சண்டை மிக்கெழ, வீரம் உள்ள அம்பைச் செலுத்தி வீழ்த்தி வெற்றி கொண்ட மேலான அழகிய (ராமனாகிய) திருமாலும், சிறந்த தந்தையாகிய சிவபெருமானும் மெச்சுகின்ற ஒப்பற்றவனே. முத்தமிழ் திருப் படிக்கரைப் பெருமாளே. ... முத்தமிழ் வல்லானே, திருப்படிக்கரையில் வீற்றிருக்கும் பெருமாளே.