மைக் குழல் ஒத்தவை நீலோ மாலோ
அக் கண் இணைக்கு இணை சேலோ வேலோ
மற்று அவர் சொல் தெளி பாலோ பாகோ வடி தேனோ
வத்திரம் மெய்ச் சசி தானோ நாணா குத்து முலைக்கு இள நீரோ மேரோ
இடைக்கு இணை வைப்பது நூலோ மேலோ என மாதர் தக்க உறுப்பினுள் மாலே மேலாய் லச்சை அற புணர் வாது ஏகாதே
சைச் சை எனத் திரி நாயேன் ஓயாது அலையாதே தற்பொறி வைத்து அருள் பாராய் தாராய்
தற்சமையத்த கலா வேல் நாதா தத்து மயில் பரி மீதே நீ தான் வருவாயே
முக்க(ண்)ணர் மெச்சிய பாலா சீலா சித்தசன் மைத்துன வேளே தோள் ஆர் மொய்த்த மணத்த துழாயோன் மாயோன் மருகனே
முத்தமிழ் வித்வ விநோதா கீதா மற்றவர் ஒப்பு இல ரூபா தீபா முத்தி கொடுத்து அடியார் மேல் மா மால் முருகோனே
இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய்ப் பழநிப்பதி ஊரா வாரூர் மிக்க விடைக்கழி வேளூர் தார் ஊர் வயலூரா
எச் சுருதிக்கு(ள்)ளும் நீயே தாயே சுத்த விறல் திறல் வீரா தீரா எட்டிகுடிப் பதி வேலா மேலோர் பெருமாளே.
கரிய கூந்தலுக்கு ஒப்பானவை கருங் குவளையோ, கருமையோ? அந்தக் கண்கள் இரண்டுக்கும் ஒப்பானவை சேல் மீன்களோ, வேலோ? பின்னர் அந்தப் பெண்களின் சொல்லுக்கு இணை தெளிந்த பாலோ, வெல்லமோ, வடித்த தேனோ? முகம் உண்மையாகவே சந்திரன் தானோ? வெட்குதல் இல்லாமல் எழுந்த குத்தும் மார்பகத்துக்கு ஒப்பானவை இளநீரோ, மேரு மலையோ? இடைக்கு இணையாகக் கூறப்படுவது (நுண்ணியதான) நூலோ, அதை விட மேலானது ஒன்றோ என்றெல்லாம் மாதர்களுடைய மனத்தைக் கவர வல்ல அவயவங்களுள் காம மயக்கம் மிக்கவனாய், கூச்சம் இல்லாமல் சேர்கின்ற போட்டிச் சண்டையில் நுழையாமல், சீச் சீ என்று (பிறர் சொல்லும்படி) திரிகின்ற நாயேன் எப்போதும் அலையாமல், உனது முத்திரையை (வேல்-மயில் அடையாளத்தை) என் மேல் பொறித்து வைத்து கண் பார்த்து அருளுக. சிவசமயத்தனே, ஒளி வேல் ஏந்தும் நாதனே, (குதிரை போலத்) தாவிச் செல்லும் மயில் வாகனத்தின் மேல் நீதான் வந்து அருள வேண்டும். மூன்று கண்களை உடைய சிவபெருமான் மெச்சிப் புகழும் பாலனே, தூயவனே, மன்மதனின் மைத்துனனான செவ்வேளே, தோள்கள் நிரம்ப மொய்த்துள்ள, நறுமணம் உள்ள, துளசி மாலை அணிந்தவனாகிய திருமாலின் மருகனே, முத்தமிழ்ப் புலமை வாய்ந்த விநோதனே, இசை ஞானியே, பிறர் எவரும் உனக்கு ஒப்பில்லாத உருவத்தனே, (ஞான) ஒளி விளக்கே, முக்தியைத் தந்தருளி அடியார்கள் மீது மிக்க ஆசை கொள்ளும் முருகனே, கரும்பு வரிசையாக உள்ள விராலியூர், சேல் மீன்கள் நீந்தி ஊடுருவும் வயல்கள் உள்ள பழனி ஊரனே, திருவாரூர், சிறப்பு வாய்ந்த திருவிடைக்கழி, புள்ளிருக்கும் வேளூர் (ஆகிய வைதீஸ்வரன் கோவில்), பூ அரும்புகள் அடர்ந்து நிறைந்துள்ள வயலூர் என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே, எத்தகைய வேதத்துக்குள்ளும் நீயே தாய் போல் மூலப் பொருளாய் நிற்கின்றவனே, பரிசுத்தமான வலிமையும், திறமையும் வாய்ந்த வீரனே, தீரனே, எட்டிகுடியில் வீற்றிருக்கும் வேலனே, தேவர்களின் பெருமாளே.
மைக் குழல் ஒத்தவை நீலோ மாலோ ... கரிய கூந்தலுக்கு ஒப்பானவை கருங் குவளையோ, கருமையோ? அக் கண் இணைக்கு இணை சேலோ வேலோ ... அந்தக் கண்கள் இரண்டுக்கும் ஒப்பானவை சேல் மீன்களோ, வேலோ? மற்று அவர் சொல் தெளி பாலோ பாகோ வடி தேனோ ... பின்னர் அந்தப் பெண்களின் சொல்லுக்கு இணை தெளிந்த பாலோ, வெல்லமோ, வடித்த தேனோ? வத்திரம் மெய்ச் சசி தானோ நாணா குத்து முலைக்கு இள நீரோ மேரோ ... முகம் உண்மையாகவே சந்திரன் தானோ? வெட்குதல் இல்லாமல் எழுந்த குத்தும் மார்பகத்துக்கு ஒப்பானவை இளநீரோ, மேரு மலையோ? இடைக்கு இணை வைப்பது நூலோ மேலோ என மாதர் தக்க உறுப்பினுள் மாலே மேலாய் லச்சை அற புணர் வாது ஏகாதே ... இடைக்கு இணையாகக் கூறப்படுவது (நுண்ணியதான) நூலோ, அதை விட மேலானது ஒன்றோ என்றெல்லாம் மாதர்களுடைய மனத்தைக் கவர வல்ல அவயவங்களுள் காம மயக்கம் மிக்கவனாய், கூச்சம் இல்லாமல் சேர்கின்ற போட்டிச் சண்டையில் நுழையாமல், சைச் சை எனத் திரி நாயேன் ஓயாது அலையாதே தற்பொறி வைத்து அருள் பாராய் தாராய் ... சீச் சீ என்று (பிறர் சொல்லும்படி) திரிகின்ற நாயேன் எப்போதும் அலையாமல், உனது முத்திரையை (வேல்-மயில் அடையாளத்தை) என் மேல் பொறித்து வைத்து கண் பார்த்து அருளுக. தற்சமையத்த கலா வேல் நாதா தத்து மயில் பரி மீதே நீ தான் வருவாயே ... சிவசமயத்தனே, ஒளி வேல் ஏந்தும் நாதனே, (குதிரை போலத்) தாவிச் செல்லும் மயில் வாகனத்தின் மேல் நீதான் வந்து அருள வேண்டும். முக்க(ண்)ணர் மெச்சிய பாலா சீலா சித்தசன் மைத்துன வேளே தோள் ஆர் மொய்த்த மணத்த துழாயோன் மாயோன் மருகனே ... மூன்று கண்களை உடைய சிவபெருமான் மெச்சிப் புகழும் பாலனே, தூயவனே, மன்மதனின் மைத்துனனான செவ்வேளே, தோள்கள் நிரம்ப மொய்த்துள்ள, நறுமணம் உள்ள, துளசி மாலை அணிந்தவனாகிய திருமாலின் மருகனே, முத்தமிழ் வித்வ விநோதா கீதா மற்றவர் ஒப்பு இல ரூபா தீபா முத்தி கொடுத்து அடியார் மேல் மா மால் முருகோனே ... முத்தமிழ்ப் புலமை வாய்ந்த விநோதனே, இசை ஞானியே, பிறர் எவரும் உனக்கு ஒப்பில்லாத உருவத்தனே, (ஞான) ஒளி விளக்கே, முக்தியைத் தந்தருளி அடியார்கள் மீது மிக்க ஆசை கொள்ளும் முருகனே, இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய்ப் பழநிப்பதி ஊரா வாரூர் மிக்க விடைக்கழி வேளூர் தார் ஊர் வயலூரா ... கரும்பு வரிசையாக உள்ள விராலியூர், சேல் மீன்கள் நீந்தி ஊடுருவும் வயல்கள் உள்ள பழனி ஊரனே, திருவாரூர், சிறப்பு வாய்ந்த திருவிடைக்கழி, புள்ளிருக்கும் வேளூர் (ஆகிய வைதீஸ்வரன் கோவில்), பூ அரும்புகள் அடர்ந்து நிறைந்துள்ள வயலூர் என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே, எச் சுருதிக்கு(ள்)ளும் நீயே தாயே சுத்த விறல் திறல் வீரா தீரா எட்டிகுடிப் பதி வேலா மேலோர் பெருமாளே. ... எத்தகைய வேதத்துக்குள்ளும் நீயே தாய் போல் மூலப் பொருளாய் நிற்கின்றவனே, பரிசுத்தமான வலிமையும், திறமையும் வாய்ந்த வீரனே, தீரனே, எட்டிகுடியில் வீற்றிருக்கும் வேலனே, தேவர்களின் பெருமாளே.